பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அல்லல்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காஸா சிறுவர் நிதியத்திற்கு பல்வேறு வழிகளிலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய முதற்கட்டமாக ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சேகரிக்கப்படவுள்ள நிதியும் அடுத்த கட்டமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.
இந்நிதி யாரிடம் கையளிக்கப்படுகிறது? இஸ்ரேலினால் முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவுக்கு இந்நிதி சென்றடையுமா? என்ற கேள்விகள் தற்போது பலராலும் எழுப்பப்படுகின்றன. இது தொடர்பில் பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் விடிவெள்ளி சம்பந்தப்பட்ட தரப்புகளை தொடர்புகொண்டு ஆராய்ந்தது. இதற்கமைய குறித்த நிதியானது காஸா மக்களுக்கு கிடைக்கக் கூடிய தரப்பிடமே கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. பலஸ்தீன தூதரக தகவல்களும் இதனை உறுதி செய்தன.
பலஸ்தீன விவகாரங்களுக்கென ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பிரத்தியேகமாக இயங்கும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண பணியகத்தின் வங்கிக் கணக்கிற்கே இலங்கை அரசாங்கம் இந்நிதியை அனுப்புகிறது. முதற்கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் நிதி தமது வங்கிக் கணக்கிற்கு கிடைத்து விட்டதாக இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே ப்ரான்ச் தெரிவித்துள்ளார். குறித்த நிதி சந்தேகத்திற்கு இடமின்றி காஸா மக்களுக்கு கிடைக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
உண்மையில் ஜனாதிபதியின் ஆலோசனையில் தாபிக்கப்பட்ட இந்த நிதியத்திற்கு பங்களிக்க இலங்கை மக்கள் காட்டிவரும் ஆர்வம் மெச்சத்தக்கதாகும். தனவந்தர்கள் மாத்திரமன்றி ஏழை எளியவர்கள் கூட தம்மால் இயன்ற பங்களிப்புகளை நல்கி வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் நிதிதிரட்டும் பணிகள் பள்ளிவாசல்கள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட நிதி சேகரிப்பின் மூலம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டமை சிறந்த முன்மாதிரியாகும். அதேபோன்று ஏனைய பிரதேசங்களிலும் மில்லியன் கணக்கான ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி முஸ்லிம் பாடசாலைகள், வலயக் கல்வி அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன.
இந்நிதியத்திற்கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பங்களிப்புச் செய்யலாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எனவே இதுவரை நிதி சேகரிக்காத முஸ்லிம் பிரதேசங்களில் எஞ்சியுள்ள காலப்பகுதியில் நிதிகளை சேகரிக்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகும்.
ஒரு வேளை உணவுக்குக் கூட அல்லலுறும் எங்கள் பலஸ்தீன சொந்தங்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இந்த பெருநாள் காலங்களில் வீண் விரயமான செலவுகளைக் குறைத்து காஸா உறவுகளுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வர வேண்டும். இந்த நிதி உரிய வகையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்தப் பெருநாள் தினங்களில் பலஸ்தீன மக்களுக்காக பிராரத்திப்போம்.
அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!
- Vidivelli