மைத்திரியை அழைத்து சாட்சியம் பெறுங்கள்
உயிர்த்த ஞாயிறு தின சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் கோரிக்கை
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்து சாட்சியம் பெறுமாறு அவ்வழக்கில் 10 பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் கோரிக்கை முன் வைத்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பிரதிவாதிகளுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுக்களும் வாசித்து முடிக்கப்பட்டன.
இந் நிலையில் தாம் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் நிரபராதிகள் என பிரதிவாதிகள் அறிவித்தனர். இதனையடுத்தே சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 60 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு குறுக்கு விசாரணைகளும் செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சுமத்தப்பட்ட 25 பேரில் 17 ஆவது பிரதிவாதி விளக்கமறியலில் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மட்டும் சட்ட மா அதிபர் மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதி சட்ட மா அதிபரால் 23270 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நடவடிக்கைகள் கடந்த 2023 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் திகதி ஒதுக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், இவ்வழக்கில் இதுவரை சுமார் 60 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ள போதும், பிரதிவாதிகளுக்கு எதிராக அதில் எந்த வெளிப்படுத்தல்களும் இல்லை என சுட்டிக்காட்டி விஷேட சமர்ப்பணம் ஒன்றினை முன்வைத்தார்.
‘இவ்வழக்கில் 10 பிரதிவாதிகளுக்காக நான் ஆஜராகின்றேன். அதில் ஒருவர் வழக்கு விசாரணை ஆரம்பத்திலேயே உயிரிழந்துவிட்டார். முறைப்பாட்டாளர் அறியா தரப்புடன் இணைந்து சதி செய்ததாக எனது சேவை பெறுநர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடக்கும்போது நாட்டின் தலைவராக இருந்த, பாதுகாப்பு அமைச்சராக இருந்த, முப்படைகளை வழிநடாத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தாக்குதலின் சூத்திரதாரியை தனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் ஒன்றின் முன் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் கூறியுள்ளார்.
அப்படியானால், இந்த ட்ரயல் அட்பார் நீதிமன்றை விட அதற்கு சிறந்த ஒரு இடம் இருக்க முடியாது. முதலில் மைத்திரிபால சிறிசேனவை மன்றுக்கு அழைத்து அவரது சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கை முன்கொண்டு செல்ல முடியுமா என்பதை தீர்மானிக்கலாம். எனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை முதலில் சாட்சிக்கு அழைத்து அவரது சாட்சியத்தை நெறிப்படுத்தி குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்’ என சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் கோரினார்.
எனினும் இவ்வழக்கில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர அக்கோரிக்கை தொடர்பில் பின்வருமாறு பதிலளித்தார்.
‘முன்னாள் ஜனாதிபதியின் கூற்று தொடர்பில், அவரை சாட்சியாக அழைப்பது தொடர்பில் இப்போது தீர்மானிக்க முடியாது. அதற்கான நேரம் இதுவல்ல. அவர் இப்போது சி.ஐ.டி. க்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் உள்ளடக்கம் என்ன என்பது கூட தெரியாத நிலையில், அவரை சாட்சியாளராக அழைப்பது பொருத்தமற்றது’ என அவர் பதிலளித்தார்.
எனினும் இந்த விடயத்தில் நீதிமன்றம் எந்த கட்டளைகளையும் இதுவரை ஆக்கவில்லை.
நேற்று சாட்சி விசாரணைகளின் போது தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்கு விடுதியில் நடந்த வெடிப்பு தொடர்பில் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு, போகம்பறை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் 24 பேரும் அழைத்து வரப்பட்டனர்.
பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி ஜி.கே. கருணாசேகர, சட்டத்தரணி வஸீமுல் அக்ரம், சட்டத்தரணி சுரங்க பெரேரா, சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ், சட்டத்தரணி அசார் முஸ்தபா, சட்டத்தரணி இம்தியாஸ் வஹாப், சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்க உள்ளிட்டோர் ஆஜராகி வருகின்றனர்.
இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, பிரதி சொலிசிட்டர் ஜெனரால்களான சுஹர்ஷி ஹேரத், சஜித் பண்டார உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணி சுரேன் டி பெரேரா தலைமையிலான குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் :
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி
2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் (விளக்கமறியலில் வைத்து மரணித்துவிட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்
-Vidivelli