உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சஹ்ரானின் “பைஅத்’ காணொளி நீதிமன்றில் காண்பிப்பு; மொழிபெயர்ப்பும் சமர்ப்பிப்பு
(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதில் நேற்றும் (8) நேற்று முன் தினமும் (7), தாக்குதல்களுக்கு முன்னர் பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹஷீம் மற்றும் குழுவினர் ஒன்றாக இருந்து பைஅத் செய்துகொண்டதாக கூறப்படும் காணொளி காட்சிகள் நீதிமன்றில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் மொழி பெயர்ப்பும் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த காணொளியில் உள்ள விடயங்களை சிங்கள மொழியில் மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர் அவரது மேற்பார்வையாளர் உள்ளிட்டவர்களின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன. இதன்போதே இந்த காணொளிகள் நீதிமன்றில் காட்சிப்படுத்தப்பட்டன.
எவ்வாறாயினும் அக்காணொளிகளின் உள்ளடக்கம், பிரதிவாதிகளால் சவாலுக்கு உட்படுத்தப்படும் நிலையில், அக்காட்சிகளையும் அதன் உள்ளடக்க விடயங்களையும் பின்னர் சாட்சியங்கள் ஊடாக நிரூபிப்போம் என்ற வழக்குத் தொடுநர் தரப்பின் முன் கூட்டிய உறுதி மொழிக்கமைய இவ்வாறு அக்காணொளிகள் காண்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.- Vidivelli