(றிப்தி அலி)
இம்முறை ஹஜ் யாத்திரைக்காக சென்றுள்ள இலங்கையர்களின் நலன்களை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய திணைக்களத்தினால் அனுப்பப்படவுள்ள இரண்டு ஆண் உத்தியோகத்தர்களையும் ஒரு பெண் உத்தியோகத்தரையும் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று இடம்பெற்றுள்ளது.
மத விவகார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், திறைசேரியின் உயர் அதிகாரி மற்றும் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் அடங்கிய குழுவே இந்த நேர்முகப் பரீட்சையை முன்னெடுத்துள்ளது.
‘நேர்முக பரீட்சை குழுவினால் சிபாரிசு செய்யப்படுபவர்களை மாத்திரமே ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்க அனுப்ப தீர்மானித்துள்ளோம்’ என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி சதுரி பின்டோ தெரிவித்தார்.
அத்துடன் பெண் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒரு பெண் உத்தியோகத்தர் இந்த வருடம் கண்டிப்பாக அனுப்பப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புனித ஹஜ் கடமையினை ஏற்கனவே நிறைவேற்றிய சில அரச உத்தியோகத்தர்களை இந்த வருடமும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக அழைத்துச் செல்ல அரச ஹஜ் குழு நடவடிக்கை எடுத்ததையடுத்தே இவ்வாறு நேர்முகப் பரீட்சையை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குறித்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு திணைக்கள பணிப்பாளரின் சிபாரிசின் அடிப்படையில் வருடாந்தம் வாய்ப்பு வழங்கப்படுவது வழமையாகும்.
அந்த அடிப்படையில் இந்த வருடமும் நான்கு பேரின் பெயர்கள் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பெயர்கள் இத்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி சதுரி பின்டோவின் ஊடாக அனுப்பப்படாமல் ஹஜ் குழுவின் தலைவரினால் நேரடியாக அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கடந்த முறை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியா சென்றதுடன் ஹஜ் கடமையினையும் நிறைவேற்றியவர்களாவர்.
இதேவேளை, இந்த திணைக்களத்தில் 15 வருடங்களாக பணியாற்றுகின்ற ஒருவர் மூன்றாவது தடவையாகவும், மூன்று வருடங்களாக கடமையாற்றுகின்ற ஒருவர் இரண்டாவது தடவையாகவும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்கான இந்த வருட குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பெண் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்க ஒரு பெண் உத்தியோகத்தர் செல்வது வழமையாகும். கடந்த வருடம் போன்று இந்த வருடமும் பெண் உத்தியோகத்தர் அரச ஹஜ் குழுவினால் முன்மொழியப்பட்ட குழுவில் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. இந்நிலையிலேயே அரச ஹஜ் குழுவினால் முன்மொழியப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, நேர்முகப் பரீட்சை மூலம் பொருத்தமான உத்தியோகத்தர்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli