ரஷ்யா – உக்ரைன் போரில் இரு தரப்பிலும் இணைந்து போரிடுவதற்கான கூலிப் படைகளுக்காக இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதும் சண்டையில் சிக்கி இவர்களில் பலர் உயிரிழந்திருப்பதும் நாட்டில் பலத்த பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக பொய் கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு ரஷ்யா- உக்ரைன் போரில் முன்னணி சண்டை முனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு வரப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அங்கு செயற்படும் கூலிப்படைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். மாதம் 7 இலட்சம் ரூபா சம்பளம் தருவதாகவும் சண்டையில் மரணித்தால் குடும்பத்திற்கு 12 கோடி ரூபா வழங்கப்படும் என்றும் இவர்களுக்கு பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் குறிப்பிடப்பட்டது போன்று அதிகளவு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் இவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று ரஷ்யாவிலுள்ள ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு பெருந் தொகைப் பணத்திற்கு விற்பனை செய்துள்ளமை குறித்தும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடினமான மற்றும் கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து கவனிப்பாரின்றி இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 500இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதன் பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஒருவரே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ரஷ்ய – உக்ரைன் மோதலில் இணைவதற்காக 600இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர்களுக்கு போலியான சம்பள வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் இருப்பதாகவும் ஜயசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை, அவர்களில் 15 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் இந்த ஆட்கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஊடக மாநாடு ஒன்றை நடாத்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இவ்வாறு ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என வலியுறுத்தினார்.
ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘‘இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர். எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியில் அனைவரும் வேறுபாடின்றி சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஏனையோரைப் போன்றே ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்வாய்ப்புப் பெற முயற்சிக்கின்றனர். எனினும் அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி இவ்வாறு கொலைக்களத்துக்கு அனுப்பும் நபர்கள் எந்தளவுதூரம் மனிதாபிமானமற்ற கொடூரர்களாக இருப்பார்கள் என்பதை இந்த விவகாரம் உணர்த்துவதாகவுள்ளது. இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கி பணத்தையும் பெறுமதிமிக்க உயிர்களையும் இழக்க வேண்டாம் என மக்களை விழிப்பூட்டுவது காலத்தின் தேவையாகும்.– Vidivelli