வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுகின்றன
சிறுபான்மையினரின் உரிமையை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து
மத மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திர உரிமையை மீறும் வகையில் அண்மைய சில வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும் தேசியவாத சிங்கள பௌத்த பிக்குகளாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்குமுறை வடிவிலான தலையீடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துவதுடன், இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிடவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு தரப்பினராலும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இதுபற்றி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த வாரம் மதவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 8 தமிழ் இந்துக்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 10 நாட்களுக்கும் மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் (19) நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
மத மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திர உரிமையை மீறும் வகையில் அண்மைய சில வருடங்களாக இலங்கை அரசாங்கமும், தேசியவாத சிங்கள பௌத்த பிக்குகளும் நாட்டில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்து வருகின்றனர்.
இருப்பினும் வெடுக்குநாறிமலையில் அதனையொத்த இந்து வழிபாட்டு செயன்முறைகள் பல வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்குமுறை வடிவிலான தலையீடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தும் அதேவேளை, இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிடவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.- Vidivelli