கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஆசிய நாடுகளின் வரலாற்றிலே இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினரின் தோற்றமும் வரலாறும் தனித்துவமானது. நான் அறிந்தவரை இந்தத் தனித்துவத்தை உலகவரலாற்றிலும் காண்பது கடினம். அதாவது ஒரு முஸ்லிம் சிறுபான்மை இனம் இன்னொரு பௌத்த பெரும்பான்மை இனமொன்றின் அன்பையும் அரவணைப்பையும் ஆதரவையும் இலங்கையில் அனுபவித்த அளவுக்கு வெறெந்த நாட்டிலும் அதன் பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து அனுபவிக்கவில்லை. இலங்கையின் பௌத்த மன்னர்கள் தொடங்கி பௌத்த துறவிகள் ஊடாக குடிமக்கள்வரை இந்தச் சினேக உறவை வளர்த்ததன் காரணம் என்ன? இந்தக் கேள்விக்குரிய காரணத்தை இதுவரை வரலாற்றாசிரியர்கள் விளக்கவில்லை. அதனாலேதான் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இலங்கையின் வரலாற்றில் ஓர் எழுதப்படாத அத்தியாயமாக இன்றுவரை தொடர்கிறது. அதற்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கின் அரபு மொழிச் சுவடிகளை அணுகாமல் எந்த நிபுணனாலும் இவ்வத்தியாயத்தைப் பூரணமாக எழுதுவது கடினம் என்பதே.
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான இந்த அதிசய உறவு 1915 பௌத்த சிங்கள முஸ்லிம் கலவரத்தின் பின்னரும் நீடித்தது. முஸ்லிம்கள் அன்னியர்கள், அவர்களை அரபுநாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமென ஒரு சில இனவாதத் தலைவர்கள் அக்காலத்தில் கோஷமிட்டபோதும் கலவரம் முடிந்ததன்பின்னர் எந்த ஒரு முஸ்லிமும் இலங்கையை விட்டு வெளியேறவும் இல்லை, வெளியேற்றப்படவும் இல்லை. மாறாக மேலும் அவர்கள் இந்தத் தீவின் மண்ணிலேயே ஆழமாகக் காலூன்றி வாழத் தொடங்கினர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில்
முஸ்லிம்கள்
சுமார் நாலரை நூற்றாண்டுகளாக மூன்று ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற ஆட்சிக்குள் அடைபட்டிருந்த பின்னர் 1948 இல் விடுதலையாகிச் சுதந்திரம்பெற்று ஒரு நாடாளுமன்ற ஜனநாயகமாக இலங்கை மாறியது. அத்தோடு கட்சி அரசியலும் ஆரம்பமாகிற்று. ஆனால் அப்போதிருந்த முஸ்லிம் தலைவர்கள் தமது இனத்துக்கும் ஒரு கட்சிவேண்டுமென என்றுமே நினைத்ததில்லை. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, முஸ்லிம்களின் வியாபார நோக்கில் வளர்ந்த ஒரு மனப்பான்மை. அதாவது, வியாபாரத்தையே பிரதான தொழிலாகக்கொண்டு வாழும் ஒரு சமூகத்தின் முக்கிய நோக்கு தமது வாடிக்கையாளர்களின் சினேகிதத்தையும் நம்பிக்கையையும் சம்பாதிப்பதே. அது இல்லாமல் வியாபாரம் செழிக்க முடியாது. இரண்டாவது, முஸ்லிம்களின் நாடளாவிய குடிசனப் பரவல். மூன்றாவது இவ்வுலக வாழ்வைப்பற்றிய வைதீகக் கொள்கை. அதாவது இந்த வாழ்வு நிச்சயமற்றது. பரலோக வாழ்வே நிச்சயமானது. ஆதலால் அந்த வாழ்வுக்குத் தேவையான நல்ல அமல்களைச் செய்துகொண்டு இந்த உலகில் ஒரு பயணிபோல் வாழ்ந்து தாமும் தமது குடும்பமும் பள்ளிவாசலும் என்ற மூன்று சுவர்களுக்குள் இயங்குவதே சிறப்பானது. அரசியலில் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன ஆள்பவனுடன் சேர்ந்திருப்பதே மேலானது என்ற ஒரு வேதாந்தம் முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. அதற்கமையவே முஸ்லிம் தலைவர்களும் ஆட்சியில் எந்தக் கட்சி அமர்கிறதோ அந்தக் கட்சியுடன் இணைந்து தமது சமூகத்துக்குத் தேவையானவற்றை உரிமை என்று போராடாமல் சலுகைகளாகப் பெற்று ஒற்றுமையாக வாழ்வதே சிறந்த அரசியல் உபாயம் என்று கருதி முஸ்லிம்களுக்கென எந்தக்கட்சியையும் அவர்கள் நிறுவவில்லை.
1950கள் தொடக்கம் சிங்கள சமூகத்துக்கும் தமிழருக்குமிடையே அரசியல் ரீதியாக ஏற்பட்ட விரிசலில் முஸ்லிம்களின் அரசியல் உபாயம் பல நன்மைகளை சிங்கள அரசாங்கங்களிடமிருந்து பெற்றுக்கொடுத்தது. எனவேதான் கட்சிவிட்டுக் கட்சிதாவும் இந்த உபாயத்தை வரலாற்றாசிரியர்களும் அரசியல் ஞானிகளும் பயனீட்டு அரசியல் என கௌரவிக்கலாயினர்.
சலுகையுடன் வாழ்வதா
உரிமையுடன் வாழ்வதா?
இலங்கை முஸ்லிம்களுக்கெனத் தனியொரு அரசியல் கட்சி தேவை என்ற கோரிக்கைக்குப் பின்னணியாக அமைந்ததே முஸ்லிம்கள் இந்நாட்டில் சலுகையுடன் வாழ்வதா உரிமையுடன் வாழ்வதா என்ற கேள்வி. அந்தக் கேள்வியை முதன்முதலாக எழுப்பியவர் காத்தான்குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913—–1984) அவர்கள். அவர் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த சிந்தனையாளரும் தத்துவஞானியுமாவார். அவரே எனது தந்தை என்பதை வாசகர்கள் அறிவரோ தெரியாது. ஆனால் நான் பதின்மவயதினனாக இருந்தபோதே இதே கேள்வியை முன்வைத்து என்னுடன் என் தந்தை உரையாடிய ஞாபகம் உண்டு. அதை உரையாடல் என்று கூறுவதைவிட குரு சிஷ்ய உபதேசம் என்பதே பொருத்தமானது. அவர் பதுளை நகரில் அல்- அதான் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியபோது (அல்- அதான் என்பது கவிஞரின் புனைப்பெயர்) அதைத்தான் அவரது மாணாக்கர்கள் அந்த வித்தியாலயத்தின் பெயராகப் பொறித்தனர். அவரின் நண்பர்களுள் ஒருவராக இருந்தவர் காலஞ்சென்ற வட்டார நீதியரசர் ஹுசைன் (1911-–1998) அவர்கள். அவர் கல்முனையிலே பிறந்தவர். இந்த இருவரின் நட்பு கவிஞர் இறக்கும்வரை நீடித்திருந்தது. இவர்கள் இருவருமே பாக்கிஸ்தான் போராட்டத்தின் சமகால அவதானிகள். அதிலும் குறிப்பாக அல்லாமா இக்பாலின் தத்துவக் கருத்துக்களை லெப்பை அவர்களும் முகம்மதலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் சார்பான சட்டரீதியான வாதங்களை ஹுசைனும் ஆழமாக அறிந்து அவற்றால் கவரப்பட்டவர்கள். எவ்வாறு முஸ்லிம்களுக்கென ஒரு தனிநாடு இந்தியாவிலிருந்து உருவாக்கப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் முஸ்லிம்களுக்கென ஒரு தனிக்கட்சி உருவாக்கப்பட்டு அதன்கீழ் அனைத்து முஸ்லிம்களும் அணிதிரண்டு தமது உரிமைகளைச் சட்டமூலம் வாதாடிப்பெற்றுச் சமநிலையில் வாழவேண்டும் என்பதில் இவ்விருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். ஆனால் இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் முற்றிலும் வேறுபட்டதொன்று என்பதை அவர்கள் இருவரும் உணரத்தவறியது ஆச்சரியமே.
இந்தியாவுக்கு வாளோடு வந்த முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றி 16ஆம் நூற்றாண்டு தொடக்கம் 18ஆம் நூற்றாண்டு நடுப்பகுதிவரை ஆண்ட ஒரு வீரப் பரம்பரை. பிரித்தானியக் குடியேற்ற ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கிவிட்டு அவசர அவசரமாக வெளியேற முயற்சித்தவேளையைச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு பாக்கிஸ்தானை வென்றெடுத்த சமூகம் அம்முஸ்லிம்கள். இருந்தும் அந்த முஸ்லிம்களின் வரலாறு பாக்கிஸ்தான் உருவானதன் பின்பும் குருதி படிந்ததாகவே இருக்கிறதை யார்தான் மறுப்பர்?
ஆனால் இலங்கைக்கு வந்த முஸ்லிம்களோ பண்டங்களுடன் வர்த்தகத்துக்காக வந்தவர்கள். அவர்கள் சிங்கள பௌத்த மன்னர்களின் விருந்தாளிகளாக அரவணைக்கப்பட்டவர்கள். அந்த அரபுநாட்டு முஸ்லிம்களை ஒரு துரும்பாகப் பயன்படுத்தி ஒப்பற்ற உலகப்பேரரசாக அன்று விளங்கிய அப்பாசியரின் கிலாபத்துடன் இலங்கையின் உறவைப் பலப்படுத்த இலங்கை மன்னர்கள் முயன்றதன் விளைவே அந்த அரவணைப்பு எனலாம். இந்தச் சுமுகமான வரலாற்றின் காரணமாக, 1948 இல் சுதந்திரம் கிடைத்ததன்பின்னர் முஸ்லிம்களுக்குத் தேவைப்பட்டது மற்ற இனங்களுக்குள்ள அதே உரிமைகளே அன்றி தனி முஸ்லிம் நாடோ அல்லது மாகாணமோ அல்ல. அந்த உரிைமகளுக்காகப் போராட முஸ்லிம்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு வல்லமையுள்ள ஒரு தலைமையின் வழிகாட்டலில் இயங்கவேண்டும் என்பதே லெப்பை -ஹுசைன் ஜோடியின் நோக்கமாக இருந்தது. ஆனால் 1978 இல் ஆட்சிக்குவந்த ஜே.ஆர் ஆட்சி புதிய ஒரு சூழலை உருவாக்கிவிட்டது.
ஜே.ஆர் சூழ்ச்சி
ஜே.ஆர். ஜயவர்த்தன அரசியலில் ஒரு குள்ளநரி என்பதை யாவரும் அறிவர். சிறிமாவோ தலைமையில் இயங்கிய இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்மேல் வெறுப்படைந்த முஸ்லிம் வர்த்தகர்களும் மெளலவிகளும் ஜே.ஆரின் திறந்த பொருளாதார மந்திரத்தில் மயங்கி அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம்களைத் திசைதிருப்பி 1978 தேர்தலில் அவரை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் அவரின் அரசியல் அந்தரங்க நோக்குகளை முஸ்லிம்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையிலேயே சிறுபான்மை இனங்களின் அரசியல் செல்வாக்கை வெறுத்த ஒரு சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர். என்பதை அரசியல் வரலாறு கூறும். அவருடைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இலங்கையின் ஆட்சி எப்போதும் சிங்கள பௌத்த இனத்தின் கைகளுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தந்திரோபாயம். அதன் விளைவே 1983ல் தமிழினத்துக்கு எதிராக வெடித்த இனச்சுத்திகரிப்புக் கலவரம். அந்தக் கலவரத்தின் களத்திலே உருவானதே விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டமும் அதன் பிற்கால விளைவுகளும். ஆனால் அந்தப் போராட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலும் வடக்கிலும் வாழ்ந்த முஸ்லிம்கள். அந்த முஸ்லிம்களின் நிலையைப்பற்றிக் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம் தலைவர்கள் கவலையீனமாக இருந்ததே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாகுவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது. அந்தக் கட்சி காலவோட்டத்தில் இரண்டாகப் பிளவடைந்தமை வேறு விடயம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முதலில் ஒரு குறிப்பு. அதாவது, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1988ல் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டபோது கவிஞர் அப்துல் காதர் லெப்பை உயிருடன் இருக்கவில்லை. ஆனால் அந்தக்கட்சியின் ஆரம்பத் தலைவர் அஷ்ரப் அவர்களை ஓர் அரசியல்வாதியாக இனங்கண்டு அவரது அரசியல்- சமூகச் சிந்தனாவளர்ச்சிக்கு வித்திட்டவர் கவிஞர் என்பதற்கு கவிஞர் அஷ்ரபுக்கு எழுதிய கடிதங்களே சான்று. அதுமட்டுமல்லாமல் அரசியல்வாதி அஷ்ரப், ஹுசைன் அவர்களின் தங்கை மகன் என்பதையும் மறத்தலாகாது.
1970களின் பிற்பகுதியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம் பாடசாலைகளின் பாடவிதானத்தில் நடனம் இசை போன்ற கவின்கலைகளை புகுத்தியபோது அதற்காகக் கொதித்தெழுந்த முல்லாக்களின் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கிப் போராடி ஒரு அரசியல்வாதியாக அரும்பிய அஷ்ரபை இனங்கண்டவர் லெப்பை அவர்கள். கவிஞர் ஆசிரியத் தொழிலிருந்து ஓய்வுபெற்று, தனது ஒரே மகனையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, பெறாமகன் ஆப்தீனுடன் மாத்தளையிலே வாழ்ந்தகாலை அஷ்ரப் அவர்கள் தன் தாய்மாமன் ஹுசைனுடன் சென்று கவிஞரைச் சந்தித்து உரையாடுவது வழக்கமாய் இருந்தது. அந்த உரையாடல்களின் சாத்திய வெளிப்பாடே முஸ்லிம் காங்கிரஸ். ஆகவே அந்தக் கட்சியின் உண்மையான பிறப்பிடம் மலையகத்தின் மாத்தளை என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் வளர்ச்சியில் கவிஞருக்கோ 1991ல் மறைந்த அஷ்ரபின் மாமாவுக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதும் உண்மை. எனவே அவர்கள் இருவரும் வாழ்ந்திருந்தால் இக்கட்சி முஸ்லிம்களின் ஓர் அமுக்கக்குழுவாகவே இயங்கி இருக்கும் என்று எண்ணவும் இடமுண்டு.
மார்க்க முலாம் பூசப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள்
முஸ்லிம் காங்கிரசின் அடையாளச் சின்னங்களும் தேர்தல் பிரச்சாரங்களும் முஸ்லிம்களின் உரிமைகள் எவை என்பதை பட்டியலிட்டு விளக்காமல் வெறுமனே மார்க்க முலாம் பூசப்பட்ட பேச்சு மேடைகளாகவே விளங்கின. தப்லீக் இயக்கத்தின் இஜ்திமாவுக்கும் காங்கிரசின் பிரச்சாரக் கூட்டங்களுக்குமிடையே வித்தியாசமே இல்லையெனும் அளவுக்கு அவை காணப்பட்டன. எனினும் கட்சிக்கான முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு பெருகிற்று என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஆதரவை வளர்த்துக்கொண்டு தேர்தலிலே வென்ற முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தமது சொந்த நலனைப் பெருக்கினார்களே ஒழிய சமூகத்தின் நலனுக்காக என்ன செய்தார்கள் என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.
முஸ்லிம் கட்சியே இல்லாமல் ராசிக் பரீத், பதியுதீன் போன்ற தலைவர்கள் சாதித்தவற்றில் நூற்றில் ஒன்றையாவது இவர்களால் சாதிக்க முடிந்ததா? முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று கர்ஜிக்கின்றவர்கள் ஒரு ஜனநாயக நாட்டில் அப்புஹாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இல்லாத உரிமை அப்துல்லாவுக்கு இருக்குமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் அப்துல்லாவின் உரிமைகள் மறுக்கப்பட்டால் அவற்றுக்காக நீதிகேட்டுப் போராட வேண்டும்.
போராடினார்களா இந்தப் பெருந்தகைகள்? கொரோனாவால் மரணித்த முஸ்லிம் உடல்களை தகனம் செய்தபோது வாய்மூடி இருந்தார்களே. அவ்வாறு மௌனிகளாக இருந்துவிட்டு 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாகக் கைதூக்கி அதற்காகச் சன்மானமும் பெற்றார்களாமே! இதற்காகவா முஸ்லிம்களுக்கென ஒரு தனிக்கட்சி தேவை?
மோப்பமிடும் கட்சிகள்
விரைவில் தேர்தலொன்று வரப்போகிறது. வழமைபோன்று எவர் அல்லது எந்தக்கட்சி அல்லது கூட்டணி வெல்லப்போகிறதென்று இரு கட்சிகளும் மோப்பம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இக்கட்சிகள் காற்றடிக்கிற பக்கம் பறந்துபோய் ஒரு கம்பத்தில் ஒட்டிக்கொள்ளும் கடதாசிகள் போன்றவை. இக்கட்சிகளுக்குப் போடும் வாக்குகள் வீண் விரயம் என்பதை என்றுதான் முஸ்லிம்கள் உணர்வார்களோ?- Vidivelli