மாகாணசபை தேர்தல் நடத்தாவிடின் மாற்று நடவடிக்கைகளுக்கு தயார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை

0 822

ஒரு வருட  காலத்திற்கு  மேலாக தாமதிக்கப்பட்டுள்ள  மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலாவது விரைவாக  நடத்த வேண்டும். இல்லாவிடின் மாற்று நடவடிக்கைளை மேற்கொள்ளத் தயாரென தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

காலவரையறையின்றி  பிற்போடப்பட்டுள்ள   மாகாண சபை தேர்தல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர்   மேலும் குறிப்பிடுகையில்,

இன்றைய நிலையில்  மாகாண சபை தேர்தலை முதலில்  நடத்துவதே  பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.  மாகாண சபை தேர்தலுக்கான கேள்விகள் மாத்திரமே   காணப்படுகின்றன. தேர்தலை எந்த முறையில்  நடத்துவது  என்ற சர்ச்சையின்  காரணமாக  மாகாண சபை தேரதல்   காலவரையறையின்றி  பின்போடப்பட்டது.  எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள்   08 மாகாணங்களின்  பதவிக்காலம் முழுமையடையும்.

ஒரு வருட  காலத்திற்கு மேலாகத்  தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை பழைய முறையிலாவது  நடத்த வேண்டும்.  புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  கலப்புமுறை தேர்தல் முறையில்  பாரிய குறைபாடுகள்  காணப்படுகின்றன. இருப்பினும், பல  ஜனநாயக கோட்பாடுகளை தழுவிய அம்சங்களும்   காணப்படுகின்றன.  இக்குறைபாடுகளுக்குத் தீர்வு கண்டு  மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த  கடந்த  காலங்களில் அரசியல்  கட்சித் தலைவர்களுடன் மேற்கொண்ட  கலந்துரையாடல்கள்   அனைத்தும் பயனற்றவை  என்றே குறிப்பிட வேண்டும்.

கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதபட்சத்தில்  பழைய முறையிலாவது தேர்தலை விரைவுபடுத்த வேண்டும்.   பாராளுமன்ற உறுப்பினர்களில்  200இற்கும் மேற்பட்டோர்  பழைய தேர்தல்  முறையில் தேர்தலை நடத்த சம்மதம்  தெரிவித்தால்  எதிர்வரும் ஏப்ரல்  மாதம் 30ஆம் திகதிக்குள்  மாகாண சபை தேர்தலை முழுமையாக ஒரே  நாளில் நடத்த முயற்சிக்கலாம்.

மாகாண சபைகளின்  பதவிக்காலம் முடிந்து அங்கு மக்களின்  பிரதிநிதிகள் அல்லாதோர் நிர்வாகத்தை மேற்கொள்வது அடிப்படை உரிமைகளுக்குப் புறம்பானது. கலப்புத் தேர்தல் முறையில் பல புதிய ஜனநாயக ரீதியிலான  அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விடயத்தில் அரசியல்வாதிகள்  மக்களுக்கு   வழங்கிய  வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.  அதனைவிடுத்து   தொடர்ந்து  மகாண சபை தேர்தலை பிற்போடும் நிலைமை ஏற்பட்டால்  பாராளுமன்றத்தை மீறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.