உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐ.எஸ். நடத்தியதாக கூறுமாறு தொலைபேசியில் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது
கனடாவில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசாநாயக்க
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறும்படி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தவிர்த்துக் கொள்வதற்கான பலமான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்தார்.
கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் சஹ்ரான் குழுவினரின் முதலாவது தாக்குதல் பொலிஸார் இருவரைக் கொலை செய்து அவர்களது ஆயுதங்களைக் கொள்ளையிட்டதாகும். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது சில தினங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட காவலரணுக்கு அருகில் கசெட் (ஒலிநாடா) ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறிப்பிட்ட கசெட் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்கள் மூலம் குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை மூலம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தன் இனம் காணப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபராவார். இதனையடுத்து இக்கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கசெட்டை அங்கு வைத்தவர் யார்? சஹ்ரான் குழுவினர் மீதல்லாது இக்கொலையை திசைதிருப்புவதற்கு முயற்சித்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது.
அத்தோடு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டினை வெடிக்கச் செய்ய வந்த ஜெமீல் எனும் நபர் அங்கு குண்டினை வெடிக்கச் செய்யாது தெஹிவளை பகுதியில் விடுதியொன்றுக்குச் செல்கிறார். அங்கு சென்று தனது பையை அங்கு வைத்துவிட்டு அருகிலுள்ள பள்ளிவாசலுக்குச் செல்கிறார். பள்ளியில் இவரது நடத்தை தொடர்பில் சந்தேகப்பட்டு அங்கிருந்தவர்கள் கலவரமடைகிறார்கள்.
அந்தப் பள்ளியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்துள்ளார். அவர் இவர் மீது சந்தேகம் கொண்டு அவர் பற்றி விசாரிக்கிறார். ஜெமீல் தனது அடையாள அட்.டையைக் காட்டி தன்னைப்பற்றி கூறி அங்கிருந்தும் செல்கிறார்.
இதனையடுத்து குறிப்பிட்ட பள்ளிவாசல் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜெமீலின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்து ஜெமீலை பற்றி விசாரிக்கிறார். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஜெமீல் குண்டினை வெடிக்கச் செய்து கொள்கிறார்.
குண்டு வெடிக்கச் செய்வதற்கு முன்பு பள்ளிவாசல் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வருகிறது. அது உளவுப் பிரிவு உத்தியோகத்தரின் அழைப்பாகும். அப்படியென்றால் குண்டு வெடிப்பதற்கு முன்பு ஜெமீலின் வீட்டுக்கு உளவு பிரிவு உத்தியோகத்தர்கள் சென்றிருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி, எதற்கு அங்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. குண்டு வெடிப்பதற்கு முன்பு அவர்கள் ஜெமீலின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
அடுத்து இந்தத் தாக்குதலை முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்கவில்லை. சத்தியம் செய்து அவர்கள் பொறுப்பேற்கவில்லை. பின்பு சத்தியம் செய்து கொண்ட புகைப்படமொன்று வெளியிடப்பட்டது.
புகைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய சஹ்ரான் மலேசியாவில் இருந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு தாக்குதலை பொறுப்பேற்கும் படி வேண்டினார். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. அதன் பின்பே சஹ்ரான் குழுவினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.
இத்தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறும்படி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறிய சஹ்ரானுக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்தது யார்? அறிக்கையில் யார் கூறியது என்று உள்ளது. ஆனால் நான் அதனைக் கூறவிரும்பவில்லை.
தாக்குதல் தொடர்பான தகவல்கள் ஏப்ரல் 4,8,16,20 ஆம் திகதிகளில் கிடைத்துள்ளன. தாக்குதலன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. தாக்குதல் ஆலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிகவும் நெருங்கிய சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே இத்தகவல்கள் கிடைத்துள்ளன.ஆனால் தாக்குதலைத் தடைசெய்வதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை.
பத்தரமுல்லையிலுள்ள கடையொன்றில் பாதணிகள் மற்றும் பேக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அத்தகவல்கள் கிடைக்கவில்லை. தகவல் கிடைத்திருந்தால் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும்.
பாணந்துறையில் உள்ள விடுதியொன்றில் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கான குண்டுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்தோடு பாணந்துறை பகுதியில் வீடொன்று வாடகைக்கு எடுக்கப்படுகிறது. வெடிமருந்துகள் பாணந்துறை வீட்டிலேயே தயார் செய்யப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் குண்டுத்தாக்குதல்கள் நடைபெறாது தடுத்திருக்கலாம்.
ஆலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளன என்ற தகவல்கள் கிட்டியுள்ளன. ஆனால் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையிலான தகவல்கள் வழங்கப்படவில்லை. தாக்குதல்களுக்கான தயார் நிலை தகவல்கள் வழங்கப்படாதிருந்துள்ளது. அவ்வாறான தகவல்கள் வழங்கப்பட்டால் தாக்குதல் நிறுத்தப்பட்டு விடும் என்பதால் வழங்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தனக்குத் தெரியும் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தாக்குதல் நடந்தபோது அவர் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
தாக்குதலின் பின்பு 7 மாத காலம் பதவியில் இருந்தார். மக்கள் தங்களது பாதுகாப்பினை அவரிடம் பொறுப்பாக்கியிருந்தனர். மக்கள் ஆணை மூலம் இப்பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனால் மக்களின் பாதுகாப்புக்கு அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
ஜனாதிபதியான அவருக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்த பொறுப்பிலிருந்தும் தவறியமைக்கு உயர் நீதிமன்றம் அவருக்கு 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளியாகக் கண்டே இந்தத் தீர்ப்பினை வழங்கியிருந்தது.
ஆனால் அவர் தனக்கு சூத்திரதாரிகள் யார் என்பது தெரியும் என்று இப்போது கூறுகிறார். தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்கிறார்.
அவரது உயிர் மாத்திரம் தான் உயிரா? 265 பேர் தாக்குதலில் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். பலியானவர்களை விட காயங்களுக்குள்ளானவர்களால் மாத்திரம் இந்த பாரிய குற்றச் செயலை மதிப்பிட முடியாது. கணக்கிட முடியாது.
தாக்குதல் காரணமாக சமூகங்கள் இரண்டாகப் பிளவுபட்டது. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்தது. முஸ்லிம் மக்களுக்கு மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு வெளியில் இறங்க முடியாமற் போனது. இது சமூக குற்றமாகும்.
இப்போது மைத்திரி கூறுகிறார் தனக்குத் தெரியும் என்று. என்ன மனிதர்கள் இவர்கள். ஜனாதிபதியை விடுவோம். சாதாரண பிரஜை ஒருவருக்கு இவ்வாறான தாக்குதல் இடம்பெற்ற பின்பு தனக்குத் தெரியும் என்று கூற முடியுமா?
மைத்திரி கூறுகிறார் தனக்குத் தெரியும். எனக்கு ஏதும் நடந்துவிடும் என்று பயப்படுகிறேன் என்கிறார். அதனால் மைத்திரியை முழுமையாக விசாரிக்க வேண்டும். இத்தாக்குதல் தொடர்பான உரிய விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை நீதிமன்றில் நிறுத்துவோம். குறிப்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்கள். அவர்களில் முக்கிய பிரதான அதிகாரிகள் சிலர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்கள் என்றார்.- Vidivelli