சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த ரமழானில் இதுவரை எட்டு மில்லியன் பேர் உம்ரா யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
ரமழான் தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை 8,235,680 உம்ரா யாத்திரிகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர்.
இவர்களில், 7,259,504 பேர் தங்கள் உம்ராவை முடித்துள்ளதுடன் சுமார் 976,176 பேர் தற்போது சவூதியில் தங்கியுள்ளனர்.
இவர்களில் 980,556 பேர் தரைவழியாகவும் 700,983 பேர் விமானங்கள் மூலமும் சவூதியை வந்தடைந்துள்ளதுடன் மேலும் 54,141 பேர் கடல் மார்க்கமாக வருகை தந்துள்ளனர்.
இக் காலப்பகுதியில் இளவரசர் முகம்மது பின் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் 1,919,971 வருகைகளையும் 1,437,849 புறப்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. சராசரியாக தினசரி 6,579 பேர் வருகை தந்துள்ளதுடன் 5,613 உம்ரா யாத்திரிகர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை ரமழானின் இறுதிப் பத்து தினங்களில் உம்ரா யாத்திரையில் ஈடுபடவும் இஃதிகாப் அமலில் ஈடுபடவும் பெருந்திரளானோர் சவூதி அரேபியாவுக்கு வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக சன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சகலருக்கும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கிலும் ரமழானில் ஒருவர் ஒரு தடவை மாத்திரமே உம்ரா கடமையில் ஈடுபட முடியும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli