சென்ற 18.04.2024 இல் வெளிவந்த விடிவெள்ளி வாராந்த வெளியீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்னிப்பா? ஆணைக்குழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு “காலத்திற்குத் தேவையான ஒரு விடயத்தை சமூகத்திற்கு முன் எடுத்து வைத்துள்ளீர்கள். இது சம்பந்தமாக நமது சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து இவ்விடயத்ததை நூர்ந்து போக விடாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே!” என்று பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். அதன் விளைவாக உங்களுக்கு இந்த பகிரங்க மடலை எழுத முன்வந்தேன்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளின்படி ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அந்த ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது, கபனிடுவது, தொழுகை நடாத்துவது, நல்லடக்கம் செய்வது என்ற இந்த நான்கு கடமைகளையும் உயிரோடிருப்பவர்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும். இது அவர்கள் மீது பர்ளு கிபாயாவாகும் என்ற இந்த விதி முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும். சிலர் செய்தாலும் சகலரின் மீதுள்ள கடமையும் நிறைவேறிவிடும் என்ற உண்மையை அனைவரும் நன்கறிவர். அத்துடன் ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை மனித உரிமையுமாகும் என்பதை சிறு பிள்ளைகூட தெரிந்து வைத்துள்ளனர்.
விடயம் இவ்வாறிருக்க சென்ற 2019ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட கொவிட் 19 என்ற கொரோனா பேரழிவு நோயின் காரணமாக இலட்சக் கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழ்ந்தவர்கள் தங்களின் சக்திக்கும், சமய அனுஷ்டானங்களுக்கும் ஏற்ப தங்கள் தங்கள் பணிகளைச் செய்து முடித்தனர்.
நமது நாட்டில் இந்தக் கொடிய நோய் பரவ ஆரம்பித்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது. இவர்களுள் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய என்ற பாகுபாடின்றி மரணமடைந்தவர்களின் பிரேதத்தைத் தகனம் செய்யவேண்டுமென்று சுகாதாரத்துறை சார்ந்த மெத்தப்படித்த மேதாவிகள் பலர் விடாப்பிடியாக இருந்தனர். ஏனைய சமயத்தவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. அரசாங்கம் சொல்வதற்கு செவிமடுத்துக் கொண்டு அவர்கள் வாளாவிருந்தனர்.
ஆனால் இது நமது சமூகத்திற்கு பெரியதோர் ஆபத்தான நிலைமையாகும். நமது சமயக் கடமைகளைச் செய்யக்கூட முடியாத சூழல். அரசியல் தலைமைகளும், ஆத்மீகத் தலைமைகளும் இவ்விடயத்தில் கரிசனை கொண்டு நாட்டின் சர்வாதிகாரங்களையும் தன்வசம் வைத்திருந்த அன்றைய ஜனாதிபதி கோத்தபாயவிடம் கெஞ்சிக் கேட்டும் அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. பிறந்து இரண்டு மாதங்கள்கூட நிறைவேறாத குழந்தையின் சடலத்தையும் எரித்தனர். “தீக்கிரையாக்கப்பட்ட உடல்களின் சாம்பலையாவது தாருங்கள் நாங்கள் அதையாவது அடக்கம் செய்கிறோம்” என்று எமது ஜம்இய்யாவின் தலைமை வேண்டுகோள் விடுத்தும்கூட அந்த வேண்டுகோளும் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகவே போய்விட்டது.
இவைகளெல்லாம் நாமறிய நடந்து முடிந்த விடயங்கள். வழக்கம்போல் அல்லாஹ்வின் மீது பாரத்தைச் சாட்டி விட்டு நாம் அமைதியடைந்தோம். இச்செயலுக்காக நீதிமன்றம் செல்லக்கூட எந்தத் தலைமையும் முன்வரவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இச்சமயத்தில்தான் சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு பெண் வைத்தியர் முன் வந்தார். அவரது தந்தை இப்றாஹீம் ஆசிரியர் என்பவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலைத்தகனம் செய்ய ஆயத்தங்கள் செய்யப்பட்டபோது அந்தப்பெண்மணி துணிச்சலுடன் நீதிமன்றத்திற்குச் சென்று தகனம் செய்யக்கூடாதென்று தடுப்பு ஆணை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். சில நாட்களில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இப்பணியை நாமோ நமது சமூகத் தலைமைகளோ தைரியமாக முன்னின்று அன்று நீதிமன்றத்தை நாடியிருந்தால் நூற்றுக்கணக்கான ஜனாஸாக்களை தகனம் செய்வதிலிருந்து தடுத்திருக்கலாமா என்று எண்ணத்தோன்றுகிறது. நடந்தது நடந்து முடிந்து விட்டது.
இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன? என்ற கருத்து முளைவிட ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய தான் எழுதிய நூலில் இவ்விடயம் சம்பந்தமாகக் குறிப்பிட்டு “ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவும் கொங்றீட் பெட்டிகளில் அடக்கம் செய்ய ஆலோசித்திருந்தேன். ஆனால் சுகாதார அமைச்சின் நிபுணர்கள் அதற்கு இடம்தரவில்லை. பேராசிரியர் மெத்திகாவே தகனம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் உறுதியாகவிருந்தார்” என்று முழு நாட்டினதும் சர்வதேசத்தினதும் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காத, மதிப்பளிக்காத சர்வ அதிகாரம் பெற்றிருந்த அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டு தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாஸா எரிப்புக்காக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இதற்கான ஆய்வறிக்கையுடன் கூடிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறுகின்றார்.
உலமாக்கள் சபையின் தலைவர் அவர்களே! இந்த நிலைமைகளை நமக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டால் என்ன என்று என் மனம் எண்ண வைக்கிறது.
ஜனாஸாக்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் இருந்தது மனித உரிமை மீறலல்லவா? மனித உரிமை மீறல் என்ற விதியின் கீழ் அல்லது வேறு பொருத்தமான விதிகளின் கீழ் நமது சமூகத்திலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெற்று உயர் நீதிமன்றில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தால் என்ன? தீர்ப்பு நமக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வரலாம். இனிமேல் வரும் காலங்களிலாவது நமது சமூகத்திற்கு இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகவாவது இவ்விடயத்தில் முயற்சி செய்தால் என்ன?
இவ்விடயத்தில் முன்னிற்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவே மிகப் பொருத்தமான ஸ்தாபனமாகும். ஏனைய தலைமைத்துவங்கள் தலையிட்டால் சில வேளைகளில் அது அரசியல் இலாபம் தேடும் செயல் என விமர்சிக்கப்படலாம். எனவே, ஜம்இய்யாவின் தலைமை இவ்விடயத்தை முன்னெடுப்பது நமது சமூகத்திற்கு ஏற்பட்ட துயரமான நிகழ்வுக்கு தஃஸியத் ஆறுதல் கூறவாவது முன்வரலாமல்லவா?
இதற்கான செலவுகளைச் சமாளிப்பதற்கு நமது சமூகம் ஒருநாளும் பின்நிற்க மாட்டாது. காஸாவில் அல்லலுறும் குழந்தைகளுக்காக கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுக்கும் சமூகமல்லவா? நாம்.
நீதிமன்றை நாடினால் என்ன? என்று என் மனம் விரும்பியது. சிலரிடம் ஆலோசனை கேட்டேன். பொருத்தமான நேரத்தில் தேவையான ஆலோசனை என்று கூறி உற்சாகம் தந்தனர்.
இவ்விடயம் சிறந்தது என்று நீங்களும் கருதினால் துணிந்து முன்வாருங்கள். உங்களுக்கு அல்லாஹ்வின் அருளும் நமது சமூகத்தின் ஆசீர்வாதமும் கிடைக்கும். முயற்சித்துப் பார்க்கலாமா?
அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி வெற்றி பெறச்செய்வானாக! ஆமீன்.
இங்ஙனம்,
ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)
சம்மாந்துறை.
2024.04.21.
- Vidivelli