ஏ.ஆர்.ஏ.பரீல்
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான யுத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழ் நிறுத்தத்துக்கு உள்ளாகுமென தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – காஸா யுத்தம் தொடர்பில் தற்போது கட்டாரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் குறிப்பிட்ட கருத்து வெளியாகியுள்ளது.
கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் பிரவேசித்து 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதுடன் 253 பேரை பணயக் கைதிகளாக சிறைபிடித்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் பின்பு விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் இஸ்ரேல், காஸா மீது வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதுவரை இஸ்ரேல் 29782 பலஸ்தீனர்களைக் கொலை செய்துள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 90 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியுயோர்க் நகரில் ஊடகவியலாளர்களின் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் தொடர்பிலும் குறிப்பிட்டார்.
‘நாங்கள் போர் நிறுத்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. என்றாலும் இது விடயத்தில் ஹமாஸ் தீர்மானத்துக்கு வருமா என்பதில் சந்தேகமுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாங்கள் எகிப்து, இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்ட தொடர்புகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட உடனடி போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தோற்கடித்தமை பரவலாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பிட்ட உடனடி போர் நிறுத்த தீர்மானம் இஸ்ரேல் தென் காஸா நகரான ரஃபா மீது போர் தொடுப்பதையும் கண்டித்திருந்தது. காஸா மீது புதிதாக தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் காஸாவின் ஒரு பிராந்தியத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமொன்றினை இராணுவம் கையளித்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பலஸ்தீன் அதிகார சபை (PA) யின் பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohamed Shtayyeh) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் கடந்த திங்கட்கிழமை பலஸ்தீன் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
மேற்குக்கரை மற்றும் ஜெரூசலம் ஆகிய பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் வன்முறைகள் மற்றும் போர், இனப்படுகொலை, காஸா பகுதியில் தீவிரமடைந்து வரும் பட்டினி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தான் இராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரைத் தொடர்ந்து ஒரு பலஸ்தீன அரசை ஆளக்கூடிய அரசியல் கட்டமைப்பிற்கான வேலையைத் தொடங்குமாறு மஹ்மூத் அப்பாஸ் மீது அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் பலஸ்தீன் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலைமை நிபுணர்களைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்கு மஹ்மூத் அப்பாஸுக்கு வாய்ப்பளிக்கும்.
மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார். அமெரிக்கா பலஸ்தீன் அதிகார சபை (PA) யில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் முடிவுக்கு வந்ததும் காஸாவையும் பலஸ்தீன் அதிகார சபையின் ஆட்சிக்குட்படுத்தும் படியும் கோரி வருகிறது. – Vidivelli