மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?
விசேட தேவையுடைய 29 வயது இளைஞனும் 18 வயது யுவதியும் கழுத்து வெட்டப்பட்டு ஜனாஸாவாக மீட்பு
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய இரு பிள்ளைகளும் கடந்த (14) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தாம் வசித்துவந்த வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த பிரதேசம் எங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நடந்தது என்ன?
உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியின் தாய் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியிருந்தார். ஏனைய இரு சகோதரர்கள் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார்கள். இந்நிலையில் உயிரிழந்த இளைஞரையும் யுவதியையும் பராமரித்து வந்த தந்தையான முஹம்மது மீர்ஸா முகம்மது கலீல் (வயது 63) என்பவர் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது கையடக்க தொலைபேசி ஊடாக கூறிவிட்டு கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார். இதன்போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து செல்லப்பட்டார். உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியின் தந்தை தானே இந்த கொலைகளைச் செய்ததாக தனது வாக்குமூலத்திலும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் மருதமுனை பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்தலத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸார் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவின் வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஜனாஸாக்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கினர். தடயவியல் பொலிஸாரும் மோப்பநாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் அன்று மாலை, பிரேத பரிசோதனைக்காக ஜனாசாக்கள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து அன்றிரவு உறவினர்களிடம் இரு ஜனாஸாக்களும் கையளிக்கப்பட்டன.
சோகமயமான மருதமுனை
மருதமுனையில் தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவ ஆரம்பித்ததை அடுத்து, சம்பவம் நடைபெற்ற வீட்டை நோக்கி அன்றைய தினம் மக்கள் படையெடுத்தனர். புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்தேறியிருப்பது பிரதேசத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மருதமுனை சற்று பரபரப்படைந்தது. பிரதேசமே மிகவும் சோகமயமானது.
ஜனாஸா நல்லடக்கம்
குறித்த இந்த சம்பவத்தை கேள்வியுற்று வெளிநாட்டில் பணிபுரிந்த இரு சகோதரர்களும் உடனடியாக நாட்டுக்கு திரும்பியதையடுத்து, மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நல்லடக்கத்தின் பின்னர் கூடியிருந்த மக்கள் மத்தியில் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் (மதனி) ஜனாஸா உரையை நிகழ்த்தினார். ‘நடக்கக்கூடாத சம்பவம் இந்த மண்ணில் நடந்தேறியிருப்பது எல்லோருக்கும் கவலை தருகிறது. இச்சம்பவமானது புரியாத புதிராக உள்ள நிலையில், சமூகத்தின் பல தரப்பினர் பக்கமும் விரல் நீட்டுவதை தவிர்த்து பாவங்கள் மன்னிக்கப்பட்ட உளநலம் குன்றிய பிள்ளைகளுக்காக பிராத்திப்போம். இறையச்சம், இஸ்லாமிய செல் நெறிகள் மீறப்படும் போது உள்ளங்கள் எவ்வாறு துருப்பிடிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும். சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமான வகையில் பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவலைக்குரியதாகும். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். – Vidivelli