காலித் ரிஸ்வான்
உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த, சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மதீனா பிராந்திய ஆளுநரான இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் தலைமையில், மன்னர் சல்மான் சர்வதேச மாநாட்டு மையத்தில் இம் மன்றம் நடைபெறவுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு உம்ராவுக்காகவும் பயணிகளாகவும் வருகின்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு மக்களின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் மற்றும் சேவைகளை இம் மன்றம் எடுத்துக் காண்பிக்கவுள்ளது. இது சவூதி அரேபியாவின் விஷன் 2030 திடலடத்தின் இலக்குகளை அடைவதன் ஒரு பகுதியாக இருப்பதோடு அதிக எண்ணிக்கையிலான உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மக்கா மற்றும் மதீனா நகரங்களிற்கு ஈர்த்து அவர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயண முகமையாளர்கள், புனித ஹஜ் உம்ரா யாத்திரை மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் காப்பீடு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடங்களான அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் போன்ற பலர் இம்மன்றத்தில் பங்கேற்கவுள்ளனர். உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் ஏனைய பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக உம்ரா மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ள சிறப்பான விடயங்களை இம் மன்றம் எடுத்துக் காட்டுவதோடு, இது பயணிகளது தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள், சேவைகளின் தரத்தை உருதிப்படுத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதாக அமையும். இத்திட்டமானது சவூதி அரேபியாவை நோக்கி வரும் உம்ரா மற்றும் சுற்றுலாப் பயணிகளின் சவூதியிலான அனுபவத்தை சிறந்த விதத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற அந்நாட்டுத் தலைமைகளின் ஆர்வத்திற்கான எடுத்துக்காட்டாக அமைகிறது.
இந்த உம்ரா மற்றும் சுற்றுலா மன்றத்தின் பொது அமர்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த பட்டறைகளில், பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிரந்துகொள்ளவிருக்கும் அதே நேரம் கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு துறையினர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் புதுமையான அனுபவங்கள், சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இம் மன்றத்தின் போது, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுமையான பணி களங்களை அறிவிக்கவுள்ளது. இது சம்பந்தமான சேவைகளை மேம்படுத்தவும், மக்கா, மதீனா மற்றும் பல்வேறு இஸ்லாமிய, வரலாற்று, மற்றும் தொல்பொருள் தளங்களுக்கு பார்வையாளர்களின் பயணத்தை எளிதாக்கவும் பல கூட்டு ஒப்பந்தங்கள் இதன் போது கைச்சாத்தாகவுள்ளன. – Vidivelli