கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை

0 207

சபீர் மொஹமட்

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் நடை­பெற்று இந்த ஆண்­டுடன் 5 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்­தி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேர­ணி­யாக சென்­றனர். எல்லா வரு­டங்­களும் போல் இவ்­வ­ரு­டமும் குண்­டு­வெ­டிப்பில் உயிர் துறந்­த­வர்­களின் குடும்­பத்­தினர் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்கள் குறித்த பேர­ணியில் கலந்து கொண்­டி­ருந்­தனர். அதேபோல் நாட­ளா­விய ரீதியில் குறிப்­பாக கொழும்பு, மட்­டக்­க­ளப்பு மற்றும் கண்டி ஆகிய பிர­தே­சங்­களில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு நீதி கேட்டு மக்கள் வெவ்­வேறு வித­மாக தமது எதிர்ப்பை வெளிக்­காட்டி இருந்­தனர்.

இந்த தாக்­குதல் நிகழ்ந்து ஐந்து வரு­டங்கள் ஆன நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தினர் மற்றும் பொது­மக்கள் எவ்­வா­றான ஒரு மன­நி­லையில் உள்­ளார்கள் என்­பதை அறிந்து கொள்­வ­தற்­காக நானும் குறித்த பேர­ணியில் கலந்து கொண்டேன். கொழும்­பி­லி­ருந்து நீர்கொழும்பு வரை இன மொழி வேறு­பா­டு­க­ளையும் கடந்த மனி­த­நேயம் மிக்க நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் இதில் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

சமன் பிரியன்க ஜயவிக்ரம

கம்­ப­ளையில் இருந்து கொழும்­புக்கு கூலி வேலை செய்­வ­தற்­காக வந்­தி­ருந்த சமன் பிரி­யன்க ஜய­விக்­ர­ம­வினால் நடை பேர­ணியில் செல்­கின்ற ஏனை­ய­வர்­களின் வேகத்­திற்கு ஈடு கொடுக்க முடி­யாமல் மெது­வான வேகத்தில் நடந்து கொண்டே என்­னோடு கதைத்தார். ஏனென்றால் 1997 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு வாகன விபத்தில் சமன் தனது இடது பாதத்தை இழந்­துள்ளார். ஆனாலும் தான் நீர்கொழும்பு வரை இறந்த அந்த மக்­க­ளுக்­காக நடந்தே செல்வேன் என்ற மன தைரியம் சம­னுக்கு இருந்­தது. களனி நதிக்கு மேலால் உள்ள பாலத்தில் நாங்கள் நடந்து செல்லும்போது சமன் என்­னிடம் “ஊட­கங்கள் வாயி­லாக நான் கேட்ட வாசித்த தக­வல்­க­ளின்­படி கடந்த அர­சாங்­கமே இந்த தாக்­கு­தலை நடத்தி இருக்­கின்­றார்கள். நான் கடந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக காலி முகத்­தி­ட­லிலும் போராடி உள்ளேன். இப்­போது இந்த மக்­க­ளுக்­கா­கவும் இங்கே போரா­டு­கின்றேன்” என்றார்.

ஒவ்­வொரு கிறிஸ்­தவ தேவா­ல­யத்­தையும் தாண்டி நாங்கள் செல்லும் போது அங்கே மணி­யோசை எங்கள் காது­களை துளைத்­தது. ஒவ்­வொரு தேவா­ல­யங்­க­ளுக்கும் முன்­பாக வீற்­றி­ருந்த மக்­களின் கைகளில் இருந்த மெழு­கு­வர்த்­தியின் மெழுகும் கண்­களில் இருந்து கண்­ணீரும் ஒரே ஜாடையில் ஒழு­கு­வதை நாங்கள் கண்டோம்.

எச்.ஏ.போன்சேகா

கட­வத்த பிர­தே­சத்தில் இருந்து பேர­ணியில் பங்கு பெறு­வ­தற்­காக வந்­தி­ருந்த 72 வய­து­டைய எச்.ஏ. போன்­சேகா வத்­தளை நகரை தாண்டி செல்லும் வரை அவ­ரது வாழ்க்கை பய­ணத்தில் அவர் கண்ட வன்­மு­றைகள் போராட்­டங்கள் பற்­றியும் அவற்­றுக்கு கிடைத்த நீதி­நி­யா­யங்கள் குறித்தும் என்­னோடு கதைத்தார். அப்­போது ஓரி­டத்தில், “முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­ச­விற்கு இந்த தாக்­கு­த­லுடன் சம்­பந்தம் இருப்­ப­தாக நான் நினைக்­கின்றேன். அத­னா­லேயே இந்த தாக்­குதல் குறித்த உண்­மை­களை அவர் மூடி மறைக்க முயற்­சித்தார்” எனக் கூறினார்.

மட்­டக்­குளி மோதர மற்றும் மாபோல ஆகிய பிர­தே­சங்­களில் நாங்கள் முஸ்லிம் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களை கடந்து மெது­வாக நடந்து சென்றோம். அங்கே பள்ளிவாசல்­க­ளுக்கு முன்­பாக திரண்­டி­ருந்த முஸ்லிம் மக்­களின் கண்­களில் ஏதோ ஒரு தாழ்வு மனப்­பான்­மையையும் மௌனத்தில் ஒரு குற்ற உணர்ச்­சியையும் உண­ரக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஒரு சில தீவி­ர­வா­திகள் செய்த குற்­றத்­தினால் ஒட்­டு­மொத்த சமூ­கமும் தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்ட அந்த வர­லாறு சில­வேளை அவர்­க­ளுக்கு அந்த சந்­தர்ப்­பத்தில் ஞாபகம் வந்­தி­ருக்­கலாம்.

மாபோலை நக­ருக்கு அரு­கா­மையில் என்னை சந்­தித்த திலீபா மாண­வடு, தனது கணவர் மற்றும் குழந்­தை­யுடன் பேர­ணியில் கலந்து கொண்­டி­ருந்தார். மக்கள் கேட்­கின்ற நியாயம் என்றால் என்ன என்­பது பற்றி திலீபா கூறு­கையில், “உயி­ரி­ழந்த மக்­க­ளுக்­கான நியாயம் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் ஆட்­சிக்கு வந்த பின் மறந்து விடு­கின்­றார்கள். எனவே இன்று ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இல்­லா­த­வர்கள் தான் நியாயம் கேட்டு போராட வேண்டி உள்­ளது” என்றார். மேலும் எதற்­காக இன்­றைய தினம் நீங்கள் இந்த யாத்­தி­ரையில் குடும்­பத்­தோடு பங்கு கொண்­டீர்கள் என்ற கேள்­விக்கு, இந்த தாக்­குதல் நடை­பெற்ற தினத்­தி­லேயே இதன் பின்னால் ஏதோ ஒரு அர­சியல் உள்­ளது என்­பதை தான் உணர்ந்­த­தா­கவும் யுத்­தங்­களின் போது மக்­களை மனித சங்­கி­லி­க­ளாக பயன்­ப­டுத்­து­வதைப் போல் ஆட்­சிக்கு வரு­வ­தற்­காக ஒரு சிலர் மக்­களை மனித சங்­கி­லி­க­ளாக பயன்­ப­டுத்தி உள்­ள­மையை தனது குடும்பம் உணர்ந்­த­தா­லேயே இந்த நடை பய­ணத்தில் கலந்து கொண்­ட­தாக தெரி­வித்தார்.

தனது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பாத ஒரு கிறிஸ்­தவ மத போதகர் தனது ஆல­யத்­திற்கு போத­னைக்­காக வரு­கின்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் குடும்ப உற­வு­களை இழந்த பக்­தர்­களின் மன­நிலை பற்றி இவ்­வாறு கூறினார். வேண்­டு­மென்றே திட்­ட­மிட்ட முறையில் ஒரு சிலர் வாகன விபத்­தொன்றை செய்­து­விட்டு தப்­பித்து சென்­றுள்­ளார்கள். குறித்த விபத்தில் உயிர் தப்­பி­ய­வர்­களின் கண் முன்னே அவர்­களின் குடும்ப உற­வுகள் துடி­து­டித்து இறந்­துள்­ளார்கள். ஆனால் இன்னும் அவர்­க­ளுக்கு நியாயம் கிடைக்­க­வில்லை. குற்­ற­வா­ளிகள் கண் முன்னே சுற்றித் திரிந்து கொண்டும் இருக்­கின்­றார்கள். இப்­போது உயிர் தப்­பி­ய­வர்­க­ளு­டைய மன­நிலை எவ்­வாறு இருக்கும்!

நாங்கள் கந்­தான நகரை அண்­டிய போது நள்­ளி­ரவு 12 மணியை தாண்­டி­யி­ருந்­தது. ஆனாலும் அங்கே பெருந்­தி­ர­ளான மக்கள் கையிலே மெழு­கு­வர்த்­தியும் கண்­களில் இனம் புரி­யாத ஏதோ ஒரு எதிர்­பார்ப்­பு­டனும் காத்­தி­ருந்­தார்கள். அப்­போது அங்கே சர்­வ­தேச மனித உரிமை செயற்­பாட்­டாளர் ருக்கி பெர்­னாண்­டோவை நாம் சந்­தித்தோம். பின்னர் ஜா-எல நகரம் வரை ருக்­கியுடன் இலங்­கையில் நடந்த இந்த தாக்­குதல் போல் சர்­வ­தே­சத்தில் நிகழ்ந்த சம்­ப­வங்கள் குறித்தும் இலங்­கையில் நிகழ்ந்த இந்த சம்­ப­வத்­திற்கு நியாயம் வேண்டும் என்றால் எவ்­வா­றான ஒரு பொறி­முறை இந்த நாட்டில் தேவை என்­பது குறித்தும் நாங்கள் உரை­யா­டினோம். அப்­போது ருக்கி நாங்கள் கேட்­கின்ற நீதி நியாயம் என்­பதை பெற்றுக் கொள்­வதில் காணப்­ப­டு­கின்ற சிக்­கலை இவ்­வாறு தெளி­வு­ப­டுத்­தினார்.

பொது­வாக ஒரு குற்­ற­வியல் நீதியை நிலை நாட்­டு­வ­தற்கு சுயா­தீ­ன­மான மற்றும் திற­மை­யான ஒரு விசா­ரணை வேண்டும். சட்­டமா அதிபர் வழக்கு தொடர்­வ­தற்கும் நீதி­ப­திகள் சாட்­சி­களை ஆராய்ந்து ஒரு தீர்ப்பை வழங்­கு­வ­தற்கும் இந்த விசா­ரணை மிக முக்­கி­ய­மா­னது. இலங்­கையில் தற்­போது காணப்­ப­டு­கின்ற சட்ட வரை­ய­றை­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது பொலிஸார் ஆகும். பொலிஸாரின் கீழ் CID, CTID போன்ற பல பிரி­வுகள் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் இவை அனைத்தும் உள்­ள­டங்­கப்­ப­டு­வது பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் கீழ் ஆகும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஜனா­தி­பதி அறிக்­கை­களில் தெளி­வாக பொலிஸ்மா அதிபர் தேச­பந்­துவும் ஒரு சில விட­யங்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற விடயம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ள­துடன் அதனை அவர் ஏற்றுக் கொண்டும் உள்ளார். அதேபோல் உச்ச நீதி­மன்றம் தேச­பந்து தென்­ன­கோனை சித்­தி­ர­வதை வழக்கு ஒன்றின் குற்­ற­வா­ளி­யாக தீர்ப்பு வழங்­கி­யுள்­ள­துடன் அதற்­கான நஷ்­ட­ஈட்­டையும் வழங்­கு­மாறு பணித்­துள்­ளது. ஆகவே இவ்­வா­றான ஒரு பொலிஸ்மா அதி­பரின் கீழ் நீதி­யான மற்றும் ஒரு நியா­ய­மான விசா­ர­ணையை இந்த அரசு மேற்­கொள்ளும் என்­பதை எவ்­வாறு நாங்கள் நம்­பு­வது?

மேலும் ருக்கி கூறு­கையில், நியாயம் என்­பது பற்றி நாங்கள் இன்னும் ஆழ­மாக சிந்­திக்க வேண்டும். அதா­வது குற்­றத்­திற்­கான தண்­ட­னையை வழங்­கு­வது மாத்­திரம் நியாயம் அல்ல. உதா­ர­ண­மாக இந்த தாக்­கு­தலின் பின்னர் நான் பாதிக்­கப்­பட்ட பல­ரையும் சந்­தித்­துள்ளேன். அவர்­களில் பல­ருக்கு இன்னும் நஷ்­ட­ஈ­டுகள் சரி­யாக சென்­ற­டை­ய­வில்லை. தாக்­கு­த­லினால் ஏற்­பட்ட காயங்கள் கார­ண­மாக அங்­க­வீ­ன­மான பலரும் உள்­ளனர். மேலும் பலர் உள­ ரீ­தியில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக வீடு­களில் முடங்­கி­யுள்­ளார்கள். அத்­துடன் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தில் நிகழ்ந்த குண்­டு­வெ­டிப்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் சிவில் யுத்தம், சுனாமி போன்ற பல இன்­னல்­க­ளுக்கும் முகம் கொடுத்த மக்­க­ளாக உள்­ளார்கள். ஆகவே இவர்கள் அனை­வ­ருக்­கு­மான ஒரு நியாயம் கட்­டாயம் வழங்­கப்­பட வேண்டும், என கூறினார்.

20ஆம் திகதி மாலை கொழும்பில் ஆரம்­பித்த பாத­யாத்­திரை 21ஆம் திகதி அதி­காலை நீர் கொழும்பை சென்­ற­டைந்­தது. பின்னர் 21ஆம் திகதி மாலை மூன்று மணி அளவில் ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் தேவா­ல­யத்­திற்கு சென்று இன்று வரை வீடு திரும்­பாத அப்­பாவி மக்கள் மற்றும் ஹோட்­டல்­களில் நிகழ்ந்த குண்டு வெடிப்­பு­களின் போது உயிர் துறந்­த­வர்கள் என இறந்த 269 பேரு­டைய புகைப்­ப­டங்­களை கையில் ஏந்­தி­ய­வாறு நீர் கொழும்பு மரிஸ்­டெலா கல்­லூ­ரியில் இருந்து கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­லயம் வரை மக்கள் பாத­யாத்­தி­ரை­யாக சென்­றார்கள். குறித்த நிகழ்­வுக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் உட்­பட நாடு பூரா­கவும் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இறு­தி­யாக இந்த அத்­தனை பய­ணங்­களில் பின்­னரும் ஒரு அழ­கான சம்­பவம் என்னை ஆழ்ந்து சிந்­திக்க வைத்­தது. நாங்கள் மட்­டக்­குளி முகத்­து­வாரம் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கும் முகத்­து­வாரம் சென்.ஜேம்ஸ் ஆல­யத்­திற்கும் இடையே நடந்து சென்று கொண்­டி­ருக்­கும்­போது பாதையில் சத்தம் கேட்டு ஒரு வய­தான முஸ்லிம் மூதாட்டி கையில் தஸ்­பீஹை ஏந்­திய வண்ணம் தனது சிறிய வீட்­டி­லி­ருந்து பாதையை எட்டி நோக்­கு­கின்றாள். தள்­ளாடும் வய­திலும் குறித்த மூதாட்டி சிரித்த முகத்­துடன் தன்னைக்கடந்து செல்லும் ஒவ்­வொ­ரு­வ­ரையும் பார்த்து கை அசைக்­கிறாள். அப்­போது அவ­ருக்கு எதிரே சிலு­வை­யுடன் கூடிய ஜெப­மா­லையை அணிந்த ஒரு கன்­னி­யாஸ்­திரி அவளைப் பார்த்து அன்­புடன் சிரிக்­கின்றாள். அப்­போது அந்த வய­தான முஸ்லிம் பாட்­டியும் அன்­புடன் சிரித்­து­விட்டு ஒரு கையில் தஸ்­பீஹை ஏந்­தி­ய­வாறு மற்ற கையை அசைக்­கின்றாள்.

அந்த வய­தான முஸ்லிம் பாட்­டிக்கு தெருவில் என்ன நடக்­கி­றது என்று கூட தெரி­யாது. ஆனால் அவள் பாதையில் செல்­கின்ற அனை­வ­ருக்கும் தன்னால் இயன்ற அன்பை வெளிப்­ப­டுத்­து­கின்றாள். சில­வேளை அந்த கன்­னி­யாஸ்­தி­ரியின் குடும்ப உற­வி­னர்கள் அல்­லது நண்­பர்கள் யாரா­வது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் இறந்­தி­ருக்­கலாம். அல்­லது அந்த முஸ்லிம் பாட்­டியின் உற­வி­னர்கள் யாரை­யா­வது இந்த சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் தீவி­ர­வாதி என முத்­திரை குத்தி இருக்­கலாம். அல்­லது இரண்­டுமே நடந்­தி­ருக்­கலாம்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி தேவா­ல­யத்­திற்குச் சென்ற கன்னியாஸ்திரியின் நண்பர்களுக்கு தாங்கள் எதற்காக உயிரைத் தியாகம் செய்தோம் என்பது பற்றி இன்னும் தெரியாது. அவர்களின் குடும்பத்தினர் இன்னும் தெருவிலே நீதி தேடுகின்றார்கள். அந்த முஸ்லிம் பாட்டிக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் யாரின் தூண்டுதலால் முஸ்லிம் பெயர்களை உடைய பயங்கரவாதிகள் கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டு வீசினார்கள் என்பது பற்றி இன்னும் தெரியாது. ஏதோ ஒரு அடிப்படையில் அவர்கள் இருவரும் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள். இரண்டு நாட்களாக நான் சந்தித்த பலருடனும் நான் கதைத்தேன். அவர்கள் அனைவரும் சந்தேகிக்கின்ற இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி திட்டமிட்டது போல் சிறிது காலம் ஆட்சியில் இருந்துள்ளார்கள். ஆனால் மொழியே இல்லாத இந்த இரு முஸ்லிம் கத்தோலிக்க வயோதிப பெண்களுடைய அன்பையும் அந்த கள்ளங்கபடமற்ற புன்னகையையும் எந்தவொரு பிரதான சூத்திரதாரியாலும் இன்னும் அழிக்க முடியாமல் போயுள்ளது என்பதே இங்கு நிதர்சனம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.