அளுத்கம, தர்காநகர், பேருவளை மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இவ்வருடம் ஜூன் மாதமாகின்றபோது 10 ஆண்டுகளாகின்றன. 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க இன வன்முறைகளில் அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இந்த அசம்பாவிதங்கள் நடந்து பத்தாண்டுகளாகின்றபோதும் பாதிக்கப்பட்ட தரப்பான முஸ்லிம் சமூகத்திற்கு இன்னும் நீதி கிடைத்ததாக இல்லை.
இதற்கிடையில், 2017 இல் கிந்தோட்டையிலும், 2018 இல் அம்பாறை, கண்டி, திகன பகுதிகளிலும் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களையடுத்து மினுவாங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களை இலக்குவைத்து பல்வேறுபட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகிவிட்டன. அத்துடன், கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டி முஸ்லிம் சமூகத்தை ஆத்திரமூட்டும் விதத்திலும் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தும் விதமான இனவாத செயற்பாடுகள் அரங்கேறின.
இனவாத செயற்பாடுகள், பிழையான அரசியல் தீர்மானங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று என்பவற்றால் பொருளாதார ரீதியிலும் அரசியல், நிர்வாக ரீதியிலும் நலிவுற்ற இந்நாட்டில், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் சுயாதீனமாக மேலெழுந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களையடுத்து இனவாத செயற்பாடுகள் தணிந்திருக்கிறது. எனினும், அரசியல் இலாபம் கருதி சில அரசியல் சக்திகள் ஆங்காங்கே இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டின் அமைதியை கெடுக்கும் விதத்தில் செயற்படுகின்றன.
இது இப்படியிருக்க, 2014 ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட இன அடக்குமுறை தொடர்பாக அப்போது தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.
இதன்போது, அளுத்கம வன்முறைகள் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் ‘அபசரன உரை’ தொடர்பில் முன்கூட்டியே தகவலறிந்திருந்த அரசாங்கமும் பொலிஸ் தரப்பும் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளித்ததுடன், உரியமுறையில் சட்டத்தை அமுல்நடத்தாது இருந்தமையினாலேயே வன்முறைகள் அரங்கேற்றப்பட்டதாகவும் எனவே, அரசாங்கமும் பொலிஸ் தரப்பும் தனது பொறுப்புகளை சரிவர செய்வதற்கு தவறியுள்ளதாகவும் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்துடன், நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த சம்பவத்துடன் 1915 ஆம் ஆண்டு பதிவான சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஒப்பீடு செய்திருந்தார்.
இங்கு சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மிக வலுவான குற்றச்சாட்டொன்றை அரசாங்கத்தின் மீதும் பொலிஸ் தரப்பின் மீதும் சுமத்தியிருக்கின்றார். குறித்த நியாயமான குற்றச்சாட்டு தொடர்பில் நீதித்துறை கவனமெடுக்கும் பட்சத்தில் நாட்டில் இன்னொரு இனவன்முறைக்கு இடமளிக்காத விதத்திலான நீதியை பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும். இதுவே, அரசியல், வியாபாரம் மற்றும் இதர நோக்கங்களுக்காக இன வன்முறைகளை தோற்றுவிக்க நினைப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமையலாம்.
இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பானது நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
அத்தோடு, 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி இறுதிப்பகுதியில் அம்பாறையிலும் மார்ச் மாத ஆரம்பத்தில் கண்டியிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறைகளுக்கு 6 வருடங்களாகின்றன. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் வெகு சீக்கிரமாக நீதியை பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகின்றன.
அத்தோடு, அளுத்கமை வன்முறைச் சம்பவங்கள் முதல் தற்போதுவரை நடத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். எனவே, இது விடயமாக அரசியல், சிவில் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட்டு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.- Vidivelli