எமது நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் காலத்துக்கேற்ற திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் நான்கு தசாப்தங்களுக்குப் பின்பு திருத்தங்களுக்கு உள்ளாகவுள்ளது. இச்சட்டம் இறுதியாக 1983ஆம் ஆண்டு திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முன்பு இச்சட்டம் 1962 ஆம் ஆண்டில் திருத்தங்களுக்கு உள்ளானது.
வக்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஏ.டப்ளியு.ஏ. சலாம் தலைமையில் மேலும் எழுவர் கொண்ட குழுவொன்றினை நியமித்துள்ளார். குழுவின் உறுப்பினர்கள் வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல் நிர்வாக சேவை உயர் அதிகாரி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் என துறைசார் நிபுணர்களாவர்.
தற்போது அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் குர்ஆன் மத்ரஸாக்கள் அரபுக்கல்லூரிகள் என்பவற்றுக்கான தெளிவான வழிகாட்டல்கள் இன்மை, பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கை பொறுப்பாளர் நியமனம், அவர்களது தகைமைகள், இமாம், கதீப்மார்களின் 06நியமனம், தகைமைகள் பற்றியும் தெளிவான வழிகாட்டல்கள் இல்லை.
இதன் காரணமாகவே நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் நாளாந்தம் பிரச்சினைகள் உருவாகின்றன. அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களின் கட்டமைப்பு, பாடத்திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக வக்பு சொத்துகள் தனியார்களினால் அனுபவிக்கப்படுகின்றன. சொந்தம் கொண்டாடப்படுகின்றன. கபூரிய்யா அரபுக்கல்லூரி வக்பு சொத்துக்கு உரிமை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கல்லூரி மூடப்பட்டுள்ளது. அக்கல்லூரி மாணவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
வக்பு சொத்தான பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பில் இரு தரப்பினர் முரண்பட்டுக் கொள்கின்றனர். வக்பு ட்ரிபியுனலில் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வக்பு சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாறான வழக்குகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வக்பு சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்.
பள்ளிவாசல்களில் நிலவும் நிர்வாக சிக்கல்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர் நியமனங்களில் குளறுபடிகள் என்பன போன்ற முறைப்பாடுகள் வக்பு சபைக்கு முன்வைக்கப்படும் போது அப் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வுகள் வழங்கப்படுவதில்லை.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வக்பு சபை நீண்ட காலத்தைச் செலவிடுகிறது. இந்நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் வக்பு சபை நீண்ட காலத்தைச் செலவிடுவதால் பண விரயம், நேர விரயம் என்பன தவிர்க்க முடியாதவையாகி விடுகிறன்றன. வக்பு சபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ஒருமித்து இவ்விடயத்தில் கவனம் செலுதத் வேண்டும்.
அத்தோடு பள்ளிவாசல் நிர்வாகத்தில் தனிநபர் தொடர்பான பிரச்சினைகள் வக்பு ட்ரிபியுனில் விசாரிக்கப்படும்போது சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவுகள் பல்லாயிரக்கணக்கில் பள்ளிவாசல் நிதியிலிருந்தே செலவழிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
வக்பு சபை திறன்பட செயற்படுவதற்கு முழுநேர உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அத்தோடு வக்பு சபை வாரத்தில் இரண்டு தடவைகளேனும் ஒன்று கூடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
திருத்தங்களை சிபாரிசு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழு துறைசார் நிபுணர்கள், அனுபவசாலிகளின் கருத்துகளை அறிந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli