அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல்
மாணவன் வைத்தியசாலையில்; தாயொருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை
(எப்.அய்னா)
க.பொ.த.சாதாரண தர பரீட்சைகளுக்காக அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டப வளாகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் ஒரு மாணவன் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மோதல்களிடையே பரீட்சை வளாகத்துக்குள் புகுந்து மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறி மாணவன் ஒருவனின் தாய் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதல் நிலையால், அனுராதபுரம் சாஹிரா கல்லூரியின் அதிபர் அறைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அனுராதபுரம் சாஹிரா கல்லூரியின் மாணவக் குழுவொன்றுக்கும் கம்மிரிகஸ்வெவ மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவக் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
க.பொ. த. சாதாரண தர பரீட்சை ஆரம்பித்தது முதல் இவ்விரு பாடசாலை மாணவக் குழுக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன. இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி இந் நிலைமை மோசமடைந்து கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது பாடசாலைக்குள் அத்துமீறியுள்ள மாணவர் ஒருவரின் தாய், மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த மாணவன் ஒருவன் பரீட்சை முடிந்ததும் அம்பியூலன்ஸ் ஊடாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே, பாடசாலைக்குள் அத்துமீறி தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலைமையை அடுத்து 13ஆம் திகதி அனுராதபுரம் சாஹிரா கல்லூரி வளாகத்தில் பதற்றமான சூழல் ஒன்று நிலவியுள்ள நிலையில் மேலதிக பொலிஸாரும் அங்கு அனுப்பப்பட்டு மோதல் நிலைமை தீவிரமடைவது தடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.– Vidivelli