ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கையின் மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழி சுமத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. புரியாத புதிராகவே இருக்கிறது.
அரசாங்கம் நியமித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையை நிறைவு செய்து 70 ஆயிரம் பக்கங்களில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. இந்த 70 ஆயிரம் பக்கங்களில் 1500 பக்கங்களை அரசாங்கம் எமக்கு வழங்கவில்லை. அவற்றை அரசு சூட்சுமமாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை அண்மையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
மேலும் சஹ்ரான் குழுவினருடன் தொடர்பிலிருந்தார்கள் எனக் குற்றம் சுமத்தி 23 முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 23 பேரும் இத்தாக்குதலின் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் ஆகிய முக்கியமான சாட்சிகளால் வழங்கப்பட்ட சாட்சியங்களையே அரசாங்கம் எம்மிடம் கையளிக்கவில்லை. இது பாரிய சந்தேகத்துக்குரியதாகும். சஹ்ரான் ஹாசிமின் குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் சாரா ஜெஸ்மின். அவரது சாட்சியங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புதிய தகவல்கள் அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்ட வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மிகவும் முக்கியமாக தகவலொன்றினை பகிரங்கப்படுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை இலங்கை மாத்திரமல்ல சர்வதேசமும் அறிந்து கொள்ள காத்திருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பின்நின்று நடாத்தியவர்களை உண்மையாக நான் அறிவேன். நீதிமன்றம் என்னிடம் கோரிக்கை விடுத்தால் அல்லது உத்தரவொன்றினைப் பிறப்பித்தால் அது தொடர்பில் நான் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருக்கிறேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். அத்தோடு நான் வழங்கும் தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பது நீதிவான்களின் பொறுப்பாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பான வழக்கில் எனது ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளே ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலை பின்நின்று யார் நடத்தினார்கள் என்பதை இதுவரை எவரும் தெரிவிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலே நான் எனது கருத்தினை வெளியிட்டேன். அத்தோடு இது தொடர்பில் நான் நீதிமன்றில் எனது வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். நீதிமன்றில் நான் இரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புகிறேன். பகிரங்க சாட்சியம் வழங்கினால் தெளிவாக எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். அத்தோடு எனது குடும்ப உறுப்பினர்களின் உயிர்கள் கூட அழிக்கப்படலாம். நான் அரசியல் பின்னணியை நோக்காகக் கொண்டோ அரசியல் சுயலாபம் கருதியோ இந்த வாக்குமூலத்தை அளிக்கத் தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்து தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைத் தேசத் துரோகியென்றும் என்னைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. இத்தாக்குதல் தொடர்பில் நான் பாரிய நெருக்கடிகளை அரசியல் ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் எதிர்கொண்டேன். தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு அறிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்பேன். குண்டுத்தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் எனக்கு அறிவிக்கவில்லை என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் என்னைப் பலவீனப்படுத்துவதற்காகவே குண்டுத்தாக்குதல் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இந்தத் தாக்குதலை நடத்தியது யார்? பிரதான சூத்திரதாரி யார் என்பதை நான் அறிவேன் என்றும் கூறினார்.
காத்திருக்க வேண்டாம்
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை மைத்திரிபால சிறிசேன காத்திருக்காமல் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பது ஒரு வகையில் குற்றமாகும்’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மைத்திரிபால சிறிசேனவின் கருத்து பாரதூரமானது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் வரை காத்திருக்காமல் அவர் உடனே தனக்குக் கிடைத்துள்ள தகவல்களை நீதிமன்றம் முன்வைக்க வேண்டும். ஏனென்றால் அவரது ஆட்சிக்காலத்திலே குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் மைத்திரிபால சிறிசேனவே.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும். கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும். அரசாங்கம் நீதியானதும், நேர்மையானதுமான பக்கசார்பற்ற விசாரணையை நடத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். 500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள். பலர் ஊனமுற்றனர். பலகோடிக்கணக்கான சொத்துகள் சேதமடைந்தன.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிபீடமேறிய முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மற்றும் சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை ‘அரகலய’ போராட்டத்துக்குப் பின்பு பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இத்தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஸ்கொட்லாந்து பொலிஸாரை நியமிக்கவுள்ளதாக உறுதியளித்தார். என்றாலும் அது வெறும் உறுதி மொழி மாத்திரமே. இது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இப்போது புதிய கதை கூறப்படுகிறது. இத்தாக்குதலை நடத்தியது யார் என்ற உண்மையை இதுவரை எவரும் கூறாத நிலையில் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நீதிமன்றம் தனக்கு உத்தரவிட்டால் விபரங்களை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது பாரதூரமான விடயமாகும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த போதே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தோடு அவருக்கு எதிராக இது தொடர்பில் பல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலப்பகுதியில் அவர் தனது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் நீதிமன்றத்திலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் அவர் பல உண்மைகளை மறைத்துள்ளதுடன் நாட்டு மக்களுக்கு பாரிய துரோகமிழைத்துள்ளார்.
இந்த தாக்குதல் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுத்தது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது. மதங்களுக்கிடையில் குரோதம் விதைக்கப்பட்டது. இவையனைத்தும் பாரிய குற்றமாகும். எனவே மைத்திரி உடனடியாகக் கைதுசெய்யப் பட வேண்டும். இவருக்கு எதிராக பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக அமைதிக்கான மத்திய நிலையம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து விடயங்களையும் அறிந்துள்ளார். இதனை அவரே கூறியுள்ளார். குற்றம் ஒன்று தொடர்பில் உண்மையை அறிந்திருந்து அதனை மறைப்பது பாரிய குற்றமாகும். குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அரசுக்கு நல்லவோர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாட்டுக்கு இழைக்கும் பாரிய குற்றமாகும்’ என சமூக மற்றும் அமைதிக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட் தந்தை ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மைத்திரிபால சிறிசேன இத்தாக்குதல் தொடர்பான விபரங்களை அறிந்திருந்தார். ஆனால் இவ்விபரங்களை ஏதோ ஒரு காரணத்தினால் வெளிப்படுத்தவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக செயற்பட வேண்டும். இத்தாக்குதலின் சூத்திரதாரியை இனங்காண சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. உடனடியாக உண்மை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
மைத்திரிபால வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரிடம் சுமார் 5 ½ மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
பொலிஸ்மா அதிபர் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமையவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.50 மணிவரை வாக்குமூலமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தனக்குத் தெரிந்த உண்மையை கடந்த 5 வருட காலமாக மறைத்து வைத்திருந்தமை பாரிய குற்றமாகும் எனவும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான எதிர்க்கட்சிகள், கொழும்பு மறைமாவட்ட பேராயர் இல்லம், சமூக மற்றும் அமைதிக்கான மத்திய நிலையம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்ததுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் மறைப்பது சட்டரீதியாகக் குற்றமாகும். அதனால் அத் தகவல்களை மறைக்காது அவர் வெளிப்படுத்த வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைத்திரிபால தான் அண்மையில் அறிந்து கொண்ட தகவல்களை பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமே தெரிவிக்க வேண்டும். நீதிமன்றில் தெரிவிப்பதற்கான முறைமை எமது நாட்டில் இல்லை. இத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கத்தோலிக்க சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கைது செய்யுங்கள்
‘நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். அவர் 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந்துள்ளார். அவரை நாம் நன்கு அறிவோம். உண்மைகளை ஒருபோதும் அவர் பகிரங்கப்படுத்தமாட்டார்’ என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவரை உடன் கைது செய்ய முடியாது. அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என பொலிஸ் மாஅதிபர் கூறுவது தவறு. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5 ஆவது உறுப்புரையில் ‘பயங்கரவாத செயற்பாடு தொடர்பான தகவல் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்த நபர் அதனை பொலிஸுக்கு அறிவிக்காமல் இருப்பது 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்குரியதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் நீதிமன்றுக்கு
மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் மற்றும் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நீதிமன்றுக்கு கையளிக்கப்படவுள்ளது.
அத்தோடு மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பான விசாரணையின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியது போன்று மைத்திரியின் புதிய அறிவிப்பு தொடர்பில் உண்மை கண்டறியப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகம் துடைத்தெறியப்பட வேண்டும்.- Vidivelli