எமது நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள வேளையில் நாம் சில தினங்களில் புனித ரமழானை அடையவுள்ளோம்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும், ஸதகாவினதும் மாதமாகும்.
ரமழானின் இறுதி 10 தினங்களில் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுவதால் இந்த அமலை ஊர் மக்கள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும்.
ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி பிறரது உணர்வுகளை மதிக்கும் பயிற்சியை வழங்கும் மாதமாகும். ரமழான் காலப்பகுதியில் நாம் சமூகம் சார் பொறுப்புகளை உரியமுறையில் நிறைவேற்ற வேண்டும். எவருக்கும் தீங்கு ஏற்படா வண்ணம் எமது தனிப்பட்ட குடும்ப, சமூக விடயங்களை கையாள வேண்டும்.
எமது நாடு பல்லின, பல கலாசாரங்களை உள்ளடக்கியதாகும். எனவே எமது சமயக் கடமைகள், இரவு நேர வணக்க வழிபாடுகள் ஏனைய சமூகங்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அமைய வேண்டும். முஸ்லிம்கள் நாம் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போதும், ஸஹர் நேரத்திலும் , பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சப்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மஸ்ஜித்கள் அமல்களை ஏற்பாடு செய்யும்போது அதனைச் சூழவுள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படா வண்ணம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் ரமழானின் இரவுநேரங்களை பாதையோரங்களில் விளையாட்டுகளில் வீணாக கழித்து ஏனைய சமூகத்தினருக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தினரை இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
எமது சமூகத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த தனவந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெரும் எண்ணிக்கையிலான எமது சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட வேணடும். இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான ஸக்காத் வறுமையை ஒழிப்பதற்கு இறைவன் எமக்குத் தந்துள்ள ஒரு சிறந்த வழிமுறையாகும்.
ஆடம்பர இப்தார்கள் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு அந்நிதி வறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது அரசாங்கம் அரச மற்றும் அரச நிறுவனங்கள் இப்தாருக்காக செலவிடும் பணத்தினை காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் இத்தீர்மானம் பாராட்டுக்குரியது.இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்குப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
காஸா எல்லைப் பகுதியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Children of Gaza Fund நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொடுக்கவுள்ளது.
எமது சமூகத்தில் வசதி படைத்தவர்கள் எமது மக்களுக்கு இந்த ரமழானில் உதவிக்கரம் நீட்டுவதுடன் பலஸ்தீனர்களுக்கும் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
பலஸ்தீனில் நிரந்தர சமாதானம் நிலைபெற புனித ரமழானில் நாமனைவரும் இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போமாக. – Vidivelli