தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா தற்போது கடுமையான வெப்பத்துக்கு முகங்கொடுத்து வருகிறது. இது வசந்த காலம் என்ற போதிலும் இப் பிராந்தியத்தில் வாழும் நூற்றுக் கணக்கான மில்லியன் மக்கள் ஏற்கனவே கடுமையான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளனர். கோடை வெப்பம் முன்கூட்டியே வந்து, உயிர்களை பலியெடுத்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கும் போது அதாவது மே மற்றும் ஜூன் மாதங்களில் இது மிகவும் மோசமான தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த மாதம் அதிகபட்ச வெப்பநிலை 110 டிகிரி பரனைட் பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாயன்று கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களான ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கு ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
தென்கிழக்கு ஆசியாவிலும் வெப்ப அலை நிலைமைகள் கொடூரமாக உள்ளன. பிலிப்பைன்ஸில் வெப்பநிலை அதிகரித்ததால் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தாய்லாந்தில், இந்த ஆண்டு வெப்பத்தால் ஏற்கனவே 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வியட்நாமில், வெப்பநிலை 111 டிகிரியை தாண்டிய நிலையில், காட்டுத் தீ, நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறித்து தேசிய வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.
இலங்கையில், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகபட்ச வெப்பநிலை மே இரண்டாவது வாரம் வரை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதிக வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வடக்கு, வடமத்திய, வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்ப சுட்டெண் அல்லது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அதிக எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் சில தினங்களில் இலங்கையில் மிக வெப்பமான காலநிலை நிலவும் என மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரித பட்டியாராச்சி எச்சரித்துள்ளார். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மற்றும் குறைந்த காற்றின் வெப்பக் குறியீடு 40 டிகிரி என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்கள் தீவிர வெப்ப எச்சரிக்கை நிலைகளை அனுபவிக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் உட்பட 10 மாவட்டங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் வெப்பநிலை, எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் சாதாரண வெப்பநிலை 27 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ச்சியாக நீர் அருந்துமாறும் முடிந்தவரை நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது பாடசாலைகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளை வெளியில் அனுப்பாது வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மில்லியன் கணக்கான மரங்களை வளர்த்து பச்சை சூழலை உருவாக்க வேண்டிய தேவை இக்காலத்தில் வெகுவாக உணரப்படுகிறது. இது தொடர்பில் அனைவரதும் கவனம் ஈர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக எதிர்வரும் தேர்தல்களில் இலங்கை காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால வேலைத்திட்டங்களில் இதற்கு முன்னுரிமை வழங்காவிடின் வருடாந்தம் நாம் இவ்வாறு அதிக வெப்பத்துக்கு முகங்கொடுத்து வெந்து சாக வேண்டி வரும். – Vidivelli