முஸ்லிம் விவாக, விவாக இரத்துச் சட்டம் இரகசியமாக திருத்தம் செய்யக் கூடாது
பேரியல் தலைமையில் பெண்கள் குழு பிரதமரிடம் வலியுறுத்து
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் இரகசியமாக மேற்கொள்ளப்படக்கூடாது. முதலில் அத்திருத்தங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்பே சட்டமாக்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் பிரதிநிதிகள் குழுவொன்று பிரதமரை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இச்சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் தாமதிக்கப்படக்கூடாது. தாமதங்கள் மேலும் பாதிப்புகளையே ஏற்படுத்தும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சப்ரிஹலீம்தீனின் தலைமையிலான குழு திருத்தங்கள் தொடர்பான சிபாரிசுகள் அடங்கிய தனது அறிக்கையை தற்போதைய நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிடம் கையளித்தும் திருத்த சட்டமூலம் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவது குறித்தும் நாம் பிரதமரிடம் அதிருப்தியை வெளியிட்டதாக குறிப்பிட்ட குழுவின் பிரதிநிதிகளில் ஒருவாரான ஹசனா சேகு இஸ்ஸதீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
பலதார திருமண அனுமதியில் பல இறுக்கமான நிபந்தனைகள் குர்ஆனின் வழிகாட்டலுடன் உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அமைய வேண்டுமெனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
சட்டத்தை மாற்றுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. இளவயது திருமணங்களை இல்லாமற் செய்வதற்கு பெண்கள் குறைந்தது க.பொ.த. உயர்தரம் வரையிலாவது பாடசாலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
காதி நீதிபதிகள் நியமனத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்படுகையில் ‘ஆண்’ என்ற பதத்தை நீக்கி விடுவதன் மூலம் இப்பதவிக்கு பெண்களும் விண்ணப்பிக்கம் சந்தர்ப்பத்தை வழங்குவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரைச் சந்தித்த பெண் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையில் ஹசனா சேகு இஸ்ஸதீன் ,ஹிஷ்யாமா ஹமின், பாத்திமா சப்ரா ஜாஹிட், பாத்திமா அமானா மற்றும் சட்டத்தரணி எர்மிசா தேகல் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
முஸ்லிம் பெண் பிரதிநிதிகளின் கோரிக்கையை செவிமடுத்த பிரதமர் தினேஷ்குணவர்தன முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த சிபாரிசுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். – Vidivelli