சாரா தப்பிச் செல்ல உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு எதிரான வழக்கினை முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை
சட்ட மா அதிபருக்கு அறிவிப்பதாக சி.ஐ.டி. தெரிவிப்பு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரும் சாட்சியம்
(எம்.எப்.அய்னா)
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிரான வழக்கை முன் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்ட மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு நேற்று முன் தினம் (27) அறிவித்துள்ளது.
சாரா குறித்து பொலிஸாருக்கு தகவல்களை மறைத்ததாக கூறி சட்ட மா அதிபர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பொலிஸ் அதிகாரியான அபூபக்கருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு, விசாரணைக்கு வந்தபோதே, இதனை சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அச்சாட்சியங்கள் பிரகாரம், சாரா விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட 3 ஆவது டி.என்.ஏ. பரிசோதனைகளில் அவர் 2019 மே 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாட்சியம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே பிரதிவாதியான அபூபக்கர் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், 2019 மே மாதம் இறந்துவிட்டதாக கூறப்படும் சாராவை 2019 செப்டம்பர் மாதம் தப்பிக்க உதவியதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்.
இந்த நிலையிலேயே, இவ்வழக்கை முன் கொண்டு செல்ல முடியாத நிலைமையை சட்ட மா அதிபருக்கு அறிவிப்பதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் சிறப்பு அரச சட்டவாதி சகி அஹமட் ஆஜராகும் நிலையில் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆஜராகிறார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா, களுவாஞ்சிக் குடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மாஹின்கந்த வழங்கிய சாட்சியத்தின் படி, கடந்த 2020 ஜூலை 13 ஆம் திகதி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
கல்முனை – சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமபகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பியதாக நம்பப்படும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களுவாஞ்சிக்குடி, மான்காடு பகுதியில் மறைந்திருந்ததாக கண் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடாக தனக்கு கடந்த 2020 ஜூலை 06 ஆம் திகதி தகவல் கிடைத்ததாக அர்ஜுன மாஹின்கந்த குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 2020 ஜூலை 8 ஆம் திகதி மட்டக்களப்பு சென்று அங்கு சாராவை நேரில் கண்ட நபரையும் சந்தித்ததாகவும், அந்த கண்கண்ட சாட்சியாளரின் சாட்சியத்தின் பிரகாரம், கடந்த 2019 வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், அதிகாலை 3.15 அளவில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தேத்தா தீவு பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த போது, பிரதான வீதிக்கு நுழைய முடியுமான குறுக்கு வீதியான கடற்கரை வீதியிலிருந்து பெண் ஒருவரும் இரு ஆண்களும் வந்ததாக தகவலாளி தகவல் அளித்ததாக அர்ஜுன மாஹின்கந்த குறிப்பிட்டிருந்தார். அப்பெண் அப்போது கருப்பு நிற பர்தா அணிந்திருந்ததாகவும், முகத்தை மறைத்திருக்கவில்லை எனவும் அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்ததையும் கண்டதாக சாட்சியாளர் அவதானித்துள்ளார்.
அவ்வாறு பிரதான வீதிக்கு வந்த பெண், பாதை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இள மஞ்சள் நிற டப்பிள் கெப் ரக வாகனத்தில் ஏறுவதை சாட்சியாளர் அவதானித்துள்ளார். குறித்த கெப் வண்டியின் பின் ஆசனத்தில் அந்த பெண் அமர்ந்துள்ளதுடன், முன் ஆசனத்தில், அதாவது சாரதி ஆசனத்துக்கு அருகே உள்ள ஆசனத்தில் அப்போது களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி அபூபக்கர் இருந்துள்ளதை சாட்சியாளர் கண்டுள்ளார் என அர்ஜுன மாஹின்கந்த சாட்சியமளித்திருந்தார்.
இது தொடர்பிலேயே, அபூபக்கர் கைது செய்யப்பட்டு 2020 முதல் தடுப்புக் காவலிலும் விளக்கமறியலிலும் இருந்து வந்த நிலையில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli