இந்தோனேஷியாவுக்கு மீண்டும் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் கரையோரத்தை அண்டியுள்ள மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் பாரிய அலைகள் மேலெழுவதால், மீண்டும் சுனாமி தாக்கலாமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கரையோரப் பிரதேசங்களிலிருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவிற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் குமுறிவரும் அனக் கிரகட்டு எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் சுமாத்ரா மற்றும் ஜாவா தீவை தாக்கியத்தில் சுமார் 429 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 128 பேர் காணாமல் போயுள்ளதோடு, 1400 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காணாமல் போனோரை தேடும் பணிகள் நான்காவது நாளாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குறித்த சுனாமி அனர்த்தத்தினால் 16,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli