எம்.எல்.எம்.மன்சூர்
இன்றைய இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட அதன் 75 வருட கால வரலாற்றின் கொந்தளிப்புக்கள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
2022 அரகலய மக்கள் எழுச்சியின் பின்னர் எமது அரசியல் சமூகத்தில் (Polity) நிகழ்ந்திருக்கும் பல முக்கியமான மாற்றங்கள், நாட்டின் அரசியலில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கும் முதன்மையான தரப்புக்களை (Key Players) ஒரு பெரும் குழப்ப நிலைக்குள் ஆழ்த்தியுள்ளன. சிங்கள சமூக ஊடகங்கள் கட்டமைத்து வரும் தீவிரமான எதிர்ப்பரசியலின் முக்கியமான ஒரு சாதனை, இதுவரை காலமும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கும் சம்பிரதாயபூர்வமான அரசாங்கக் கட்சி – பிரதான எதிர்க் கட்சி மோதல் அரசியலை (Bi – polar Contest) முழுவதுமாக வேறு ஒரு திசையில் திருப்பிவிட்டிருப்பதாகும். இலங்கை அரசியலில் நிகழ்ந்திருக்கும் ஒரு முக்கியமான நிலைமாற்றம் இது. இந்த நிலைமாற்றத்தை துல்லியமாக புரிந்து கொண்டால் மட்டுமே இன்றைய அரசியல் களத்தில் நிலவி வரும் பெரும் குழப்ப நிலைக்கான மூல காரணத்தை கண்டறிய முடியும்.
இந்தப் பின்னணியில் SLPP, SJB, UNP போன்ற பிரதான கட்சிகள், சிங்கள தேசியவாத முகாம், பொதுபல சேனா இயக்கம் போன்ற பௌத்த எழுச்சி இயக்கங்கள், பாராளுமன்றத்திற்குள் சிங்கள இனவாத செயல்திட்டத்தை முன்னெடுத்து வரும் ரதன தேரர் மற்றும் வீரவன்ச – கம்மன்பில சோடி போன்ற பல்வேறு தரப்பினரும் ஒரு தடுமாற்ற நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் பொதுசன அபிப்பிராயத்தை வடிவமைக்கும் பணியை முழுக்க முழுக்க சிங்கள சமூக ஊடகங்கள் கையிலெடுத்திருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வெளிப்படையாக எவரும் சொல்லாவிட்டாலும் கூட, SJB யையும் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களினதும் பொது எதிரியாக இப்பொழுது ஜேவிபி/ என்பிபி அணி அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அந்த நிலையில், ஜேவிபி / என்பிபி அணியின் எழுச்சியை முறியடிப்பதற்கும், சிங்கள சமூக ஊடகங்களில் இலட்சக் கணக்கான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் அமைப்புக்கு எதிரான (Anti Establishment) யூடியூப் பரப்புரையாளர்களின் செல்வாக்கை குலைப்பதற்கும் அவசியமான உத்திகளை வடிவமைக்கும் காரியத்திலேயே மேற்படி தரப்புக்கள் அனைத்தும் இப்பொழுது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
மஹிந்த ராஜபக்ச 2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த சிங்கள தேசியவாதத்துடன் இணைந்த பேரினவாத செயல்திட்டம் (Majoritarian Agenda) இப்பொழுது ஒரு பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. நாட்டின் பெரும்போக்கு அரசியலில் சிங்கள தேசியவாதமோ அல்லது இனவாதமோ இப்பொழுது ஒரு முதன்மையான சக்தியாக (A Force to Reckon with) இருந்து வரவில்லை. இனவாத கோஷங்களை மட்டும் முன்வைத்து சிங்கள மக்களை அணி திரட்டுவது இனிமேலும் சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை சம்பிக ரணவக்க, விமல் வீரவன்ச, சன்ன ஜயசுமன மற்றும் வசந்த பண்டார போன்றவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
பெரும்போக்கு அரசியலுக்கு வெளியில் சிங்கள – பௌத்த சமூகத்தில் முக்கிய சக்திகளாக எழுச்சியடைந்திருந்த பொதுபல சேனா, சிஹல ராவய மற்றும் ராவண பலய போன்ற இயக்கங்கள் சமூக ஊடகங்களிலிருந்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களை (Onslaught) எதிர்கொள்ளும் திராணியற்றவையாகும். இப்பொழுது பெருமளவுக்கு முடங்கிக் கிடக்கின்றன. மறுபுறத்தில், நீண்ட காலமாக ராஜபக்ச முகாமில் அணி திரண்டிருந்த தேசியவாத / இனவாத சக்திகள் இப்பொழுது பல்வேறு அணிகளாக பிரிந்து, சிதறுண்டு போயிருக்கின்றன. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சம்பிக ரணவக்க போன்றவர்கள் தனித்து விடப்பட்டிருப்பதுடன், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஆசனமொன்றை வெல்வது என்பது அவர்களைப் பொருத்தவரையில் ஒரு பெரும் சவாலாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை.
மேலோட்டமாக பார்த்தால் சஜித் பிரேமதாச ‘ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு’ கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவது போல தோன்றினாலும், அவருடைய அண்மைக் கால நடவடிக்கைகள் SJB ஐ மற்றொரு மொட்டுக் கட்சியாக (SLPP) நிலைமாற்றம் செய்யும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. முன்னாள் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளும் இப்பொழுது SJB மேடைகளில் முக்கிய பேச்சாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் நிகழ்த்தும் பெரும்பாலான உரைகள் ‘தாய் நாட்டை எதிரியிடமிருந்து மீட்டெடுத்த ரணவிருவாக்களுக்கு’ புகழாரம் சூட்டுபவையாகவே (Glorification of War Heroes) இருந்து வருகின்றன. கோத்தபய ராஜபக்ச வின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்த (முன்னாள் இராணுவத் தளபதி) தயா ரத்னாயக்கவும் சஜித் உடன் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றார். அதனையடுத்து, முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் SJB க்குள் வந்திருக்கிறார். இந்த எதிர்பாராத மாற்றங்கள் அனைத்தும் கோத்தபயவின் ஆசீர்வாதத்துடனேயே இடம்பெற்று வருவன போல் தெரிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை முறியடித்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்த ‘ரணவிருவாக்களுடன்’ தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சஜித்தின் ஒரு முயற்சியாகவே இவற்றை பார்க்க வேண்டியிருக்கின்றது. பிரேமதாச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வந்திருக்கும் எல்லே குணவங்ச தேரர் போன்றவர்கள் இது தொடர்பாக திைரமறைவிலிருந்து காய்களை நகர்த்தி வருவது போல் தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும், சஜித் பிரேமதாசவின் அண்மைக் கால நகர்வுகளின் பின்னணியில் மிக வலுவான ஒரு சிங்கள – பௌத்த மறைகரம் இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. (முன்னைய தேர்தல்களில் பெருமளவுக்கு சரிவடைந்திருந்த SJB யின் சிங்கள – பௌத்த வாக்கு வங்கியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், JVP / NPP அணியின் எழுச்சியை எதிர்கொள்வதற்கும் திட்டமிட்ட விதத்தில் இந்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன). மறுபுறத்தில், சஜித் பிரேமதாசவின் ‘Populist’ வகை அரசியல் இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் திவால் நிலையை அடைந்திருக்கும் நாடுகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தக்கூடியது அல்ல. தனது சொந்தப் பணத்திலிருந்து பன்சலைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மூலமும், பாடசாலைகளுக்கு பேருந்துகளை பெற்றுக் கொடுப்பதன் மூலமும் அவர் தீர்க்க விரும்பும் பிரச்சினைகள் எவை என்பது தெளிவாக தெரியவில்லை. அத்துடன், அவர் அண்மையில் தனது கட்சியில் புதிதாக சேர்த்துக் கொண்டிருக்கும் ஆட்களின் பெயர்ப் பட்டியலை பார்க்கும் பொழுது, இளைய தலைமுறையினர் எதிர்பார்த்திருக்கும் எந்த ஒரு ‘System Change’ ஐயும் அக்கட்சியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
SJB உடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சில கட்சிகளும் இந்த நகர்வுகளை மௌனமாக அவதானித்துக் கொண்டிருகின்றன. அக்கட்சிகளுக்கு வேறு போக்கிடம் இல்லாதிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். ஞானசார தேரருக்கு இணையான விதத்தில் நாட்டில் முஸ்லிம் வெறுப்பை விதைத்த சன்ன ஜயசுமன போன்ற ஒருவரை சஜித் தனது அணிக்குள் அரவணைத்துக் கொண்ட பொழுது அது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை. ஆகவே, (நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜேவிபி / என்பிபி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து) சிங்கள சமூக ஊடகங்களில் முனைப்புடன் இயங்கி வரும் பல யூடியூப் பிரபலங்கள் சீரழிவின் உச்ச கட்டத்திலிருந்து வரும் இலங்கை சமூக அரசியல் கட்டமைப்பின் (System) உள்ளார்ந்த ஓர் அங்கமாகவே SJB ஐயும் நோக்குகிறார்கள்.
பொதுஜன பெரமுன (SLPP) எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு விதமானது.
ரணில் விக்கிரமசிங்கவை கைவிடுவதாக இருந்தால் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது அவர்களின் முக்கிய பிரச்சினை. ராஜபக்ச ‘Brand’ க்கு இன்னமும் சந்தை மதிப்பு இருந்து வருகிறதா என்ற மிகப் பெரிய கேள்விக்குறி அவர்களை அலைக்கழித்து வருகின்றது. அதிலும் பார்க்க சிக்கலான பிரச்சனை ஒரு தேர்தலின் போது மக்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய தேர்தல் சுலோகம் (Campaign Slogan) என்ன என்பது. சிங்கள சமூக ஊடகங்களுக்கும், பெரும்போக்கு ஊடகங்களுக்கும் (Main Stream Media) இடையில் நிகழ்ந்து வரும் கடும் போட்டியில் சமூக ஊடகங்கள் வெற்றியீட்டி, இப்பொழுது முன்னணியில் நிற்கின்றன. அதனை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலேயே ‘தெரண’, ‘ஹிரு’ போன்ற காட்சி ஊடகங்களும், ‘திவயின, ‘அருண’ போன்ற சிங்கள நாளிதழ்களும் ஒரு சில முன்னணி சிங்கள யூடியூப் பிரபலங்களை ‘பௌத்த மதத்தையும், மகா சங்கத்தினரையும், பௌத்த மக்களின் உணர்வுகளையும் மிக மோசமான விதத்தில் இழிவுபடுத்தி வரும் நபர்களாக சித்தரித்து வருகின்றன. மேலோட்டமாக ‘பௌத்த மதத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்ற கோஷத்தை இந்த ஊடகங்கள் முன் வைத்தாலும் கூட, வியாபாரப் போட்டி மற்றும் தமது சந்தைப் பங்கினை வேகமாக இழந்து வருவதுடன் இணைந்த பதற்ற நிலைமைகள் ஏற்பவற்றினாலேயே இத்தாக்குதல்கள் தூண்டப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. .
சமூக ஊடகங்களில் சிங்கள வலதுசாரி மற்றும் தேசியவாத தரப்புக்களின் பிரசன்னம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் இருந்து வரவில்லை. அவ்வாறான ஒரு சில யூடியூப் தளங்களும் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களையே கொண்டுள்ளன. ‘நாத்திக தீவிரவாதிகளிடமிருந்து (நிராகமிக்க ரடிகல்ஸ்) புத்த சாசனத்தையும், மகா சங்கத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுலோகங்கள் மட்டுமே அவர்களுக்கு இப்பொழுது எஞ்சியிருக்கின்றன.
SLPP யும், (அதனை எதிர்ப்பதாக பாவனை செய்து வரும்) வீரவன்ச அணியும், ராஜபக்ச ஆதரவு சிங்கள ஊடகங்களும் அந்தச் சுலோகத்தை அவ்வப்போது உச்சரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது ஜேவிவி / என்பிபி அணி மீது தொடுக்கப்படும் ஒரு மறைமுகமான தாக்குதலாக இருந்து வருகிறது. ‘பௌத்த மதத்தை நாங்கள எந்த விதத்திலும் இழிவுபடுத்தவில்லை. தமது அத்தனை அயோக்கியத்தனங்களையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு மதத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி வரும் அரசியல்வாதிகளையும், பிக்குகளையும், ஊடக முதலாளிகளையும் அம்பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்’ என்கிறார்கள் சேபால் அமரசிங்க போன்ற முன்னணி யூடியூப் பரப்புரையாளர்கள்.
இதன் விளைவாக, 2010 – 2020 தசாப்தம் நெடுகிலும் நாட்டில் நிலவி வந்த இனங்களுக்கிடையிலான பெரும் பிளவு (Ethnic Polarisation) இப்பொழுது சிங்கள சமூகத்தின் இரு தரப்புக்களுக்கிடையிலான ஒரு பிளவாக திசைமாறியிருக்கின்றது. இவ்விரு தரப்புக்களும் ஒருவரையொருவர் பரஸ்பர வன்மத்துடன் எதிர்கொண்டு வரும் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்தப் பிளவு பாரிய வன்முறைச் சம்பவங்களுக்கான வித்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிங்கள சமூக ஊடகங்கள் வெற்றிகரமாக சாதித்திருக்கும் ஒரு கைங்கரியம் இது. இதன் பின்னணியில் JVP / NPP அணியின் மறைகரம் செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்த் தரப்பினர். சனத் நிசாந்த வின் மரணத்தை சமூக ஊடகங்கள் கொண்டாடிய விதம் குறித்து கருத்துத் தெரிவித்த ஹிருனிகா பிரேமச்சந்திர ‘இந்த வன்மத்தை ஜேவிபியே போஷித்து, வளர்த்து வருகிறது’ எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.
2022 அரகலய எதிர்ப்பியக்கத்தின் போது நாட்டு மக்கள் முன்வைத்த ‘System Change’ என்ற கோஷத்துக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமானால் அடுத்து வரும் தேர்தல்களில் SLPP , UNP, SJB ஆகிய கட்சிகளையும், அவற்றுடன் சந்தர்ப்பவாத கூட்டுக்களை வைத்துக் கொள்ளும் சிறு கட்சிகளையும் தோற்கடித்து பலவீனமடையச் செய்ய வேண்டும் என்பதே சிங்கள யூடியூப் பரப்புரையாளர்களின் கோரிக்கை. பரவலான விதத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் அபிப்பிராயங்களை வடிவமைப்பதில் இவர்கள் செலுத்தி வரும் செல்வாக்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதனுடன் இணைந்த விதத்தில் பின்வரும் தரப்புகளும் முற்றாக முடக்கப்பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்:
• ராஜபக்ச செயல்திட்டத்தின் உள்ளார்ந்த ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கும் முன்னணி தேரர்களான மெதகொட அபய திஸ்ஸ, அத்துரலிய ரதன, கலகொட அத்தே ஞானசார மற்றும் எல்லே குணவங்ச போன்ற தேரர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினர்.
• ராஜபக்சகளை எதிர்ப்பதாக வெளியில் கூறிக் கொண்டு, தீவிர மதவாத அஜன்டா ஒன்றை கையிலெடுத்து, ஜேவிபி /என்பிபி எழுச்சிக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்ட முயன்று வரும் ஒரு சில முன்னணி இளம் பிக்குகள் (உதாரணம் பலங்கொட கஸ்ஸப்ப தேரர்).
• சிங்கள பெரும்போக்கு ஊடகங்களின் ஒரு பிரிவு.
இப்பொழுது நட்சத்திர அந்தஸ்தை ஈட்டிக் கொண்டிருக்கும் சேபால் அமரசிங்க, சுதத்த திலகசிரி போன்றவர்கள் தமது காணொளிகளில் பயன்படுத்திவரும் சிங்கள வார்த்தைகள் இதுவரையில் எவரும் பொது வெளியில் சொல்லத் துணியாத ‘கெட்ட வார்த்தை’ வகையைச் சேர்ந்தவை. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தலைவர்களையும், முன்னணி பிக்குகளையும் நோக்கி எவ்வித மனத் தடைகளுமில்லாமல் அவர்கள் அந்த வார்த்தைகளை வீசி வருகிறார்கள். இந்த பௌத்த மத எதிர்ப்பு அலையின் பின்னணியில் ஜேவிபி/ என்பிபி அணி இருந்து வருகிறது என்பதே SLPP யையும் உள்ளிட்ட எதிர்த் தரப்பினரின் குற்றச்சாட்டு. ஜேவிபியை மறைமுகமாக சாடும் விதத்தில் சாகர காரியவசம் போன்றவர்களையும் உள்ளிட்ட சிங்கள வலதுசாரிகள் முக்கியமாக இரு வார்த்தைகளை உதிர்த்து வருகின்றனர். ஒன்று ‘வைரய’ – ‘பொறாமையால் தூண்டப்பட்ட வன்மம்’ என்று சொல்லலாம். மற்றது ‘குஹகயோ’ என்பது – ‘நயவஞ்சகர்கள்’. சிங்கள நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் ஜேவிபியையும் உள்ளிட்ட இடதுசாரிகளை நீண்ட காலமாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே நிராகரித்து வந்திருக்கிறார்கள். அதாவது ‘மற்றவர்கள் உண்டு, மகிழ்ந்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்’ என்ற பொதுப் புத்திச் சார்ந்த விமர்சனத்தின் வெளிப்பாடு அது.
இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு சுவாரஷ்யமான விடயம் தென்னிலங்கை சிங்கள சமூகத்தில் உருவாகியிருக்கும் ஓரளவிலான அரசியல் விழிப்புணர்வும், (‘A’ க்கு பதிலாக ‘B’ மற்றும் ‘B’ க்கு பதிலாக ‘A’ என்ற வகையிலான) ஏமாற்று அரசியல் மீதான அதீத விரக்தியும் சார்பு ரீதியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதே அளவில் காணப்படவில்லை என்பதாகும். வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சமூக, அரசியல் காரணிகள் மிகவும் சிக்கலானவை. ஆட்சியாளர்களை மாற்றும் விடயத்தைப் பார்க்கிலும், (யார் ஆட்சிக்கு வந்தாலும்) கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வது எப்படி என்ற விடயத்திலேயே அவர்கள் அதிகமும் கவனஞ் செலுத்தி வருகிறார்கள். TNA, SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகளுக்குள் நடக்கும் பெரும்பாலான உட்சண்டைகள் இந்தப் புள்ளியை மையமாகக் கொண்டே நிகழ்ந்து வருகின்றன. அடுத்து வரப்போகும் (ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்) தேர்தல் ஜேவிபி / என்பிபி அணியைப் பொருத்தவரையில் மிகவும் நிர்ணயகரமான ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ‘அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது’ என்ற விதத்தில் மேற்படி யூடியூப் செயற்பாட்டாளர்கள் ஓர் அதீத நம்பிக்கையை கட்டியெழுப்பி வருகிறார்கள்.
தென்னிலங்கையில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்களும் ஓரளவுக்கு அதனை ஊர்ஜிதம் செய்து வருகின்றன. ‘நாட்டில் அப்படி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையொன்று இருந்து வரவில்லை’ என எதிர்தரப்புக்கள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்து வந்த போதிலும், அவர்கள் வெளிப்படுத்திக் காட்டும் உடல் மொழியும், அவர்களுடைய முகங்களில் பிரதிபலிக்கும் பதற்ற உணர்வுகளும் அவர்கள் ‘தெரிந்தே பொய் சொல்கிறார்கள்’ என்பதனை அம்பலப்படுத்துகின்றன. அதன் விளைவாக, SLPP யையும் உள்ளடக்கிய எதிர்த்தரப்பு அடுத்து வரவிருக்கும் அரசியல் மாற்றங்களை மிகுந்த பதற்றத்துடனும், தனது எதிர்காலப் பாதுகாப்பு தொடர்பான இனம் புரியாத ஓர் அச்சத்துடனும் எதிர்கொண்டு வருகின்றது. இங்குள்ள கவலைக்குரிய விடயம் 2024 இல் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை ஒத்தி வைக்கப்பட்டாலும் நாட்டில் வன்முறை வெடிக்க முடியும் என்பதாகும்.
அதேபோல, ஜேவிபி/ என்பிபி ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியீட்டினாலும், தோல்வியடைந்தாலும் 2022 மே 09 ஆந் திகதி பகல் கொழும்பிலும், அன்றைய தினம் இரவு நாடு முழுவதும் அரங்கேறிய அராஜக செயல்கள் மீண்டும் ஒரு முறை அதிலும் பார்க்க மோசமான விதத்தில் அரங்கேறக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.
-Vidivelli