தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முதுபெரும் தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு இலங்கையின் தேசிய அரசியலில் பாரிய வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்படும் அனுதாபங்கள் மற்றும் அஞ்சலிகள் உணர்த்தி நிற்கின்றன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்று கொடுப்பதையே தனது ஒரே இலக்காகக் கொண்டு அரசியல் செய்த அவரை எந்தவொரு சக்தியாலும் விலைபேச முடியவில்லை. இறுதி வரை மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்த அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை மரணிப்பதற்கு முன்னரே பெற்றுக் கொடுப்பேன் என்ற உறுதியோடுதான் அரசியல் பணியை முன்னெடுத்து வந்தார். எனினும் அவரது முதுமை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதேபோன்று தென்னிலங்கையின் அரசியல் மாற்றங்களும் சமீபத்திய நிகழ்வுகளும் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களை பின்தள்ளியிருந்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையே தோற்றம் பெற்றது. அவர் பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அவரும் தைப்பொங்கலுக்கு முன் தீர்வு, சித்திரைப் புத்தாண்டுக்கு முன் தீர்வு என அறிக்கைகளை விட்டாரே தவிர உருப்படியான எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. தற்போது சம்பந்தன் உயிருடன் இருக்கும் காலத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனமை கவலைக்குரியது என ஜனாதிபதி தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது இனி எட்டாக்கனியே என்பதையே சம்பந்தனின் மறைவு எடுத்துக் கூறுவதாகவுள்ளது.
தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்தவரை சம்பந்தன் மிகவும் நிதானமானதொரு பாத்திரத்தை வகித்தார் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவிருந்தார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிந்த அவர் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின்றி அதனை சாத்தியமாக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு அவர் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது இத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என அவர் அடித்துக் கூறினார்.
இலங்கையில் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். இதற்காக அவர் பல தடவைகள் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தார்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்குமிடையில் உறவுப் பாலமாக விளங்கிய அன்னாரின் மறைவு இரு சமூகத்திற்கும் பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
சம்பந்தன் ஐயாவின் வெற்றிடம் எந்தவகையிலும் நிரப்பப்பட முடியாதது. ஆனால் அவரது சிந்தனைகள், அவரது எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் அவருக்குப் பின் வரும் தமிழ் தலைமைகளால் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். அவர் காட்டிய மிதவாத அரசியல்பாதை கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தாது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என அவர் காட்டிய அரசியல்பாதையில் பயணிக்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அவர் விரும்பியது போன்றே எதிர்காலத்திலும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்ட அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.- Vidivelli