ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!
ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் ; இஸ்ரேலுக்கு ஆதரவாக வீட்டோவை பயன்படுத்துவதை தவிர்த்தது அமெரிக்கா
எம்.ஐ.அப்துல் நஸார்
இதேபோன்ற முந்தைய தீர்மானங்களை வீட்டோ செய்த அமெரிக்கா, இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டதன் மூலம், இத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உதவியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஏனைய அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்த நிலையில், 14-0 என்ற முடிவு கிடைக்கப் பெற்றதும் கூட்ட மண்டபத்தில் பெரும் கரகோஷசம் எழுந்தது.
இந்த தீர்மானத்தில், புனித ரமழான் மாதத்தில் நீடித்த, நிலையான யுத்தத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஹமாஸ் மற்றும் ஏனைய போராளிக் குழுக்களால் ஒக்டோபர் 7 ஆந் திகதி பிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் ‘தங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சர்வதேச சட்டத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும்’ என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. ‘காஸாவின் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் சென்றடையும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதும், பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும்’ என்ற அவசரத் தேவையையும் அத் தீர்மானம் வலியுறுத்துகிறது. அத்துடன் ‘மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் காணப்படும் அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும்’ எனவும் அத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இறுதி நிமிடத்தில் ரஷ்யா யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்பாக ‘நிரந்தர’ என்ற வார்த்தையை நீக்கி, அதற்கு பதிலாக ‘நீடிக்கும்’ என்ற வார்த்தையை உட்சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்ஸியா அதனை பின்வருமாறு விளக்கினார், ‘யுத்த நிறுத்தம் முடிவடைந்ததும், இஸ்ரேல் எந்த நேரத்திலும் காஸா மீது தனது இராணுவ நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இவ்வாறான பலவீனமான வார்த்தைகள் வழிவகுக்கும்’ எனத் தெரிவித்து குறித்த பலவீனமான வார்த்தைத் திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரினார், ஆனால் அது நிறைவேறவில்லை.
ஸ்லோவேனியா, சுவிட்சலாந்து, மொசாம்பிக், கயானா, ஈக்வடோர், ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன், அரபு முகாமின் தற்போதைய உறுப்பு நாடான அல்ஜீரியா வெற்றிகரமான இத் தீர்மானத்தை வரைந்திருந்தது.
எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், காஸாவுக்கான மனிதாபிமான உதவியின் அளவை அதிகரிப்பதற்கும், மேற்கொண்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை இந்த வரைவு பாராட்டியுள்ளது.
‘வொஷிங்டன் இந்த ‘கட்டுப்பாடற்ற’ தீர்மானத்தில் உள்ள சில முக்கியமான நோக்கங்களை முழுமையாக ஆதரிக்கிறது, ஆனால் ஹமாஸைக் கண்டிக்கத் தவறியுள்ளமை உட்பட அனைத்து விடயங்களிலும் உடன்படவில்லை’ என ஐ.நா.வுக்கான அமெரிக்க பெண் தூதுவர் லிண்டா தொமஸ்-கிரீன்பீல்ட் தெரிவித்தார்.
அமெரிக்க பெண் தூதுவர் ‘கட்டுப்பாடற்ற’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் கருத்து வெளியிடுைகயில் ‘பாதுகாப்பு சபையின் அனைத்துத் தீர்மானங்களும் சர்வதேச சட்டமாகும்.’ எனத் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான இங்கிலாந்து நிரந்தரப் பிரதிநிதி பார்பரா உட்வோர்ட், பாதுகாப்பு சபையின் அனைத்துத் தீர்மானங்களும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும், அது ‘உடனடியாக’ நடக்க வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.
இத் தீர்மானம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறதா இல்லையா என ஐ.நா.வுக்கான பாலஸ்தீனத்தின் நிரந்தர பார்வையாளர் ரியாத் மன்சூரிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு ஒரு இடைவெளி கொடுங்கள்’ எனத் தெரிவித்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் அதை செயல்படுத்தத் தவறினால், பாதுகாப்பு கவுன்சில் ‘ 7 ஆம் அத்தியாயத்தினை செயற்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹமாஸ் தாம் தடுத்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருந்திருந்தால், பல மாதங்களுக்கு முன்பே யுத்த நிறுத்தம் எட்டப்பட்டிருக்கும் என தொமஸ்-கிரீன்பீல்ட் தெரிவித்தார்
‘மாறாக, ஹமாஸ் தொடர்ந்து அமைதியாக இருக்கின்றது, வீதித் தடைகளை ஏற்படுத்துகின்றது, காசா நகரங்களுக்கு கீழேயும் பொதுமக்களின் உள்கட்டமைப்பின் கீழேயும் சுரங்கங்களில் இருந்தவாறு அச்சுறுத்துவதோடு பொதுமக்கள் மத்தியில் மறைந்திருக்கின்றது,’ என அவர் மேலும் தெரிவித்தார்.
‘ரமழான் மாதத்தில், நாம் அமைதிக்கு திரும்ப வேண்டும் என்பதை இந்த தீர்மானம் சரியாக ஏற்றுக்கொள்கிறது. மேசையில் உள்ள ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஹமாஸ் அதைச் செய்ய முடியும். முதலாவது பணயக்கைதியை விடுவித்தவுடன் நிறுத்தம் ஆரம்பிக்ககலாம். எனவே அதைச் செய்ய ஹமாஸ் மீது நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இத் தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். ‘அவ்வாறு செய்யத் தவறுவது மன்னிக்க முடியாத ஒன்றாக மாறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
‘இறுதியாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்குப் பொறுப்பான முதன்மை அமைப்பு என்ற வகையில் ஐ.நா அதன் பொறுப்பை ஏற்றுள்ளது’ என ஐ.நா.வுக்கான அல்ஜீரியாவின் நிரந்தரப் பிரதிநிதியான அமர் பெண்ட்ஜாமா, சபைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
‘பாலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தக்களரி நீண்ட காலமாக தொடர்கிறது. மிகக் காலதாமதமாகும் முன்னர் இந்த இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்லோவேனியாவின் தூதுவர் சாமுவேல் ஸ்போகர், திங்கட்கிழமை வாக்கெடுப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ‘மத்திய கிழக்கு மக்களுக்கு ஒரு முக்கியமான நாளாக இது இருக்கும். இது துப்பாக்கிகளை அமைதிப்படுத்தவும், கொலைகளை நிறுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், மேலும் அமைதியைக் கொண்டுவரவும் உதவும்’ என நம்பிக்கை தெரிவித்தார். ‘காஸா பொதுமக்களின் வேதனை மற்றும் துன்பத்தின் முடிவின் ஆரம்பத்தைக் குறிக்கும் நாளாக இது இருக்கும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
‘காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் உதவிகளை காஸாவுக்கு அதிகளவில் அனுப்பி வைப்பதற்கு சபை கோரிக்கை விடுத்துள்ளமை பொருத்தமான நேரம், ஏனெனில் காஸா தொடர்பில் சபையின் மௌனம் காது கேட்காத நிலையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது’ என ஐ.நா.வுக்கான பிரான்ஸின் நிரந்தரப் பிரதிநிதி நிக்கோலஸ் டி ரிவியர் தெரிவித்தார்.
ஆனால், ‘இந்த நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை’ என்றும், நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவும், காஸாவை மீட்கவும், ஸ்திரப்படுத்தவும் உதவுவதற்கும், அனைத்திற்கும் மேலாக பாதுகாப்பு சபை ஒன்றுபட்டு அரசியல் செயல்முறையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். உடனடியாக செயலில் இறங்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஆறு மாதங்களில், 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோர் ஊனமுற்றுமுள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மற்றும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சபை இறுதியாக உடனடி யுத்த நிறுத்தத்தைக் கோரியுள்ளது’ என தெரிவித்த மன்சூர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரை அடக்குவதற்குப் போராடினார்.
பாலஸ்தீனர்கள் ‘தங்கள் வீடுகளில், தெருக்களில், வைத்தியசாலைகளில், நோயாளர் காவு வண்டிகளில், தற்காலிக தங்குமிடங்களில், மற்றும் கூடாரங்களில் கூட கொல்லப்பட்டுள்ளனர்.’ இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது.
‘இத்தகைய குற்றங்களுக்கான கற்பிக்கப்படும் நியாயங்களை ஏற்றுக்கொள்வது மனித நேயத்தை குழிதோண்டி புதைப்பதற்கும், சர்வதேச சட்டவாட்சியை மீள சீர் செய்ய முடியாத அளவிற்கு அழித்து விடுவதற்கும் சமமானதாகும் எனவும் மன்சூர் தெரிவித்தார்.
‘இஸ்ரேல் நீண்ட காலமாக சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாடாகக் கருதப்பட்டது, அது ஒரு சட்டவிரோத நாடாக செயல்படும் போது இனி அதை மறைக்க வேண்டியதில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார். ‘இனச் சுத்திகரிப்பு தொடக்கம் இனப்படுகொலை வரை, இஸ்ரேலின் செயல்களால் எமக்கு வேதனை ஏற்படுகிறது, இதற்குக் காரணம் அவர்களது அட்டூழியங்களுக்கு தண்டனை வழங்கப்படாமையாகும்.’
ஐ.நா பாதுகாப்பு சபையில் காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கான தீhமானம் நிறைவேற்றப்பட்டமையினை உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வொஷிங்டனுக்கு செல்லவிருந்த இஸ்ரேலிய தூதுக்குழுவின் விஜயத்தை இரத்து செய்தார்.- Vidivelli