அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள்
அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம்
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட தெஹிவளை, பேருவளை பகுதியில் அமையப் பெற்றுள்ள இரு சொகுசு வீடுகள் அல் கைதா மற்றும் என்.டி.ஜே. எனப்படும் தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்புக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
குறித்த இரு வீடுகளினதும் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் சுவீகரிப்பு தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு வந்த போதே சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அதன்படி குறித்த இரு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஷிரான் குனரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
நேற்று இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்த போது, பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த இரு வீடுகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக நம்பப்படும் லுக்மான் தாலிப் என்பவருடன் இவ்வீட்டு உரிமையாளர்கள் மிக நெருக்கமான தொடர்புகளை பேணியுள்ளதாகவும், இவ்வீடுகள் தேசிய தெளஹீத் ஜமா அத் மற்றும் அல் கைதா அமைப்புக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அவ்வீடுகள் அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அரச சட்டவாதி சமிந்த விக்ரம குறிப்பிட்டார். அதன்படி இந்த இரு வீடுகளை பொலிஸார் கையகப்படுத்த ஜனாதிபதி விடுத்த உத்தரவு நியாயமானது எனவும் அதனூடாக மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் எவையும் மீறப்படவில்லை என்பதால் மனுக்களை நிராகரிக்குமாறும் அவர் கோரினார்.
எனினும் மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் நிராகரிப்பதாக அறிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றதிகாரம் மிக்க தரப்பு இவ்விரு வீடுகளையும் கையக்கப்படுத்த எடுத்த நடவடிக்கை முற்றிலும் சட்டத்துக்கு முரணானது என அவர் குறிப்பிட்டார். அரச சட்டவாதி கூறுவதை போல எந்த தகவலும் விசாரணையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
குறித்த இரு வீடுகளின் உரிமையாளர்களான மொஹம்மட் ஹியதுல்லாஹ் மற்றும் மொஹம்மட் ஹசீம் ஆகியோர் இம்மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன் மனுக்களில் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.– Vidivelli