உரிமைகள் கோரும் சம்பந்தனும் ஹக்கீமும் வௌ்ளத்தின் போது தலைகாட்டவில்லை
வெள்ள மீட்பு பணியில் நாமே முன் நின்றோம் என்கிறது இராணுவம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ரவூப் ஹக்கீமோ தற்போது வெள்ளம் தாக்கிய வடக்கு, கிழக்கு பிரதேச மக்களைப் பார்வையிட வரவில்லை. இந்நலையில் இராணுவத்தினரே அந்த மக்களை தமது தோள்களில் தூக்கி சுமந்து, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ளத்தின் பின்னரான மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எண்ணிக்கை குறித்து அவரைத் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் காணப்பட்டது. எனவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே பெருமளவிலான இராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1400 குடும்பங்கள், அதாவது சுமார் 4900 வரையிலான தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 16 ஆம் இலக்க ஐ.ஜி.பி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 300 இராணுவ வீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8 பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கினால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள அதேவேளை, அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500 தனிநபர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீட்புப் பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது நிர்வாக அதிகாரிகள் இதனைப் பொறுப்பேற்கும் வரை நாம் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுபட்டுள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருமாறு கோருகின்ற சம்பந்தன், ரவூப் ஹக்கீம் போன்றோர் தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசுவதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் இராணுவத்தினரே முன்நின்று அம்மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
-Vidivelli