ஏ.ஆர்.ஏ.பரீல்
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவை முழுமையாக கைப்பற்றிக்கொள்ளும் வரை இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காஸாவின் தெற்கு நகரமான ரஃபா நகரைத் தாக்குமாறும் இஸ்ரேலிய பிரதமர் தனது படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தோடு ரஃபா நகரிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், ஹமாஸ் போராளிகளை ஒழிப்பதற்குமான திட்டத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறும் இஸ்ரேலிய படையினருக்கு பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
எகிப்திய எல்லையிலுள்ள இந்நகரில் காஸாவின் 24 இலட்சம் மக்களில் அரைப் பங்கினர் தங்கி வாழ்வதாக ஐ.நா. அறிவித்துள்ளது. காஸாவின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் ஆபத்து நிலவுவதாக ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளது. அத்தோடு காஸா ரஃபா நகர் மீதான இஸ்ரேல் படையெடுப்பு பேரழிவினை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கானோர் பலியாவதற்கும், காயங்களுக்கு உள்ளாவதற்கும் அது வழிகோலும் எனவும் ஹமாஸ் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இத்தகைய அழிவுகள் ஏற்பட்டால் அதற்கு அமெரிக்கா, சர்வதேச சமூகம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என்பன பொறுப்பாகும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் இன்னும் சில மாதங்களுக்குள் முழுமையான வெற்றியை எய்துவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.
ரஃபா நகரை காலியாக்குங்கள்
காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவிலிருந்து சிவிலியன்களை வெளியேற்றுமாறும் இஸ்ரேலிய பிரதமர் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலின் காஸாவுக்கு எதிரான யுத்தத்தினையடுத்து சுமார் 15 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக ரஃபா நகரில் தஞ்சமைடந்துள்ளனர்.
ரஃபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்துள்ளது. மற்றும் ஐரோப்பிய யூனியன் ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரஃபா நகரிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றுவது என்பது சாத்தியமற்றது என அப்பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ரஃபா நகரில் ஹமாஸின் 4 படைப் பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். அவர்களை அழிக்க வேண்டுமாயின் அப்பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றியே ஆக வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ரஃபா நகர்
காஸாவின் தென்பகுதி நகரான ரஃபா காஸாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான குறுக்கிடும் நிலையமாகும் (Crossing Point) ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும். ஏற்கனவே மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமை மேலும் மோசமடைந்து பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும் என ஐரோப்பிய யூனியனின் உயர்நிலை இராஜதந்திரி ஜோசப் பொரல் சமூக வலைத்தளமொன்றில் எழுதியுள்ளார்.
இதேவேளை ரஃபா நகர் எதிர்நோக்கவுள்ள நிலைமை தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் கருத்து தெரிவிக்கையில், ‘ரஃபா நகர் பொதுமக்களின் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். அங்குள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதேவேளை அங்குள்ள மக்கள் பலவந்தமாக இடமாற்றம் செய்யப்படக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ரஃபா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அங்குள்ள மக்கள் மத்தியில் கவலை மேலிட்டுள்ளது. அவர்கள் பீதியிலே நாட்களைக் கடத்துகிறார்கள் என பலஸ்தீன் அகதிகளுக்கான ஐ.நா.வின் உதவி நிறுவனத்தின் (UNRWA) தலைவர் தெரிவித்துள்ளார். ரஃபாவிலுள்ள மக்கள் தாம் எங்கு இடம் பெயர்ந்து செல்வது என்று புரியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் UNRWA ஐ.நா. ஏஜன்சியின் தலைவர் பிலிப் லஸாரினி தெரிவித்துள்ளார்.
ரஃபா நகர் மக்கள் தூக்கமின்றி தாக்குதலுக்கு அஞ்சி பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை இஸ்ரேல் ரஃபா மீதோ அல்லது வேறு எப்பகுதியிலோ இராணுவ தாக்குதல்களை மேற்கொள்வதாயின் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பினை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஐ.நா.பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். ரஃபா மீதான இராணுவ நடவடிக்கை அம்மக்கள் மீது பாரிய அழிவுகளையே ஏற்படுத்துமேயன்றி அவர்களுக்கு எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் தென் இஸ்ரேல் மீது கொண்ட தாக்குதல்களில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அன்று முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காஸா யுத்தம் காரணமாக இதுவரையில் சுமார் 28000 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும், சிறுவர்களும் குழந்தைகளுமாவர். அத்தோடு சுமார் 67 ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகள் கண்டனம்
பலஸ்தீன அகதிகள் பெரும் எண்ணிக்கையில் தஞ்சம் புகுந்திருக்கும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் பிரதமர் தாக்குதல்களை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கின்றமையை உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன.
‘காஸாவின் சனத்தொகையில் அரைவாசிப் பேர் ரஃபா நகரிலே தஞ்சம் புகுந்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள் அவர்கள் என ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். ‘இராணுவ நடவடிக்கைகளினால் அதிக மனித உயிரிழப்புகள் ஏற்படலாம்’ என டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் ஹேன்க் ப்ரூயின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஃபா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பலிகொள்ளப்படும் என ஹமாஸ் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு பணயக் கைதிகள் மீட்பு
ரஃபா நகர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் இஸ்ரேலின் திட்டத்தை உலக நாடுகள் கண்டித்துள்ள நிலைமையிலும் ரஃபா நகரில் ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் களமிறங்கியுள்ளது.
ரஃபா நகரிலிருந்து இரு இஸ்ரேலிய பணயக் கைதிகளை இராணுவ நடவடிக்கையின் மூலம் மீட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இரு பணயக் கைதிகளும் இஸ்ரேலிய வைத்தியசாலையில் வைத்திய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்ணான்டோ சைமன் மார்மன் (60) மற்றும் லுயிஸ் ஹார் (70) ஆகிய இருவரே மீட்கப்பட்டுள்ளனர். இந்த இரு பணயக் கைதிகளும் ரஃபாவின் கட்டிடமொன்றின் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
பலஸ்தீனர்களை ரஃபா நகருக்கு குடியேறுமாறும் அப்பிரதேசமே பாதுகாப்பானது என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை அந்நகர் மீது பாரிய தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli