ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும்
முஜிபுர் ரஹ்மானுக்கு இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பதில்
(எம்.ஆர்.எம்.வசீம்)
சிறுநீரக சத்திர சிகிச்சையின்போது ஆரோக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் நீக்கப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகியும் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த அறிக்கை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இடையிட்டு கேள்வி ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த ஹம்தி என்ற 3வயது சிறுவன் கடந்த வருடம் ஜூலை மாதமளவில் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உள்வாங்கப்பட்டிருந்த போது, சிறுவனது ஆரோக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதால் குறித்த சிறுவன் உயிரிழந்தான். சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரும் மிக விரைவாக நாட்டை விட்டு சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதளவில் ரவூப் ஹக்கீம் இந்த சபையில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, சுகாதார அமைச்சு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
அதனால் இந்த விசாரணை அறிக்கையின் நிலைமை என்ன? அந்த அறிக்கையை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்போகிறது என கேட்கிறேன் என்றார்.
இதற்கு இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பதிலளிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சின் செயலாளர் ஊடாக பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இன்றைய தினத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். அது தொடர்பாக உங்களுக்கும் அறியத்தருகிறேன் என்றார்.- Vidivelli