பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் இன்றும் நீடித்த வண்ணமேயுள்ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
மோதல்கள் ஆரம்பித்த கடந்த 130 நாட்களில் 28340 பலஸ்தீனர்கள் இஸ்ரேலினால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 12300 பேர் சிறுவர்களாவர். 67984 பேர் காயமடைந்துள்ளனர். 1.5 மில்லியன் பலஸ்தீனர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 610000 சிறுவர்கள் பட்டினிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 156 ஐ.நா. ஊழியர்களும் 124 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 340 சுகாதாரத்துறை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 23 வைத்தியசாலைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இவை இந்த நான்கு மாத காலப்பகுதியில் இஸ்ரேல் நடாத்திய மிகப் பெரிய அட்டூழியத்தின் சாட்சியங்களாகும். இத்தரவுகள் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டவையாகும்.
தற்போது மோதலின் மையப்புள்ளியாக ரஃபா பகுதி மாறியுள்ளது. இஸ்ரேல் ரஃபா நகரை முற்றாக அழிக்கப் போவதாக சூளுரைத்துள்ளது. அங்கு வசிக்கும் இலட்சக்கணக்கான மக்களை உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
காசாவின் மொத்த மக்கள் தொகையில், பெரும்பாலானவர்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தஞ்சமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் காசாவில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல், ரஃபா மீது படையெடுத்திருப்பது மனிதாபிமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால் “நான்கு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் காசாவில் எஞ்சியிருக்கும் கடைசி ஹமாஸின் கோட்டையே இந்த எகிப்தின் எல்லையான ரஃபாதான்” என்று இஸ்ரேல் கூறுகிறது.
அண்மையில் ஹமாஸ் முன்மொழிந்த யுத்த நிறுத்த யோசனையை இஸ்ரேல் பிரதமர் நிராகரித்துள்ளார். இது அவர் அமைதியை அன்றி போரையே விரும்புகிறார் என்பதை உறுதிப்படுத்தி நிற்கிறது.
இஸ்ரேல் அடுத்து வரும் நாட்களில் ரஃபாவில் பாரிய மனிதப் பேரழிவுக்கு திட்டமிடுகிறது என்பதை இப்போதைக்கு உணர முடிகிறது. ஏற்கனவே காஸாவில் பல பகுதிகளிலுமிருந்து உயிர்தப்பி வந்து ரஃபாவில் தங்கியிருக்கும் மக்கள் இந்தத் தாக்குதல்களால் மீண்டும் அவலத்துக்குள் தள்ளப்படப் போகின்றனர். இதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது.
அரபு நாடுகளும் பலஸ்தீன ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அறச்சீற்றத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான பிரசாரம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இஸ்ரேலை முழுமையான போர் நிறுத்தத்திற்கு கொண்டுவருவதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli