கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இக்கட்டுரை பொருளியல் கற்கும் மாணவர்களை முன்னிலைப்படுத்தி வரையப்பட்டிருந்தாலும் சாதாரண வாசகர்களும்கூட விளங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் கூண்டு என்பது பறவைக் கூண்டையே குறிக்கின்றது. இந்த விபரணத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் சீனப் பொருளியலாளர் சென் யுன் என்பவராவர். அவர் சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்களின் பொலிட்பீரோவின் அங்கத்தவராக 1934 தொடக்கம் 1987வரை பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் சீன விவசாய உற்பத்திக் குறைவும் அதனால் நாட்டில் நிலவிய பசியும் பட்டினியும் கோடிக்கணக்கான சீன மக்களை காலத்துக்குக் காலம் பஞ்சத்துக்குள் தள்ளியது. உதாரணமாக, 1959க்கும் 1961க்கும் இடையில் ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் 45கோடி மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது என்பது பற்றிய பொலிட்பீரோ விவாதத்தில் தலைவர் மா சே துங் மக்களின் புரட்சித்தாகமே உற்பத்தியைப் பெருக்கும் என்று கருதினார். அந்தக் கருத்தை எதிர்த்து சந்தைச் சக்திகளே உற்பத்தியை ஊக்குவிக்கும் என வாதிட்டவர் யுன். சந்தைச் சக்தி ஒரு பறவை அதனை ஐந்தாண்டுத் திட்டம் என்ற கூட்டுக்குள் பறக்கவிடவேண்டும் என்றுகூறி கூண்டுப் பொருளாதாரம் என்ற ஒரு பொருளாதார மாதிரியையும் அவர் அறிமுகப்படுத்தினார். மா சே துங் இறந்தபின்பு ஆட்சிக்கு வந்த டென் சியாவோ பெங் அந்த மாதிரியின் அடிப்படையிலேயே சில துறைகளில் சந்தைச் சக்திகளை நுழையவிட்டதனால் இன்று சீனப் பொருளாதாரம் உலகத்திலேயே இரண்டாவது பொருளாதாரமாக அதன் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் மிளிர்கிறது.
பொதுவாக இன்றைய சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு திறந்த பொருளாதாரம் என்று கருதுவதிலும் தவறில்லை. எனவே கூண்டுப் பொருளாதார மாதிரி சீனாவுக்குப் பொருந்துமென்றால் இலங்கை போன்ற வங்குரோத்தடைந்த பொருளாதாரங்களுக்கு ஏன் பொருந்தாது என்ற கேள்வியில் நியாயம் இருக்காதா? சந்தைச் சக்திகளின் சுதந்திரத்துடன் திறந்த பொருளாதாரம் வேண்டுமென வாதிடுகின்றவர்கள் 200கோடிச் சீனமக்களை பொருளாதார அடிமட்டத்திலிருந்து உயர்த்திவிட்ட கூண்டுப் பொருளாதாரத்தின் சாதனையை எவ்வாறு சரி காண்பரோ? எனவே ஒரு பெரும்பாகப் பொருளாதாரத் திட்டத்தின்கீழ் சந்தைச் சக்திகளை நுழையவிட்டு பல நுண்பாகத் துறைகளை வழிப்படுத்தி நாட்டை வளர்ப்பதே கூண்டுப் பொருளாதார மாதிரியின் இரகசியம். இதனைப் பின்னணியாகக் கொண்டே தேசிய மக்கள் சக்திக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை நோக்க வேண்டும். அதற்கு முன்னர் இக்கட்சியைப் பற்றிய சில அவதூறான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறவேண்டியுள்ளது.
இக்கட்சி மொத்தம் இருபத்தொரு வெவ்வேறு இயக்கங்களின் ஒரு கூட்டு. அவற்றுள் பெரும்பான்மையானது அனுர குமார திஸாநாயகவின் தலைமையில் இயங்கும் தேசிய விடுதலை முன்னணி (ஜே.வி.பி). இம்முன்னணியின் ஆரம்பம் 1970ஐ நோக்கிப் பின்செல்லும். அப்போதிருந்த அதன் தலைவர் 1980ல் இலங்கை அரசினால் கொலை செய்யப்பட்ட ரோஹண விஜேவீர. அந்த அரசியற் கொந்தளிப்புச் சூழலை இங்கே விபரிக்கத் தேவையில்லை. ஆனால் அப்போதையத் தலைவரும் அவரின் சகாக்களும் போராளிகளும் ஆயுதப் புரட்சிமூலம் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்துத் தோல்வி கண்டவர்கள் என்பதை மட்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த ஆண்டில் ஜே.வி.பி.யின் இன்றையத் தலைவர் திஸாநாயகவுக்கு வயசு இரண்டு. அவருடன் கட்சித் தோழர்களாக இன்று இயங்கும் அத்தனைபேரும் அனுரவுக்குப் பின்னரோ அல்லது சமகாலத்திலோ பிறந்தவர்களே. சுருக்கமாகச் சொல்வதாயின் இன்றைய ஜே.வி.பியினர் ஒரு புதிய சந்ததியைச் சேர்ந்தவர்கள். இச்சந்ததி புரட்சிவாதச் சித்தாந்தங்களை அறிந்துவைத்திருப்பதோடு அவையெல்லாம் இன்று காலாவதியாகிவிட்டவை என்பதையும் உணர்வர். 1980களுக்குப் பின்னர் உருவாகிய பூகோளமயவாக்கத்தின் மடியில் அன்றைய புரட்சிவாதத் தத்துவங்களும் அதனைப் பின்பற்றி ஆண்ட அரசுகளும் பெரும்பாலும் மறைந்துவிட்டன என்பதையும் அவர்கள் அறியாமலில்லை. எனவேதான் திஸாநாயகவும் அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொதுஜன வாக்குச் சாவடிகளையும் மக்களின் வெகுஜன ஆதரவையும் குறிவைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களின் எதிரிகளோ இன்னும் பழைய ஜே.வி.பி யையே மக்களுக்கு ஞாபகமூட்டி திஸாநாயகவைப் பற்றியும் அவரின் கட்சியைப் பற்றியும் மக்களுக்கு வெறுப்பூட்டும் அளவுக்கு அவர்களை பயங்கரவாதிளாகச் சித்தரிக்க விளைகின்றனர். அதற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று மக்களிடையே அக்கட்சிக்குரிய ஆதரவு தொடர்ந்து பெருகுவது. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியின் கூண்டுப் பொருளாதாரக் கொள்கைக்கு நிகரான ஒரு செயற்திட்டம் ஏனைய எந்தவொரு எதிர்க்கட்சியிடமும் இல்லை என்பது.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைப் பிரகடனங்களைக் கூர்ந்து நோக்கினால் பின்வரும் அம்சங்கள் பிரதானமாக வெளிப்படுகின்றன: சந்தைச் சக்திகளுக்கு இடமளித்தல், வெளிநாட்டு மூலதனங்களை வரவேற்றல், சர்வதேச நாணய நிதியுடன் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பனவே அவையாகும். எனவே இவைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு எதிரியல்ல என்பது புலனாகின்றது. ஆனால் அவற்றை வரவேற்கும் அதேவேளை அவற்றை எந்தக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு இடமளிக்காது என்பதை வலியுறுத்தவேண்டி உள்ளது. இதற்கொரு முக்கிய காரணம் உண்டு.
இலங்கைப் பொருளாதாரத்தின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதைப் பற்றிய விபரங்களைக் கொண்ட ஒரு பெரும்பாகத் திட்டத்தை பொருளியல், நிதிஇயல், சமூகவியல் போன்ற பிரதான துறைகளின் விற்பன்னர்களைக்கொண்டு உருவாக்கி அந்தத் திட்டத்துக்கமைய சந்தையையும், மூலதனத்தையும் ஏன் சர்வதேச நாணய நிதியையும்கூட வழிப்படுத்தல் அரசின் கடமை. அந்தத் திட்டத்தின் கூண்டுக்குள்ளேதான் அவை பறக்க வேண்டுமே ஒழிய தன்னிச்சைப்படி பறக்கமுடியாது. அதைத்தான் சீனா இன்றுவரை கடைப்பிடிக்கிறது. அதிலென்ன தவறோ? உண்மை என்னவென்றால் 1980களுக்குப்பின்பு பனிப்போர் முடிவடைந்து முதலாளித்துவமும் தாராண்மைப் பொருளியல்வாதமும் பூகோளமயமாகியதன் பின்னர் அரசாங்கங்களின் பெரும்பாகத் திட்டமிடுதல் என்ற கொள்கை தவறானது என்ற ஒரு கருத்தை முதலாளித்துவப் பொருளியற் பண்டிதர்கள் வளர்த்துவிட்டனர். ஆனால் அதே பண்டிதர்கள் தனியார் பொருளாதார நிறுவனங்கள் தமது இலாபத்தைப் பெருக்குதற்காக நீண்டகால, குறுங்காலத் திட்டங்களை வகுத்தலைப் போற்றி ஆதரித்தனர். திட்டமிடுதல் தனியாருக்கு அழகென்றால் ஏன் அது தேசிய மட்டத்தில் அரசுக்குப் பொருத்தமற்றதாகும்? இன்று சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் இப்பண்டிதர்களின் வாதங்களை பொய்யாக்கி விட்டமை புலனாகவில்லையா? ஆனால் அவ்வாறான ஒரு திட்டம் மட்டும் இன்றைய நிலையில் இலங்கையின் பொருளாதாரச் சீரழிவை நிறுத்தி வளம்பெறச் செய்யமுடியாது. அதற்குரிய காரணத்தையும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டி உள்ளது. அதை விளங்குவற்கு முன்னர் திட்டமிடல்பற்றிய இலங்கையின் பழைய கசப்பான அனுபவம் ஒன்றையும் இங்கே ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது.
1970ல் ஆட்சிக்குவந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இடது சாரிக் கூட்டணி அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி அதனால் பொருளாதாரமே சீரழிந்ததை வரலாறு மறக்காது. அந்தச் சீரழிவைக் காரணம் காட்டியே பொருளாதாரம் என்ற அலாவுதீனின் அற்புதவிளக்கை ஜே.ஆர். ஏற்றிவைத்தார். ஆனால் ஐந்தாண்டுத் திட்டம் தோல்வி அடைந்தமைக்கான பிரதான காரணம் ஆட்சியாளர்களின் இறுக்கமான பிரதியீட்டுக் கைத்தொழில் வளர்ச்சித் தத்துவக் கோட்பாடும் பொருளாதாரத்தின் தேவைக்கேற்ப அதன் நிர்வாகம் வளைந்து கொடுக்கத் தவறியதுமே. அதற்கு எடுத்துகாட்டாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு. உதாரணத்துக்காக ஒன்றை மட்டும் இங்கே கூறுவது பொருந்தும். மை ஊற்றாத பேனா அல்லது போல் பொய்ன்ற் பேனா உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்தப் பேனா இயங்குவதற்கு ஒரு சிறிய ஸ்ப்ரிங் தேவைப்பட்டது. அதை இறக்குமதி செய்யவேண்டுமென உற்பத்தியாளர்கள் வலியுறுத்த திட்டமிடல் கொமிஸன் அதற்கு இடமளிக்கவில்லை. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்ப்ரிங் விரைவில் உடையத்தொடங்கியதால் அந்தப் பேனாவின் கிராக்கி சரியத் தொடங்கி கறுப்புச் சந்தையில் பாவனையாளர்கள் வெளிநாட்டுப் பேனாக்களை வாங்கினர். திட்டத்தை அமுல்படுத்தியவர்கள் உற்பத்தித் தேவைக்கேற்ப வளைந்து கொடுத்திருந்தால் காலவோட்டத்தில் இப்பேனா உற்பத்தி தன்னிறைவு கண்டிருக்கும். திட்டமிடல் ஒன்று அதை அமுல்படுத்துவது வேறொன்று. ஒரு தத்துவத்தின் இறுக்கமான பிடிக்குள் பொருளாதாரம் சிக்கித் தவித்ததால் அது முச்சுவிட முடியாமல் திணறியதே ஒழிய திட்டத்தின் குழறுபாட்டினால் அல்ல.
1978க்குப் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் திறந்த சந்தைப் பொருளாதாரம் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஜாம்பவான்களை ஆட்சியிலமர்த்தி தமது சுயலாபத்துக்காக நாட்டின் செல்வத்தையே சூறையாடும் ஒரு கொள்ளையர் குகையாக விளங்கியது. நிர்வாக ஊழல், செல்வத் திருட்டு, தனிமனித அநீதி என்பன எந்தக்கட்டுப்பாடுமின்றித் தாண்டவமாடும் ஒரு நிர்வாக மேடையிலே அரங்கேற்றப்பட்டதே திறந்த பொருளாதார அமைப்பு. திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் மாபியாக்களை அரசே முன்னின்று வளர்த்தமையும், புனித பௌத்தத்தின் போர்வைக்குள் ஒழிந்திருந்து சிறுபான்மையினரின் பொருளாதார வளங்களைச் சூறையாடியமையும், அவ்வாறு சூறையாடியவர்கள் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டால் அவர்களை ஆட்சியிலிருப்போர் பௌத்தத்தின் பெயரால் மன்னித்து விடுதலை செய்தமையும் இப்பொருளாதார அரங்கில் மேடையேற்றப்பட்ட அசிங்கமான நாடகங்கள். எனவே முதலில் இந்தக் குகையையும் அதன் அரங்கத்தையும் நாடகங்களையும் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனை பல வார்த்தைகளில் பல சந்தர்ப்பங்களில் அக்கட்சியின் தலைவரும் பிரதான அங்கத்தினரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்தச் சுத்திகரிப்புப் பணிக்கு ஏனைய கட்சிகள் தயாரில்லை. இந்தச் சுத்திகரிப்புக்காவது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டியுள்ளது.
இறுதியாக, ஒரு விடயம். தேசிய மக்கள் சக்தியைத் தவிர மற்றைய எல்லாக் கட்சிகளும், ஜனாதிபதி உட்பட, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்போம் என்று பறை அடிக்கின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய மெய் உற்பத்தியின் வருடாந்த சதவீத அதிகரிப்பையே குறிப்பிடும் ஒரு பொருளாதார அளவீடு மட்டுமே என்பதை எந்தப் பொருளியல் மாணவரும் அறிந்திருப்பர். அந்த அதிகரிப்பின் உள்ளடக்கம் என்ன, அதற்கு யார் காரணம், அதனால் நன்மையடைவது யார் என்பன பற்றிய தகவல்கள் எவற்றையுமே அந்த அளவீடு விளக்கமாட்டாது. அதனாலேதான் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி நிகழ்வுநிரல் (UNDP) மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) என்ற ஒரு மாற்று அளவுகோலை அறிமுகப்படுத்தியது. அதில் தேசிய மெய் உற்பத்தி ஓர் அம்சம் மட்டுமே. மொத்தத்தில் தேசிய மக்கள் சக்தியின் கூண்டுப் பொருளாதார மாதிரி தனித்தன்மை கொண்டதும் வெற்றிதரக்கூடியதுமான ஒன்று. எனவே அந்தக்கட்சியின் ஆட்சிக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பது வாக்காளர் கடமை. – Vidivelli