பா.ரவீந்திரன்
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
பல்கலைக் கழகங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம் என கோட்பாட்டு ரீதியில் விளக்கவுரைகளை பயிலும் மாணவர்களுக்கு முன் நடைமுறை நிகழ்வுகள் கேள்விகளாக வந்துவிடுகின்றன. எதையும் புத்தாக்கத்துடனும் பரீட்சார்த்தத்துடனும் அணுகும் பயமறியா இளம் பராயமும் சேர்ந்துகொள்ள அவர்கள் போராட்டத்தில் வீரியத்துடன் இறங்குகிறார்கள். உண்மையில் தமது எதிர்காலத்தை பணயமாக வைத்து, தமது கனவுகளை பணயமாக வைத்துத்தான் மாணவ சமுதாயம் போராட்டத்தில இறங்கும் இக்கட்டான நிலை இருக்கிறது. அவர்களது எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய மிகப் பெரும் ஆபத்து இதற்குள் இருக்கின்றது. இந்த மனச் சஞ்சலத்தோடுதான் இந்தப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டியுள்ள நிலை எமக்கு ஏற்படுகிறது.
17 ஏப்ரல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தொடங்கிய இப் போராட்டம் மற்றைய பல்கலைக் கழகங்களுக்கும் பரவி, இன்றுவரை தொடர்கிறது. வன்முறையிலோ பொதுச்சொத்தை சேதமாக்காமலோ போராடியும், ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல் சுமார் 2000 மாணவர்களும் சில விரிவுரையாளர்களும் இதுவரை கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள். அவர்களது எதிர்காலத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் இது.
உலகம் முழுவதும் காலங்காலமாக பல மாணவர் போராட்டங்கள் நடந்த வரலாறுகள் உள்ளன. அமெரிக்காவின் இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு இன்னும் முக்கியமான வரலாறு இருக்கிறது. 1960 களில் நடந்த சிவில் உரிமை இயக்கப் போராட்டத்தில் மாணவர்களின் முக்கிய பங்கு இருந்திருக்கிறது. அமெரிக்காவில் நிறவெறி கோலோச்சிய காலகட்டத்தில், 1960 பெப்ரவரியில் மாணவர்கள் -முக்கியமாக கறுப்பின மாணவர்கள்- “வெள்ளையர்களுக்கு மட்டும்” என ஒதுக்கப்பட்ட பிரதேசத்துள் புகுந்து தங்கிநின்று போராட்டம் நடத்தினார்கள். அது 50 க்கு மேற்பட்ட நகரங்களுக்கும் விசாலித்தது.
1968 இல் வியட்நாம் போருக்கு எதிராக இதே கொலம்பிய பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்து நாடெங்கும் பரவியது. இன்று நடப்பது போன்றே மாணவர்கள் பல்கலைக்கழக ஹெமில்ற்றன் மண்டபத்தை கைப்பற்றி முகாமிடல் போராட்டத்தை நடத்தினர். அன்றைய போராட்டத்தில் கென்ற் பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த அதிர்ச்சி நாடு தழுவி மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 450 கல்வி நிலையங்கள் (பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள்) பெரும் போராட்டங்களில் இறங்கியிருந்தன. இதன்போது இன்னொருபுறம் பொதுமக்களும், மாற்றுத் திறனாளியாக்கப்பட்ட இராணுவத்தினரின் அமைப்பும் வீதிக்கு இறங்கி போராடினார்கள். 56000 அமெரிக்க இராணுவத்தினரை பத்து வருட வியட்நாம் போரில் காவுகொடுத்த புயல் ஓய்வுக்கு வந்தது. தோல்வியோடு திரும்பியது அமெரிக்க இராணுவம்.
1980 இல் தென் ஆபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிரான போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கினர். இன்றைய கோரிக்கை போன்றே தென் ஆபிரிக்க நிறவெறி அரசுக்கு துணைபோகிற நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்தக் கோரியும் அந்த அரசுடனான எல்லாவகையான தொடர்புகளையும் துண்டிக்கக் கோரியும் தத்தமது பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினர். நாடெங்கும் பரவிய இந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக 155 கல்விநிலையங்கள் இக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பின்னர் 1986 இல் அமெரிக்க அரசும் தென் ஆபிரிக்க அரசுடனான பொருளாதாரத் தொடர்புகளை துண்டித்தது. ஆபிரிக்க நிறவெறி அரசக் கட்டமைப்பினுள் ஓர் அழுத்தத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் ஏற்படுத்திய காரணிகளில் இந்த போராட்ட வரலாற்றுத் தொடர்ச்சிக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு இருந்தது. தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் விடாப்பிடியான போராட்டத்துக்கு இது சாதகமாகவும் அமைந்தது.
இப்போது காஸா இனப்படுகொலையை நிறுத்தக் கோரியும், இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுடனான பொருளாதார முதலீட்டுத் தொடர்பை நிறுத்தக் கோரியும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கோரிக்கை வைத்து கொலம்பிய பல்கலைக் கழகத்தில் வெடித்த போராட்டானது 40 க்கு மேற்பட்ட நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களுக்கும் மற்றும் சில கல்லூரிகளுக்கும் பரவியிருக்கிறது. இந்த மாணவர் போராட்டத்தில் யூத மாணவர்கள் பலரும் பங்குகொள்கிறார்கள் என சொல்லப்படுகிறது. நீதிக்கான யூதர்கள் என்ற அமைப்பு இப் போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளது.
மாணவர் போராட்டங்கள் இப்போது கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, எகிப்து, இத்தாலி என -ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில்- பரவத் தொடங்கியிருக்கிறது. இப் போராட்டங்கள் இன்னும் பரவலாகி வீரியமடையுமா அல்லது மெல்ல அடங்கிப் போகுமா என்பதை எதிர்வு கூற முடியாதுள்ளது.
சியோனிஸ்டுகளின் இஸ்ரேல் லொபிகள் மிகப் பலமானவை. குறிப்பாக அமெரிக்காவில் அவர்களை மீறி எந்த அரசாங்கமும் இயங்க முடியாத நிலையே உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும்கூட அவர்கள் நிதிப் பங்களிப்பின்றி எதுவும் அசையாது. அமெரிக்க காங்கிரஸிலும் அவர்கள் பலமாகவே உள்ளனர். பலஸ்தீன ஆதரவு வேட்பாளர்களை தோற்கடிக்க இந்த சியோனிஸ்ட் லொபி (ஏ.ஐ.பி.ஏ.சி) மில்லியன் கணக்கான நிதியை எதிர் வேட்பாளர்களுக்கு செலவு செய்கிறது. 3 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட இந்த லொபியின் பலம் அபரிதமானது. இந்த லொபியானது அமெரிக்காவின் மாறிமாறி வரும் அரசாங்கங்களில் மட்டுமல்ல, ஆணிவேரான அரசு கட்டமைப்பிலும் பெரும் பலமாகவே இருக்கிறது. பெரும் வங்கி நிறுவனங்கள், அரச ஆலோசகர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உளவு நிறுவன (சிஐஏ) அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதித்துறையினர் என சியோனிஸ்டுகளின் பலம் அதிகார மேடையெங்கும் பரந்திருக்கிறது.
இவர்களை மீறி எந்த அமெரிக்க அரசாங்கமும் சுயேச்சையாக இயங்க இடமில்லை. உதாரணத்துக்கு இதைச் சொல்லலாம். 1993 இல் இஸ்ரேல்-–பலஸ்தீனம் இரு அரசு தீர்வு ஒப்பந்தமிடப்பட்ட பின், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அதிபரும் அத் தீர்வை எதிர்க்கவில்லை, நடைமுறைப்படுத்தவே விரும்பினர். ஒபாமா கடும் முயற்சி எடுத்தார். இன்றும்கூட பைடன் அத் தீர்வை ஆதரிக்கிறார். ஆனால் எவராலும் முடியவில்லை. சியோனிசசூழ் அதிகாரத்தை மீறி இஸ்ரேலுடனான உறவை எந்த அமெரிக்க அரசாங்கத்தாலும் சுயேச்சையாக தீர்மானிக்க முடியாது. காஸாவுக்குள் போக வேண்டாம் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்தது. இஸ்ரேல் போனது. இப்போது ரபாக்குள் போக வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கிறது. போவோம் என்கிறார் பெஞ்சமின் நெத்தன்யாகு. அவரும் ஒரு சியோனிஸ்ட். அதிசயம் நடந்து நெத்தன்யாகு அமைதியை விரும்பினாலும்கூட, அவரது கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சியோனிஸ்டுகளையும் அமெரிக்க சியோனிஸ்டுகளையும் மீறி எந்த முடிவும் எடுக்க முடியாது. சியோனிஸ்டுகள் பலஸ்தீன நாட்டின் இருப்பையே மறுத்து இஸ்ரேலை அதன் மொத்த நிலப்பரப்பிலும் காண்பவர்கள். அதற்காக சபதமெடுத்தவர்கள். அதை சாத்தியப்படுத்த விழைபவர்கள்.
இந்த நிலை முன்னைய மாணவர் போராட்டங்கள் தந்த வெற்றிகளை இலகுவில் தர அனுமதிக்காது என்ற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். இருந்தபோதும் வரலாறு நேர்கோட்டில் செல்வதில்லை. அது புயலாகவும் வீசித்தானிருக்கிறது. அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். மாணவர் போராட்டத்தின் தீரத்தையும், மனித விழுமிய நாட்டத்தையும், போராட்டக் குணத்தையும் வரலாற்றுப் பங்களிப்பையும் ஆதரிப்போம்!- Vidivelli