ஏ.ஆர்.ஏ.பரீல்
பண்டாரகம – அட்டுலுகமயைச் சேர்ந்த ஒன்பதே வயதான சிறுமி ஆயிஷா கொடூரமாக கொலை செய்யப்பட்டு 21 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் இக் கொடூரத்தை இலகுவில் மறந்துவிட முடியாது.
இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்றத்திற்காக அச்சிறுமியின் தந்தையின் நண்பரென அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் பாரூக் எனும் நபருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எனினும் இத்தண்டனைக்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றே சமூகம் கருதுகிறது.
திட்டமிடப்படாத படுகொலை மற்றும் சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து சிறுமியைக் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழான இவ்வழக்கில் குற்றவாளி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாலே இவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம 7 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும். முஸ்லிம் கொலனியும், கல்கேமன்டியவும் இதனைச் சேர்ந்ததாகும். படுகொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவும், அவளது பெற்றோரும் கல்கேமன்டிய கிராமத்திலே வசித்து வந்தார்கள்.
பாத்திமா ஆயிஷா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காலை 10 மணியளவில் காணாமல் போனாள். ஆயிஷாவின் தாயார் அவளை கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியிருந்தார். கோழி இறைச்சி வாங்கச் சென்ற ஆயிஷா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாலையாகியும் அவள் திரும்பி வராமையால் அவளது பெற்றோர் பீதியடைந்தனர். அவளைத் தேடியும் கிடைக்காத நிலையில் ஆயிஷா காணாமற் போய்விட்டதாக பண்டாரகம பொலிஸில் முறையிட்டார்கள்.
தாயாரின் முறைப்பாட்டினையடுத்து பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ பாணந்துறை பிராந்தியத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் குமாரவுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியதுடன் அவரது ஆலோசனைகளுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்தார்.
பொலிஸார் சிறுமியின் தாயார் மற்றும் தந்தையிடம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இதன்பின்பு பொலிஸார் சிசிரிவி கமெரா பதிவுகள் மீது கவனம் செலுத்தினார்கள்.
பாத்திமா ஆயிஷா வீட்டிலிருந்து கோழி இறைச்சி கடைக்குச் சென்ற பாதையில் எங்கும் சிசிரிவி கமெரா இருக்கவில்லை. என்றாலும் கோழி இறைச்சி கடைக்கு எதிரே இருந்த பாமசியின் சிசிரிவி கமெரா பொலிஸாரின் விசாரணைக்கு உதவியது. கமெரா பதிவில் அன்றைய தினம் காலை 10.09 மணிக்கு கோழி இறைச்சிக் கடைக்குச் சென்ற ஆயிஷா அங்கிருந்து 10.20க்கு வெளியேறிச் செல்வது பதிவாகியிருந்தது.
பாதையில் சிறிது தூரம் பயணித்த ஆயிஷாவின் உருவம் திடீரென அப்பதிவிலிருந்தும் மறைந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆயிஷாவின் வீட்டுக்கும் பாதைக்கும் இடையில் 150 மீற்றர் தூரத்தில் ஆயிஷாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை பொலிஸார் ஊகித்தனர்.
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். முன்னைய தினங்கள் பெய்த கடும் மழையின் காரணமாக அட்டுலுகம முஸ்லிம் கொலனி மற்றும் அண்மித்த காட்டுப்பகுதி உட்பட சதுப்பு நிலம். கீரைத் தோட்டங்கள் நீரினால் நிரம்பியிருந்தன. இந்நிலைமை சிறுமியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொலிஸாருக்கு இரண்டு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதில் ஒன்று சிறுமி வாகனமொன்றினால் கடத்தப்பட்டாள் என்பதாகும். அடுத்த தகவல் சிறுமி நபரொருவரின் கரத்தைப் பற்றிக்கொண்டு புறக்கோட்டைப் பகுதியில் செல்வதைக் கண்டதான தகவலாகும். விசாரணை அதிகாரிகள் இத்தகவல்கள் தொடர்பில் முயற்சித்தாலும் உரிய பலன் கிட்டவில்லை.
அப்படியென்றால் சிறுமி காட்டுப்பகுதிக்குத் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். சிலவேளை அவள் காட்டுப் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகித்தார். இதனை கிராம மக்களிடமும் தெரிவித்தார். இதனையடுத்து கிராமவாசிகளும் பொலிஸாரும் காட்டுப் பகுதியில் சிறுமியைத் தேடினார்கள். இந்நடவடிக்கையில் பாணந்துறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரும் கலந்து கொண்டனர்.
கிராமவாசிகள் சதுப்பு நிலத்தில் இறங்கி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மண்ணினால் மூடப்பட்டிருந்த கீரைத் தோட்டம் கண்ணில் பட்டது. அங்கு சிறுமியின் செருப்பு ஒன்றும் கிடைக்கப் பெற்றது. அங்கிருந்தோர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அலறினார்கள். பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்தும் வெளியேற்றினார்கள்.
சம்பவம் பொலிஸாரினால் பாணந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதி இந்திராணி அத்துகோரள ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணை மேற்கொண்டு ஜனாஸாவை பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
கொலையாளி எவ்வாறு சிக்கினார்?
பாத்திமா ஆயிஷா இவ்வாறு எப்படி அகால மரணத்துக்குள்ளானார். இந்தக் கொடூர கொலையைச் செய்தது யார்? ஆயிஷா அங்கு எப்படிச் சென்றாள்? என்ற கேள்விகளுக்கு விசாரணை அதிகாரிகள் பதில் தேடினார்கள்.
ஆயிஷாவின் கொலை மீது முதலில் அவளது தந்தை மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவதினமன்று அவர் மொரட்டுவ பகுதிக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸ்குழுவொன்று அங்கு சென்றது. அவர் மொரட்டுவ பகுதியில் இருந்ததால் பொலிஸாருக்கு அவர் மீதான சந்தேகம் இல்லாமற் போனது.
‘இதன் பின்பு நாங்கள் அட்டுலுகம பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர்கள் யார் எனத் தேடினோம். இவ்வாறு தேடிக்கொண்டிருக்கையில் எமக்குத் தகவல் ஒன்று கிடைத்தது. ஐஸ் போதைப் பொருள் பாவனையாளர் ஒருவர் பற்றிய தகவலே அது. அன்று ஆயிஷாவை அந்த நபர் கேலி செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. அந்த நபரை கைது செய்து விசாரித்தோம். ஆனால் அவர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என உறுதியானது என பண்டாரகம பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
அத்தோடு எமக்கு மற்றுமொரு தகவலும் கிடைத்தது. சம்பவ தினமன்று இரவு ஒரு குழு அட்டுலுகம மைதானத்தில் இரவு முழுவதும் ஐஸ் போதைப் பொருள் பாவனையில் இருந்தார்கள் என்பதே அந்தத் தகவல். இதனையடுத்து நாங்கள் அவர்களைத் தேடினோம். இச்சந்தர்ப்பத்தில் அந்தக் குழுவினர் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றிருந்தார்கள். நாம் அவ்விடத்துக்குச் சென்று அவர்களில் ஓரிருவரிடம் விசாரணை மேற்கொண்டோம். அங்கேயே அவ்விடத்திலே பாரூக் என்பவனும் இருந்தான்’ என்றும் அவர் தெரிவித்தார்.
அவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டான். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகலவும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் விசாரித்தார்.
‘நீர் அன்று எங்கே இருந்தீர்?’
‘நான் காலையில் குஞ்சி ஹாஜியாரின் வீட்டுக்கு குழியொன்று அகழ்வதற்கு சென்றிருந்தேன் சேர்.’
‘எத்தனை மணிக்கு?’
‘காலையில் 9 மணியளவில் இருக்கும் சேர்’
‘அதன் பிறகு?’
‘குழிதோண்டி முடிப்பதற்கு 11.30 மணியாகிவிட்டது. பின்பு வீட்டுக்குச் சென்று குளித்து விட்டு பள்ளிவாசலுக்குப் போனேன்’
‘ குழி தோண்டுவதற்கு நீர் என்ன எடுத்துச் சென்றீர்?’
‘ வீல்பர் ஒன்றும் மண்வெட்டியும் சேர்’
பாரூக்கை விசாரித்து விட்டு பாரூக் கூறியது உண்மையா என்பதை அறிந்து கொள்வதற்காக உதவிபொலிஸ் அத்தியட்சகர் ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தார்.
‘தோட்டத்தில் குழியொன்று தோண்டுவதற்கு பாரூக் வந்தானா?’
‘பொய் சேர். குழியொன்று தோண்டுவதற்கு நான் பாரூக்கை கூப்பிட்டிருந்தேன். அன்று முழு நாளும் மழை. மழை காரணமாக குழி தோண்ட வேண்டியதில்லை என்று நான் பாரூக்கிடம் கூறினேன். வேறு ஒரு நாளில் குழி தோண்டுவோம் எனக் கூறிவிட்டு பாரூக் திரும்பிச் சென்றான் “ என்று ஹாஜியார் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதன் பின்பே பாரூக்கின் மீது பொலிஸாரின் கவனம் திரும்பியது. அப்போது பாரூக்கிற்கு வியர்த்துக்கொட்டியது. அவன் நடுங்கினான்.
‘உனது ஷர்ட்டைக் கழற்று’ பொலிஸார் உத்தரவிட்டனர். பொலிஸார் அவனது உடம்பை நோட்டம் விட்டார்கள். உடம்பில் சில இடங்களில் கீறல் தழும்புகள் இருந்தன.
‘உனது உடம்பில் இருக்கும் கீறல்கள் எதனால்?’
பாரூக் அமைதியாக இருந்தான்.
‘நான் உண்மையைக் கூறுகிறேன் சேர்’
அவன் மன்றாடினான். பொலிஸார் அவனை நீண்ட நேரம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்கள்.
‘இப்போது உண்மையைக் கூறு… நீ ஏன் இந்தப்பிள்ளையை கொலை செய்தாய்?’ பாரூக் உண்மையை கூறினான்.
‘நான் அன்று கூலிவேலைக்கு ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்றேன். வேலை கிடைக்கவில்லை. வேறோர் தினத்தில் குழி வெட்டுவோம் என ஹாஜியார் கூறினார்.
பின்பு நான் வேறு வேலை தேடினேன். கிடைக்கவில்லை. பின்பு வீட்டுப் பக்கம் போனேன். பாரூக் கதையைத் தொடர்ந்து கூறினான்.
ஆயிஷா கோழிக் கடைக்கு செல்வதைக் கண்டேன். அவளைக் கண்டதும் அவள் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது என்றும் கூறினான். பின்பு பாத்திமா ஆயிஷாவை காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளான். அங்குள்ள சதுப்பு நிலத்திலே அவள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளாள்.
‘சேர் அவளுக்கு ஒன்றும் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக. நான் அவளுக்கு பலாத்காரம் செய்யவில்லை’ பாரூக் சத்தியம் செய்தான்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை பொறுத்திருப்போம். அப்போதே உண்மை வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் காத்திருந்தார்கள்.
வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கலந்தமையே மரணத்துக்கான காரணம் என சட்டவைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பித்தது. பிரேத பரிசோதனை அறிக்கை மே 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை சந்தேக நபரின் வாக்குமூலத்துடன் பொருந்துவதை அவதானித்த பொலிஸார் அவரை பிரதான சந்தேக நபராக அறிவித்து பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸா நாயக்க முன்னிலையில் ஆஜர் செய்திருந்தனர்.
இந்நிலையிலே கடந்த 13ஆம் திகதி பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன்குமார பிரதிவாதிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்தார். சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக ஆயிஷாவின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டது. செலுத்த தவறினால் மேலதிகமாக ஆறரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவருமெனவும் நீதிவான் எச்சரித்தார்.- Vidivelli