(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் புதிதாக பள்ளிவாசல்கள் உட்பட ஏனைய மதஸ்தலங்கள் நிறுவப்படுவதற்கு புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு புதிய சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
இதனடிப்படையில் பள்ளிவாசல்கள் பன்சலைகள், கோவில்கள், ஆலயங்கள் புதிதாக நிர்மாணிப்படுவதாயின் புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான அனுமதி பள்ளிவாசல்கள் உட்பட மதஸ்தாபனங்கள் புதிதாக நிறுவப்படும் பிரதேசத்தின் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுகளுடன் புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலிடம் வினவியபோது, புதிதாக பள்ளிவாசல்கள் நிர்மாணம் தொடர்பில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் இதுவரை காலம் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாதுள்ள பள்ளிவாசல்கள் கட்டம் கட்டமாக பதிவு செய்யப்படுகின்றன.
திணைக்களத்துக்கு பதிவுக்காக கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் வக்பு சபை மற்றும் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றிருப்பின் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli