முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்
உலமா சபை, சூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், சாகல ரத்நாயக்க, அலிசப்ரி பாதுகாப்பு, கல்வி, மதவிவகார அமைச்சு, திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் உயர்அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் தேசிய சூரா சபை பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் என்போர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பாதுகாப்பினை காரணம் காட்டி மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்களை மீளத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் இயங்கி வந்த தற்போது மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீளத் திறப்பது பாதுகாப்பு பிரிவினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மூடப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலைத் திறப்பதில் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு பிரச்சினையாக இருப்பின் அப்பள்ளிவாசலை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வேண்டப்பட்டார்.
அடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி மூடப்பட்டுள்ள ஏக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் பொலிஸார் மற்றும் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி தாமதமில்லாமல் திறப்பது குறித்தும் தீர்மானம் மெற்கொள்ளப்பட்டது.
குர்ஆன் நூல்கள், இஸ்லாமிய நூல்கள் இறக்குமதியின் போது எதிர்கொள்ளும் சவால்களை நீக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு குர்ஆன், இஸ்லாமிய நூல்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதன் பின்பே விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஒரு குழுவினை நியமித்து அக்குழுவின் சிபாரிசுகளின் கீழ் இறக்குமதி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நாட்டில் இயங்கிவரும் மத்ரஸாக்களுக்கென தயாரிக்கப்பட்டுள்ள தனியான சட்ட வரைபொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த சட்டவரைபின்படி மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்படவுள்ளன.- Vidivelli