கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படும் விடயத்தில் புத்திஜீவிகளும் உலமாக்களும் கரிசனை செலுத்த வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மைத்திரி நகைச்சுவையாக எடுப்பது பாரதூரமானது என்கிறார் இம்ரான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதானது எதிர்காலத்தில் ஏனைய அரச பதவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இது விடயமாக முஸ்லிம் புத்திஜீவிகளும் உலமாக்களும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார். குறித்த பயங்கரவாத தாக்குதலே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயுர்வேத ஒழுங்குவிதி சட்டக் கோவை தொடர்பில் கடந்த திங்களன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஆயுர்வேத வைத்தியசாலை
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. அவை, கப்பல்துறை வைத்தியசாலை, நிலாவெளி வைத்தியசாலை, கிண்ணியா நடுத்தீவு வைத்தியசாலை என்பனவாகும். நிலாவெளி மற்றும் கப்பல்துறை வைத்தியசாலைகளில் போதுமான அளவு ஆளனி மத்திய அரசினால் வழங்கப்பட்டு இயங்குகின்றன.
ஆனால், கிண்ணியா வைத்தியசாலை 2014 ஆம் ஆண்டு கிழக்குமாகாண சுகாதார அமைச்சினால் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு இயங்குகின்றபோதிலும், மத்திய அரசினால் இதுவரை ஆளணி அனுமதி வழங்கப்படாதுள்ளது. இதனால் இங்கு பாரிய ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக ஒரு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையிலே, 20 கட்டில்களுடன் உள்ளக நோயாளர் சிகிச்சை பிரிவு இருக்க வேண்டும். எனினும், இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமாக தலா 5 கட்டில்களுடன்தான் உள்ளக சிகிச்சை பிரிவு காணப்படுகிறது.
எனவே, அமைச்சர் இதுவிடயத்தை கருத்திற்கொண்டு கிண்ணியா நடுத்தீவு வைத்தியசாலைக்கான ஆளணி வசதியினை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இங்கு நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்கிறேன்.
கிழக்கு அதிகாரிகள் புறக்கணிப்பு
இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் அதிகாரிகளுக்கு எதிரானதொரு விரோதப்போக்கு தொடர்கின்றதா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் பதவி நியமன விடயத்தில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர் பதவிகளுக்கு எந்தவொரு முஸ்லிம் அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை என கடந்த 2023, ஜூன் மாதத்தில் இந்த சபையில் நான் வெளிப்படுத்தியிருந்தேன். எனினும் இது விடயமாக இது வரை கவனம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஐந்து அமைச்சுகளில் கடந்த காலங்களில் இரண்டு தமிழ் செயலாளர்களும் இரண்டு முஸ்லிம் செயலாளர்களும் ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்திருக்கின்றனர். இந்த மாகாணத்திலே, இன சமநிலையை கருத்திற்கொண்டு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவந்தது.
ஆனால், தற்போது கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர்கள் நியமிக்கப்படாமையானது ஒரு கவலைக்குரிய விடயமாகும். முதலமைச்சின் அமைச்சு, சுகாதார அமைச்சு, வீதி அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளிலும் தமிழ் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கல்வி அமைச்சிலும் விவசாய அமைச்சு ஆகிய இரண்டிலும் சிங்கள செயலாளர்கள் கடமைபுரிகின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புறக்கணித்து கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே நான் பார்க்கிறேன்.
அரசியல் தலைமைகளும் இந்த விடயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதனால் கிழக்கு மாகாணத்திலே சமீபகாலமாக காட்டப்படும் முஸ்லிம் விரோதப்போக்காக இதனை அவதானிக்க முடிகிறது. இந்த நிலைமை நீடிக்குமாயின் கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணியாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
ஆகவே, இந்த ரணில் – ராஜபக்ச ஆட்சியில் இன்னும் முஸ்லிம் விரோதப்போக்கு நீடிப்பதையே காட்டுகிறது. எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் விழித்துக்கொள்ள வேண்டிய அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள், முஸ்லிம் உரிமைகள் தொடர்பில் பேசக்கூடியவர்கள் இது விடயமாக கரிசனை காட்டுவதாக தெரியவில்லை. எனவே, சமூக விடயத்தில் அக்கறை செலுத்தும் சமூக செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் உலமாக்களும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
விவகாரம்
நேற்று (கடந்த ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் என்பதால் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் பற்றி இன்று அதிகமாக பேசப்படுகிறது. இந்த பாராளுமன்றத்திலும் இது சம்பந்தமாக பல்வேறு விடயங்களை பேசியிருக்கிறோம். ஏன் இம்முறை அரசாங்கமும் ஈஸ்டர் தின தாக்குதலை மையப்படுத்தி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டே ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்னர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கைதுசெய்வோம், இதற்கு நீதியை பெற்றுக்கொடுப்போம், வெளிநாடுகளின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் சொன்னார்கள். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாக இவ்விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக தேர்தல் காலத்தின் பிரசாரத்துக்காக இவ்விடயத்தை பேசி பின்னர் ஏமாற்றும் செயற்பாடாகவே மாறியிருக்கிறது.
நாடு தற்போது மோசமான நிலையை அடைவதற்கு இந்த ஈஸ்டர் தின தாக்குதலே பிரதான காரணமாகும். அத்தோடு, ஆட்சி மாற்றத்திற்கும் அதுவே காரணியாக அமைந்தது. இந்த பயங்கரமான தாக்குதல் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகைச்சுவையாக அல்லது வேடிக்கைமிக்க விடயமாக இன்று மாறியிருக்கிறது. அவர்கள் இதனை கைவிட வேண்டும். குறிப்பாக ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும். இந்த தாக்குதலால் இன ரீதியிலான முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே, இதுவிடயமாக நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
ஈஸ்டர் தின தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடைய நிலை, அதில் கால்களை இழந்த, காயமடைந்தவர்களின் நிலைமைகள் குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. அவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?
இந்த பயங்கர தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எவ்வாறு பார்க்கப்பட்டது, நடத்தப்பட்டது என்பதையும் நாங்கள் மறந்துவிட முடியாது. இன வன்முறைக்கான ஒரு காரணியாக இருந்த இந்த தாக்குதலை வெறும் வேடிக்கையாக பார்த்து கடந்து செல்ல முடியாது. இந்த செயற்பாடு மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும் என்று சொல்கிறார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்து அதனை தெளிவாக சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் ஆட்சியில் இருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. நல்லாட்சி அரசாங்கம் வீழ்த்தப்பட்டமைக்கு இந்த ஈஸ்டர் தாக்குதலே பிரதான காரணமாகும். அப்போது, எதுவும் பேசாமல், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டு, இன்று தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என எனக்குத் தெரியும் என்று கூறுவதானது இந்த நாட்டுக்கு செய்கின்ற துரோகமாக பார்க்கிறோம்.
இந்த விடயம் ஒரு இனத்தின் பிரச்சினையல்ல, அல்லது இரு இனங்களின் பிரச்சினையல்ல, மாறாக முழு நாட்டினதும் பிரச்சினையாகும். ஏனென்றால், குறித்த தாக்குதலின் பின்னர் நாட்டிலுள்ள இனங்களுக்கிடையே குரோதங்கள் மேலும் தீவிரமடைந்ததை அவதானிக்கிறோம்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரத்தை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளாது, பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொண்டு பொறுப்பு கூற வேண்டும். விடயத்தை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.- Vidivelli