இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது

0 198

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட நிலை­யிலும் தொடர்ந்தும் சட்டவிரோ­த­மாக கட­மை­யினை மேற்­கொண்டு வந்த புத்­தளம் மாவட்ட முன்னாள் காதி­நீ­திவான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

விவா­க­ரத்து வழக்கு தொடர்பில் இலஞ்­ச­மாக 5000 ரூபா பெற்­றுக்­கொண்ட போதே அவர் கைது செய்­யப்­பட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் அவர் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை எதிர்­வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­வா­னுக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை கொழும்பு மேல் நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது.

தனது ஒரு வருட கால காதி­நீ­திவான் பதவிக் காலத்தில் தனது நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அவர் நீதி­நிர்­வாகப் பிரிவு மக்­களின் அதி­ருப்­தி­யையும், எதிர்ப்­பி­னையும் எதிர்­கொண்­டி­ருந்தார்.

இவ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு 16 முறைப்­பா­டு­களும், நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு 12 முறைப்­பா­டு­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

2023 மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்­திற்கு புத்­தளம் மாவட்ட காதி­நீ­தி­ப­தி­யாக இவரை நீதிச் சேவை ஆணைக்­குழு நிய­மித்­தி­ருந்­தது. இவ­ரது பதவிக் காலம் 2024 மார்ச் மாதத்­துடன் கால­வ­தி­யா­னது. இவ­ரது சேவைக்­காலம் நீடிக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் அவர் தான் பதவி நீடிக்­கப்­ப­டாத நிலை­யிலும் சட்ட விரோ­த­மாக தனது காதி­நீ­தி­பதி பத­வி­யினைத் தொடர்ந்தும் முன்­னெ­டுத்து வந்தார்.

சட்­ட­வி­ரோ­த­மாக வழக்கு விசா­ரணை­களை முன்­னெ­டுத்து வந்தார். இது தொடர்­பிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கப்­பட்­டது. புத்­த­ளத்­திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் திட்­ட­மிட்டு காத்­தி­ருந்து இவரைக் கைது செய்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். புத்­தளம் காதி­நீ­தி­ப­தியின் ஊழல் நட­வ­டிக்­கைகள் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

புத்­தளம் காதி­நீ­திவான் பதவி விலக்­கப்­பட்­டதன் பின்பு அவ்­வெற்­றி­டத்­துக்கு நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் கற்­பிட்டி காதி­நீ­திவான் நிய­மிக்­கப்­பட்டும் அவர் தனது உடல் நிலை கார­ண­மாக அப்­ப­த­வியை ஏற்க மறுத்­து­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலஞ்ச ஊழல் தொடர்பில் கொழும்பு பிர­தேச காதி நீதிவான் ஒருவர் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லை­யிலே தற்­போது புத்­தளம் காதி­நீ­தி­பதி அதே குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பில் இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றமை தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக முன்னாள் மேன்­மு­றை­யீட்டு நீத­மன்ற தலைவர் ஏ.டப்­ளியு. சலாம் மற்றும் முன்னாள் காதிகள் சபை தலை­வரும், சட்­டத்­த­ர­ணி­யு­மான நத்வி பஹா­வுதீன் ஆகியோர் காதிகள் அனைவரையும் ஒன்று கூட்டவுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.