கிழக்கு மாகாண சபையின் கீழ் வரும் அரச அலுவலகங்களின் உயர் பதவிகளுக்கு இன மத ரீதியாகவன்றி தகுதியின் அடிப்படையிலேயே அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபையின் கீழ் வரும் அரச அலுவலகங்களின் உயர் பதவிகளுக்கு மாகாணத்திலுள்ள இன விகிதாசாரத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை உள்வாங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என இச் சந்திப்பில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பதவிக் காலத்தில் மாகாண பிரதம செயகத்தில் மாத்திரம் முஸ்லிம் அதிகாரி ஒருவர் பதவி வகித்தார். எனினும் தற்போதைய ஆளுநரின் காலத்தில் மாகாண பிரதம செயகத்தில் ஒருவரும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் ஒரு முஸ்லிம் உயர் அதிகாரியும் பதவி வகிக்கின்றனர். அந்த வகையில் முன்னர் இருந்ததை விட தற்போதைய ஆளுநரின் கீழ் மற்றொரு முஸ்லிம் அதிகாரி கூடுதலாகவே பணியாற்றுகிறாரே தவிர அந்த எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
ஆளுநரைப் பொறுத்தவரை நலன்புரித்திட்டங்களில் மாத்திரமே அவரால் இன விகிதாசாரத்திற்கேற்ப வளங்களைப் பகிர்ந்தளிக்க முடியும். மாறாக உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அரசாங்கத்தின் வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும். பரீட்சைகள் நேர்காணல்கள் நடாத்தப்பட்டு அவற்றில் வெளிப்படுத்தும் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் அரசியலமைப்பில் இன மத அடிப்படையில் நியமனங்களை வழங்குமாறு ஒருபோதும் கூறப்படவில்லை. மாறாக திறமைமிக்கவர்களுக்கு உரிய தகுதிகாண் மட்டங்களைத் தாண்டி பதவிகளை வழங்குமாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள் நலன்புரி நடவடிக்கைகள் என்று வருகின்ற போதும் அவை மாகாணத்திலுள்ள சகல இன மக்களுக்கும் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஆளுநரின் கடப்பாடாகும். இதில் அவர் தவறிழைத்தால் அது பற்றி முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் முறையிட முடியும். மாறாக உயர் அதிகாரிகளின் நியமன விடயத்தில் ஆளுநரைக் குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli