ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்

0 631

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கொழும்பின் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஆதித்­திய பத­பென்­டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துற­வி­யென்ற போர்­வைக்குள் மறைந்­தி­ருந்து கல­கக்­காரன் நார­தன்­போன்று இலங்­கை­யெங்கும் இன­வா­தத்தை வளர்த்துக் கல­வ­ரங்­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அர­சியல் பௌத்­தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசா­­ர­ருக்கு நான்கு வருடக் கடூ­ழியச் சிறையும் நூறா­யிரம் ரூபா அப­ரா­தமும் தண்­ட­னை­க­ளாக விதித்­துள்­ளமை இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள வர­லாற்றில் ஒரு மைல்கல் எனக் கரு­தலாம். அவர் இழைத்த குற்றம் என்­ன­வெனில் இஸ்­லாத்தைப் பற்­றியும் அதன் புனித குர்­ஆ­னைப்­பற்­றியும் முஸ்­லிம்­களைப் பற்­றியும் பல அவ­தூ­று­களைப் பரப்பி கல­கங்­க­ளுக்கும் வித்­திட்டார் என்­ப­தாகும். ஆனால் அவர் முஸ்­லிம்­க­ளை­ மட்டும் புண்­ப­டுத்­த­வில்லை. ஏனைய சிறு­பான்­மை­யி­னரின் மதக்­கொள்­கை­க­ளையும் அவர்­க­ளது புனித ஸ்தலங்­க­ளையும் மாசு­ப­டுத்தி உள்ளார். உதா­ர­ணத்­துக்கு, முல்­லைத்­தீவின் நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் கோவில் முன்­றத்தில் கொழும்­பிலே மர­ணித்த ஒரு பௌத்த துற­வியின் சிதையை நீதி­ப­தியின் தடை­யுத்­த­ர­வை­யும்­மீறித் தகனம் செய்து இந்­துக்­களின் புனித தலத்­தினை மாசு­ப­டுத்­தி­யதை இந்து மக்கள் மறக்க மாட்­டார்கள். அதே­போன்று 2014ல் அளுத்­கமயில் வெடித்த சிங்­கள முஸ்லிம் இனக்­க­ல­வ­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியும் இவர்தான் என்ப­தையும் காத்­தான்­கு­டிக்கு விஜ­யம்­செய்து அங்கு நீண்­ட­ கா­ல­மாகப் புகைந்­து­கொண்­டி­ருந்த ஒரு மத­வாதப் பிரச்­சி­னைக்கு எண்­ணை­யூற்றிக் கொழுந்­து­விட்­டெ­ரியச் செய்­த­மை­யையும் முஸ்­லிம்கள் மறப்­பார்­களா? இந்தக் கல­கக்­காரப் பிர­கி­ரு­தியின் செயல்­க­ளை­யெல்லாம் பட்­டி­ய­லிட்டால் ஓர் அக­ரா­தி­யையே படைத்­து­வி­டலாம். தன்னைத் தட்­டிக்­கேட்க யாரு­மில்லை என்ற மம­தையில் ஓடிக்­கொண்­டி­ருந்த இந்தக் கௌத்­த­மரின் எதி­ரியைச் சிறைக்குள் தள்­ளிய பௌத்த நீதி­ய­ரசர் முஸ்­லிம்­க­ளுக்­கென எந்தச் சலு­கை­யையும் வழங்­க­வில்லை. அவர் தனது கட­மையை அதா­வது சட்­டத்தின் வலுவை எவ­ருக்கும் பயப்­ப­டாது நிலை­நாட்­டி­ய­தையே இக்­கட்­டுரை பாராட்­டு­கி­றது. இலங்­கையின் இன்­றைய அர­சியற் சூழலில் அவ­ரது தீர்ப்பு நீதித்­து­றையின் சுதந்­தி­ரத்­துக்குக் கிடைத்த மகத்­தான ஒரு வெற்றி. அது மட்­டு­மல்ல, இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்த நாட்டின் சமூகப் பொரு­ளா­தார அர­சியல் அமைப்­பையே மாற்று என்ற கோஷத்­துடன் கிளர்ந்­தெ­ழுந்த ஓர் இளைய தலை­மு­றையின் அர­க­லய ஆர்ப்­பாட்­டத்­துக்குக் கிடைத்த இரண்­டா­வது வெற்­றி­யு­மாகும். அதைப்­பற்றிப் பின்னர் விப­ரிப்போம்.

முதலில், பௌத்தம் இலங்­கைக்குக் கிடைத்த ஓர் அருட்­கொடை என்றால் அர­சியல் பௌத்தம் அதற்குக் கிடைத்த ஒரு சாபக்­கேடு. 1950களில் உரு­வா­கிய அர­சியல் பௌத்­தமே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தை இந்த நாட்டின் ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ள­மாக மாற்­றி­விட்­டது. அர­சியல் சட்ட யாப்பும் பௌத்­தத்­துக்கு அதி­யுன்­னத இடத்தை வழங்கி அதன் மறை­மு­க­மாக பௌத்த சங்­கத்­தி­ன­ருக்கும் அதி­யுன்­னத நிலையை வழங்­கிற்று. அந்தப் பேரி­ன­வா­தத்தைத் தழு­விய அர­சியற் கட்­சி­க­ளையும் அதன் அங்­கத்­த­வர்­க­ளையும் ஆட்­சி­பீ­டத்தில் ஏற்­றி­விட்டு அவர்­க­ளுக்குப் பேரி­ன­வா­தத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தற்குப் பூரண சுதந்­தி­ரமும் வழங்­கப்­பட்­டது.

அவ்­வாட்­சி­யா­ளர்­களின் குற்­றங்­களைத் தண்­டிக்க நீதி­மன்றம் தேவை­யில்லை, பௌத்த சங்­கத்­தி­னரின் கால­டி­க­ளிலே வீழ்ந்­தாற்­போதும் என்ற ஒரு நிலை உரு­வா­கிற்று. அந்த அமைப்­புதான் கடந்த ஏழு தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டில் பிரி­வி­னை­வா­தத்தை வளர்த்து, ஒரு பல்­லின சமூ­கத்தின் ஒற்­று­மையைச் சீர­ழித்து, உள்­நாட்டுப் போர் ஒன்­றையும் தோற்­று­வித்து, பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­ரோத்து அடை­யச்­செய்து பாரிய கடன் சுமைக்குள் நாட்டை மூழ்­கவும் வைத்­துள்­ளது. எனினும், மேற்­கு­றிப்­பிட்ட நட­வ­டிக்­கை­களுள் மிகவும் ஆபத்­தா­ன­துதான் நீதித்­து­றைக்குள் அர­சியல் புகுந்­த­மை­யாகும். அந்தத் தலை­யீடே பல நிர­ப­ரா­திகள் தண்­டிக்­கப்­ப­டு­வ­தற்கும் குற்­ற­வா­ளிகள் விடு­த­லை­யா­வ­தற்கும் அர­சி­யல்­வா­தி­களின் அடி­யாட்கள் குற்றம் இளைப்­ப­தற்கும் அடிப்­படைக் கார­ணமாய் அமைந்­தது. அந்தக் கார­ணத்­தி­னா­லேதான் கல­கப்­பி­ரியர் ஞான­சா­ரரும் இன்­று­வரை தனது துஷ்­ட­கைங்­க­ரி­யங்­களை பய­மே­து­மின்றி நிறை­வேற்றி வந்தார்.

ஆனாலும் ஞான­சாரர் சிறைக்குள் தள்­ளப்­பட்­டது இதுவே முதற்­த­டவை அல்ல. இதற்கு முன்­னரும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தற்­கா­கவும் ஒரு கேலிச்­சித்­தி­ரக்­கா­ரனின் மனை­வியைத் துன்­பு­றுத்­தி­ய­தற்­கா­கவும் அவர் சிறைக்குள் தள்­ளப்­பட்டார். ஆனால் முன்­னைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிறை­வேற்று அதி­கா­ரத்­தின்கீழ் அவ­ருக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்தார்.

அதற்கு முழுக்­கா­ரணம் சிரி­சே­னவின் அர­சியல் இலா­ப­நோக்கே. ஜனா­தி­ப­தியின் ஆட்­சிக்­காலம் முடி­வுறும் தறு­வாயில் அடுத்த தேர்­தலில் அவர் போட்­டி­யிட்டு வெல்­வ­தற்­காக பௌத்த சங்­கத்­தி­ன­ரி­னதும் பௌத்த வாக்­கா­ளர்­க­ளி­னதும் ஆத­ரவை நாடியே அந்த மன்­னிப்பை வழங்­கினார். ஆனாலும் அவ­ரை­வி­டவும் அர­சியல் பௌத்­தத்தில் மூழ்­கிய கோத்­தா­பய ராஜ­பக்ச 2019 தேர்­தலில் வென்று ஜனா­தி­ப­தி­யா­கி­யபின் கல­கக்­கார ஞான­சா­ரரை ஒரே சட்டம் ஒரே நாடு என்ற பேரி­ன­வாத நிய­தியை அமு­லாக்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­ச­பணிச் சபைக்குத் தலை­வ­ராக்­கி­யதை எவ்­வாறு சரி காண்­பதோ? சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் எந்த அள­வுக்கு இந்த மாணிக்­க­பு­ரியை உல­க­பார்­வையில் மங்­க­வைத்­துள்­ளது என்­ப­தற்கு இதை­வி­டவும் உதா­ரணம் வேண்­டுமா?

இவை ஒரு புற­மி­ருக்க, ஞான­சா­ரரை மீண்டும் மன்­னித்து விடு­தலை வழங்­கு­வ­தற்­கான ஒரு சூழ்­நிலை உரு­வா­கு­வதை இன்­றைய அர­சியல் நிலைப்­பாடு தோற்­று­விக்­கக்­கூடும் என்­ப­தற்கு சில அறி­கு­றிகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றுள் முக்­கி­ய­மா­னது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவின் நிலைப்­பாடு. தேர்­த­லொன்று இவ்­வ­ருட இறு­திக்குள் நடை­பெறும் என்­பதை அவர் அறி­வித்­துள்ளார். அந்தத் தேர்­தலில் அவர் கள­மி­றங்­கு­வதும் பெரும்­பாலும் நிச்­சயம். ஆனால் அவரை எதிர்த்துப் போரா­டப்­போ­கி­ற­வர்கள் ஒரு­வரா இரு­வரா அல்­லது மூவரா என்­பது இன்னும் தெரி­யாது. எவ்­வா­றா­யினும் அவர்­களுள் ஒருவர் தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக என்­பது உறுதி. அனு­ர­வுக்­கான ஆத­ரவு நாளுக்கு நாள் அதி­க­ரிப்­பதை அவ­தா­னிகள் உணர்­கின்­றனர். இந்த நிலையில் ஜனா­தி­ப­திக்­கான போட்டி இரு­முனைப் போட்­டி­யாக அமைந்­தாற்தான் அனு­ரவைத் தோற்­க­டிக்­கலாம் என்ற ஒரு நிலைப்­பாடும் தோன்­றி­யுள்­ளது. அதனைச் சாத்­தி­யப்­ப­டுத்­து­வ­தற்­காகப் பல முனை­வுகள் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றாயின் அந்த இரு­வருள் மற்­றவர் இப்­போ­தைய ஜனா­தி­ப­திதான் என்ற கருத்தும் வலு­வ­டைந்­து­கொண்டு வரு­கின்­றது.

இந்த நிலையில் பௌத்த சிங்­கள வாக்­கு­களுட் பெரும்­பா­லா­ன­வற்­றையும் சிறு­பான்மை இனங்­களின் வாக்­கு­க­ளையும் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வினால் திரட்ட முடி­யு­மாயின் அவர் நிச்­சயம் வெற்­றி­டைவார் என்­பது பல­ரதும் எதிர்­பார்ப்பு.

அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரது அர­சியல் நட­வ­டிக்­கை­களும் அமைந்­துள்­ளன. இந்தச் சூழலில் ஞான­சா­ரரின் சிறை­வாசம் ஒரு தலை­யி­டியை அர­சியல் வட்­டா­ரங்­களில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது. ஏற்­க­னவே பௌத்த சங்­கத்­தி­னருள் ஒரு குழு­வினர் ஞான­சாரர் தன் தவறை உணர்ந்து முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்­டுவிட்டார். ஆதலால் அவ­ருக்குப் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்று குரல் எழுப்­பி­யுள்­ளனர். அவர்­க­ளுடன் சேர்ந்து முஸ்­லிம்­களும் ஞான­சா­ரரின் மன்­னிப்பை ஏற்­றுக்­கொண்டு அவரின் விடு­த­லைக்கு ஆத­ர­வ­ளித்தால் நிலமை சுமு­க­மாக முடி­வுறும். எவ்­வாறு சிங்­கள பௌத்த வாக்­கு­களை முன்­வைத்து சிரி­சேன அன்­றைய சிறைக்­கைதி ஞான­சா­ர­ருக்கு மன்­னிப்பு வழங்­கி­னாரோ அதே­போன்ற ஒரு நிலைப்­பாடு இன்று விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் சிரி­சே­ன­வை­விட விக்­கி­ர­ம­சிங்ஹ மகா புத்­தி­சாலி. அர­சியல் தந்­தி­ரங்­களை அவ­ரது மாமா ஜே. ஆர். ஜெய­வர்த்­த­ன­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டவர்.

தனது சங்­கடம் தீர்­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் பிர­பல்­யங்­க­ளையும் முல்­லாக்­க­ளையும் துரும்­பாகப் பயன்­ப­டுத்தத் தயங்­க­மாட்டார். முஸ்லிம் பிர­பல்­யங்­களோ அற்ப சலு­கை­க­ளுக்­காக எதையும் செய்­வார்கள் என்­பதை அவர்­களின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாறு நன்கு உணர்த்தும். அந்த நிலையை அறிந்து அதே பிர­ப­லங்­க­ளையும் முல்­லாக்­களின் திருச்­ச­பை­யையும் மறை­மு­க­மாகத் தூண்டி இஸ்­லாத்தின் தார்­மீகப் பண்­பு­களின் அடிப்­ப­டையில் முஸ்லிம் சமூகம் ஞான­சா­ரரை மன்­னிக்­கத்­தயார் என்ற ஒரு பகி­ரங்க அறிக்­கையை வெளி­யிட்டால் அதன் வாக்குப் பெறு­மதி அளப்­ப­ரி­ய­தாக அமையும். அவ்­வா­றான ஒரு முயற்­சியில் சில முஸ்லிம் ஞான­சூ­னி­யங்கள் ஈடு­ப­டு­வ­தாக அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஆகையால் அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கை­யாகப் பின்­வரும் ஒரு விட­யத்தை இக்­கட்­டுரை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றது.

பெரு­மானார் அவர்கள் தனது சொந்த மாமா அபூ தாலிபின் பாவங்­களை மன்­னிக்­கு­மாறு அல்­லாஹ்­விடம் இறைஞ்ச முற்­பட்­ட­போது அது இறை­வனால் தடை­செய்­யப்­பட்­ட­தற்கு குர்­ஆனே சாட்சி. அதே குர்ஆன் நபி­க­ளாரின் பரம எதிரி அபூ­ல­ஹ­புக்கு என்ன நடந்­தது என்­ப­தையும் தெட்­டத்­தெ­ளி­வாக்கி உள்­ளது. இந்த நிலையில் ஞான­சா­ர­ருக்கு வக்­கா­லத்­துபேசி அவரை மன்­னிக்க ஆயத்­த­மா­வ­தற்கு இந்தச் சில்­லறைப் பிர­ப­லங்­க­ளுக்கு என்ன அதி­காரம் உள்­ளதோ? அவ­ருக்கு வழங்­கப்­பட்ட தண்­டனை நீதி­ய­ரசர் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கிய சலு­கையோ அல்­லது ஞான­சா­ரரின் மேலுள்ள வெறுப்போ அல்ல. அது சட்­டத்தின் நிலைப்­பாடு. அதனைச் செவ்­வனே நிறை­வேற்றி சட்­டத்தின் வலுவை நிலை­நி­றுத்­தி­யுள்ளார் அந்த நீதி­பதி. அந்தத் தண்­ட­னையை கைதி அனு­ப­வித்தே ஆக­வேண்டும். அந்த நீதி­ய­ர­ச­ரைப்­போன்று ஏனைய நீதி­ய­ர­சர்­க­ளையும் தமது கட­மையை அர­சியல் தலை­யீ­டின்றி இயங்­க­விட்­டி­ருந்தால் இலங்கை இன்­றைய இழி­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்க மாட்­டாது. அதனை உணர்ந்து கிளர்ந்­தெ­ழுந்­த­வர்­களே அர­க­ல­யவின் இளம் தலை­மு­றை­யினர். அமைப்­பையே மாற்று என்ற அவர்­களின் கோஷத்­தினுள் நீதித்­து­றையின் சுதந்­திரம் நிலை­நி­றுத்­தப்­படல் வேண்டும் என்­பதும் அடங்கும்.

அந்தத் தலை­மு­றையின் ஆதங்­கங்­க­ளுக்கும் இலட்­சி­யங்­க­ளுக்கும் குரல் கொடுத்து நாட்டின் இழி­நி­லை­யையும் உணர்ந்து இலங்­கையின் சமூகப் பொரு­ளா­தார அர­சியல் அமைப்­பையே முற்­றாக மாற்ற வேண்டும் என்ற தோர­ணையில் உத­ய­மா­ன­துதான் தேசிய மக்கள் சக்தி. ஏழரை தசாப்­தங்­க­ளாக நடை­மு­றை­யி­லி­ருக்கும் அமைப்­பினுட் சிக்கிச் சீர­ழிந்­தது போதாதா? சிறு­பான்மை இனங்­க­ளுக்கு விடி­வு­காலம் இந்த அமைப்­பின்­கீழே என்­றுமே ஏற்­ப­டாது. ராஜ­பக்­சாக்­களோ விக்­கி­ர­ம­சிங்­ஹாக்­களோ ஏன் அனுர குமார திஸ­நா­ய­கா­கூட இந்த அமைப்­பினுள் இருந்­து­கொண்டு எத­னையும் சாதித்­து­விட முடி­யாது. என­வேதான் முஸ்­லிம்கள் நிதா­னத்­துடன் வருங்­கால ஜனா­தி­பதிப் போட்­டியில் தமது தேர்தல் வாக்­கு­களை உப­யோ­கிக்க வேண்டும்.

இதற்­கி­டையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதால் தமி­ழர்­க­ளுக்கு என்ன பிர­யோ­சனம் என்ற ஒரு கேள்வி வடக்­கிலே இருந்து எழுந்­துள்­ளது. அந்தப் பாணி­யிலே சிந்­தித்தால் தமி­ழர்கள் தமி­ழர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதால் எத­னையும் சாதித்து விட­லாமா? அதே­போன்று முஸ்­லிம்கள் முஸ்­லிம்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்? அதைத்தானே இதுவரை செய்து ஏமாந்தார்கள்? இரண்டு இனங்களும் ஒன்றை மறந்துவிடக்கூடாது.

இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுந்தான் சொந்தம் என்று ஞானசாரர் கண்டி நகரிலே மூன்று வருடங்களுக்குமுன் பகிரங்கமாகப் பறைசாற்ற அதனை அரசாங்கத்திலுள்ள எந்த ஒரு அமைச்சரோ பிரதிநிதியோ மறுத்துரைக்கவில்லை. காலஞ்சென்ற மங்கள சமரவீரமட்டும் அதனை மறுத்துரைத்து அதனால் அவர் எவ்வாறு பௌத்த சங்கத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டார் என்பதை வரலாறு மறக்கவில்லை. எனவேதான் அமைப்பையே மாற்றினாலன்றி இலங்கைக்கு விடிவுகாலம் கிடையாது என்பதை இளம் தலைமுறை உணர்ந்துவிட்டது. அதற்குக் குரல்கொடுக்கின்றது தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பீடம். அவர்கள் இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை வன்முறைகொண்டு சாதிக்க முனையாது பொதுஜன வாக்குகளைப்பெற்றுச் சாதிக்க முன்வந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் சிங்களவர்களும் உண்டு, தமிழர்களும் உண்டு முஸ்லிம்களும் உண்டு. ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு.

எனவேதான் ஞானசாரரை மன்னித்து விடுதலைசெய்து அதன்மூலம் பௌத்த மக்களின் வாக்குகளைத் திரட்டி ஆட்சிபீடம் ஏறி பழைய அமைப்பையே மீண்டும் தொடர்வதற்கு முஸ்லிம்கள் துரும்பாகக் கூடாது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமாவை அரகல இளவல்களின் முதல் வெற்றியென்றால் ஞானசாரரின் சிறைவாசத்தை அவர்களின் இரண்டாவது வெற்றியெனக் கருத இடமுண்டு.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.