ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று காலை 11 மணியளவில் பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார். அத்துடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஷிம், எஸ்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்துறை நியமனங்களின்போது முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது விடயமாகு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுனர், விரைவில் இரு பதவிகள் வெற்றிடமாகவுள்ளது, அவ்விடங்களுக்கு முஸ்லிம் அதிகாரிகளை நியமிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும். அத்தோடு, தகுதியுள்ளவர்கள் குறித்து அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குறித்த சந்திப்பின்போது மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடியில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று கையளிக்கப்பட்டது.
இதில், மூடப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனிடையே, கிழக்கு மாகாண நிர்வாக அதிகாரிகள் பதவிகள் வழங்கப்படுவதில் இன விகிதாசார சமநிலை பேனப்படாமை குறித்த இம்ரான் மகரூப் எம்.பி. அண்மையில் கண்டனத்தை வெளியிட்டதுடன், பாராளுமன்றத்திலும் இது விடயமாக சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், தனக்கு கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்படாமையானது வேறு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். – Vidivelli