ஏ.ஆர்.ஏ.பரீல்
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இதுவரை காலம் இஸ்ரேல் நடாத்தி வந்த தாக்குதல்களின் அவலங்கள் தற்போது ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. அப்பாவி பலஸ்தீன மக்களை இஸ்ரேலிய படையினர் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அக்கொலைகள் மிருகத் தனமானவை என்பது நிரூபணமாகியுள்ளன.
கான் யூனிஸ் பிராந்தியத்திலுள்ள நாஸர் மருத்துவ கட்டிடத் தொகுதியில் பாரிய மனித புதைகுழியொன்று பலஸ்தீன சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்புதைகுழியிலிருந்து இஸ்ரேலிய படையினரால் மிருகங்களைப் போல் புதைக்கப்பட்ட 180க்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் கடந்த 6 மாதங்களாக தாக்குதல்களை மேற்கொண்ட இப்பிராந்தியம் அழிவினால் பாழடைந்து போயுள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கெள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீனர்களின் ஐனாஸாக்கள் அநாதரவான நிலைக்கு உள்ளாகியிருந்தன. கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேலிய இராணுவம் காஸாவின் தெற்கு நகரான கான்யூனிஸிலிருந்தும் வெளியேறியதன் பின்பே இந்த கோர கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தற்போது கான்யூனிஸ் நகரம் இடிபாடுகளுடன் கூடிய பேய் நகரமாகக் காட்சியளிக்கிறது.
நாஸர் வைத்தியசாலை முன்றலில் பாரிய புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களை பலஸ்தீன சிவில் பாதுகாப்பு பிரிவினரும்,மருத்துவ உதவியாளர்களும் கண்டு பிடித்திருந்தனர். இந்த ஜனாஸாக்களில் வயோதிப பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடங்கியிருந்தனர் என அல் ஜெஸீரா செய்திச் சேவையைத் சேர்ந்த ஹானி மஹ்மூத் கான்யூனிஸிலிருந்து அறிக்கையிட்டிருந்தார். ஜனாஸாக்கள் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளில் இஸ்ரேலிய ஹீபுறு மொழியில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.
‘எங்களது குழுவினர் தொடர்ந்தும் கான்யூனிஸில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் மேலும் பெரும் எண்ணிக்கையிலான தியாகிகளாகிவிட்ட ஐனாஸாக்களை எதிர்பார்க்க முடியும்’ என பலஸ்தீன அவசர சேவை தெரிவித்துள்ளது. பாரிய புதை குழியில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் ஆளடையாளங்கள் இதுவரை அறியப்படவில்லை.
இதேவேளை கடந்தவாரம் அல்சிபா வைத்தியசாலையிலும் பாரிய புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல புதைகுழிகளில் இதுவும் ஒன்றாகும். அல் சிபா வைத்தியசாலை கரையோரத்தில் பெரும் வைத்திய வசதிகள் கொண்ட வைத்தியசாலையாகும்.
காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் சுமார் 34 ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டுள்ள பலஸ்தீனர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் சிறுவர்களும் பெண்களுமாவார்கள். கொல்லப்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கையை அறிக்கையிட முடியாதுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல் காரணமாக இடிபாடுகளுக்குள்ளான கட்டிட சிதைவுகளுக்குள் சிக்கியுள்ள ஜனாஸாக்களை கண்டுபிடிக்க முடியாத நிலைமை அங்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட பிரதேசங்களை மருத்துவ உதவியாளர்களால் அடைய முடியாதுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் காஸாவின் தெற்கு நகரமான ரபா உட்பட கரையோர பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரபா மீது இஸ்ரேல் மேற்கொண்ட இரவு நேர தாக்குதலில் 22 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக ஹமாஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 18 பேர் சிறுவர்களாவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதலில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 3 வயது பிள்ளை கொல்லப்பட்டனர். மூவரின் ஜனாஸாக்களும் அருகிலுள்ள குவைத் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொல்லப்பட்ட பெண் கர்ப்பவதியாவார். வைத்தியசாலை டாக்டர்கள் பெண்ணின் குழந்தையை மிக சிரமத்தின் மத்தியில் காப்பாற்றினார்கள். மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலில் 19 பலஸ்தீனர்கள் பலியானார்கள். இவர்களில் 17 சிறுவர்களும், 2 பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த வான் வழித் தாக்குதலுக்கு முன்பு ரபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் சிறுவர்களாவர்.
ரபாவில் இஸ்ரேலின் தரைவழி ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக அல் ஜஸீராவின் ஊடகவியலாளர் ஹானி மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார். வீடுகளுக்குள் இருக்கும் குடும்பங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொணடு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது பாதுகாப்பு கருதி ஓரிடத்திலிருந்து மற்றுமோர் இடத்துக்கு இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பு சவாலுக்குரியதாக மாறியுள்ளது.
தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் பிரயோகித்து வரும் நிலையிலும் இஸ்ரேல் எகிப்து எல்லையிலுள்ள நகர் மீது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆறு மாத காலமாக நீடித்து வரும் யுத்தத்தை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தாலும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. – Vidivelli