திருகோணமலை சாஹிரா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை, அதிகாலை 2 மணிக்கு இந்தியாவையும் – இலங்கையையும் இணைக்கும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்த உள்ளார்.
இதன்போது இவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தியாவின் தனுஸ்கோடி, அரிச்சல்முனையிலிருந்து தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை 8 மணி நேரத்தில் தாம் கடக்க எண்ணியுள்ளதாக சலாமா கூறினார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையிலிருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார். இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.
றொசான் அபேசுந்தர 2021 ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணிநேரம், 19 நிமிடம்,58 செக்கனில் நீச்சலை நிறைவு செய்து, ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணிநேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த திருகோணமலையைச் சேரந்த ஹரிகரன் தன்வந்தையையும் இவரே பயிற்றுவித்திருந்தார்.
பாக்கு நீரிணையூடாக நீந்துவதென்பது வெறுமனே பொறுமை தாங்கும் ஆற்றலுடன் கூடிய ஒரு வீரச்செயல் மாத்திரமன்றி, அது மனித உறுதிப்பாடு மற்றும் எதிர்ப்பாற்றல் என்பவற்றிற்கான ஓர் உடன்படிக்கையுமாகும். இம்முயற்சி இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கான 32 கிலோமீட்டர் தூரத்துடன் கூடிய நீரிணையை நீந்திக் கடப்பதுள்ளிட்ட ஒரு வரலாற்று நிகழ்வெனலாம்.
பாக்கு நீரிணையில் தற்போது நிலவுகின்ற ஊகிக்க முடியாத சூழமைவுகள் மிக அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர்களுக்குக் கூட சவாலாக அமைந்துள்ளன.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளையாட்டு வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2009 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிறந்த பஹ்மி ஹஸன் சலாமா திண்ணமான உறுதி மற்றும் இலக்குகளை தன்னகத்தே கொண்ட ஒருவராவார். 15 வயது என்ற சிறுவயதிலேயே அவர் விளையாட்டில் சாதனைகள் பலவற்றிற்கு உரித்தான ஒருவராவார். நீச்சல் விளையாட்டில் நட்சத்திரமாக மிளிரும் ஆற்றலைக் கொண்டுள்ளார். அவரது அர்ப்பணிப்புக்கள், ஆற்றல்கள் தொடர்பாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற பாராட்டுகள் இது பற்றி கட்டியம் கூறுகின்றன.
ஹஸன் சலாமாவின் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் இப்பயணம் எல்லையற்ற பயிற்சிகள், பாதுகாப்புடன் கூடிய முன்னேற்பாடுகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு என்பவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும்.
நீச்சல் வீரர் ஒருவரென்ற வகையில் அவர் கடந்த காலங்களில் கணிசமானளவு வெற்றிகளையும் பாராட்டுகளையும் அவரது ஆற்றல்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் உயர் திறன் என்பவற்றை மெச்சும் வகையிலே பெற்றுக் கொண்டுள்ளார்.
திருகோணமலை YANA நீச்சல் பாடசாலையில் வெண்கல, வெள்ளி மற்றும் தங்க மட்ட நீச்சல் பயிற்சியைப் பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன், முக்குளிப்பாளர் ஆரம்பமட்டத்தில் கடல் நீரில் ஆகக் கூடியது 15 அடிகளைப் பூர்த்தி செய்திருக்கின்றார்.
உயிர் காப்பு மற்றும் நீரியல் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிறுவனமாகிய Sri Lanka Life Saving நிறுவனத்தில் நீரியல் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழொன்றைப் பெற்றுள்ள சலாமா, அந்நிறுவனத்தில் ILS Junior Life Saver சான்றிதழையும் Sri Lanka Life Saving CPR சான்றிதழையும் பெற்றுள்ளதுடன் தொழில் ரீதியான நீச்சலாளர் சான்றிதழையும் ஹஸன் சலாமா உரித்தாக்கிக் கொண்டுள்ளார்.
மேலும், தேசிய தொழில் ரீதியான முக்குளிப்புப் பங்களிப்புப் பாடநெறி (NVDA) NVQ Level 3 பூர்த்திசெய்திருக்கின்றார். அத்துடன், திருகோணமலையிலிருந்து சாம்பல் தீவு வரை (8 கிலோ மீட்டர்) தூரத்தை 2023 மே மாதம் 07 ஆம் திகதி Marine Mile Challenge போட்டியில் கலந்து கொண்டு வெற்றி ஈட்டிய ஹஸன் சலாமா, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகில் இருந்து சாம்பல் தீவு வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்தை 2023 ஆகஸ்ட் 01 ஆம் திகதி கடந்து Marine Mile Challenge போட்டியில் வெற்றி ஈட்டியிருக்கின்றார்.
இதுமட்டுமல்லாமல், திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகியிருக்கின்றார்.
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற் பாதுகாப்புச் செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
பாக்கு நீரிணையை பஹ்மி ஹஸன் சலாமா நீந்திக் கடப்பதென்பது முழு இலங்கை தேசத்திற்குமே பெருமையாகும். அவரது இந்த சாதனைப் பயணம் வெற்றி பெற பிரார்த்திப்போம்!- Vidivelli