- துஆ கட்சி சார்பாக கலந்துரையாடல்
- தேர்தல் கூட்டணி குறித்து அவதானம்
(எம்.வை.எம்.சியாம்)
அமெரிக்காவில் தங்கியிருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முன்னாள் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நஸீர் அஹமட், நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ இடம்பெற்றால் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது சம்பந்தமான மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக ஜனாதிபதிதேர்தலில் நாட்டு மக்கள் விரும்பக்கூடிய மற்றும் மிகவும் நம்பிக்கையான வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டும்.
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமையான, நம்பிக்கையான ஒருவர் தேவைப்படுகிறார். அவ்வாறான சிறந்த தலைமைத்துவத்தை கொண்ட ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். என்னுடைய பார்வையில் பஷில் ராஜபக்ஷவினால் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அந்த நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.
இதன்போது, “நீங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்காலத்தில் பஷிலுடன் இணைந்து செயற்பட போகிறீர்களா?” என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நஸீர், “நாம் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எமது கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது” என்றார்.- Vidivelli