(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மருதானை, சுதுவெல்ல ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான அலவி மெளலானா சனசமூக நிலையத்தை தனியார் ஒருவர் பலாத்காரமாக கையகப்படுத்திக்கொள்ளும் முயற்சிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான கித்சிரி ராஜபக்ஷவுக்கு எதிராகவே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாநகரசபை உறுப்பினரான அஜித் ஸ்ரீ பெரேராவினால், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிரி ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் ரிட்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முன்வைத்த காரணங்களை கவனத்திற் கொண்டே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரகோன் இந்த தடையுத்தரவினை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
குறிப்பிட்ட அலவி மெளலானா சனசமூக நிலையத்தை அப்பிரதேசத்தில் வதியும் பெரும்பான்மையான குறைந்த வருமானம் பெறுவோர் தங்களது திருமண வைபவங்கள் உட்பட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சனசமூக நிலையத்தை மறைத்து பாரிய அளவில் மதிலொன்றினை நிர்மாணித்து பிரதிவாதியான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பலாத்காரமாக கையகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிரதேச மக்கள் பல்லேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த சட்டவிரோத நிர்மாணத்தை தடை செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் வாதிட்டாார்.
ரிட்மனுவில் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மாநகர சபையின் ஆணையாளர், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிரி ராஜபக்ஷ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.- Vidivelli