ஏ.ஆர்.ஏ.பரீல்
இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 ஜனவரி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்துறை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.
என்றாலும் இஸ்ரேல் காஸாவில் தனது இனப்படுகொலை செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவில்லை. காஸாவில் தினம் தினம் பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மட்டுமன்றி சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடர்ந்த இனப்படுகொலை வழக்கு அட்டூழியமானது எனவும் சட்டவிரோதமானது எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்தோடு தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் தேவையானதை தொடர்ந்தும் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகள் பல இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிராத நாடான தென் ஆபிரிக்கா, காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு சென்றது.
குறிப்பிட்ட சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரமான ஹேக்கை தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்டதாகும். அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்நீதிமன்றத்திற்குக் கட்டுப்படுவதில்லை.
சர்வதேச நீதிமன்றம் காஸா படுகொலை செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளதே தவிர போர் நிறுத்தம் தொடர்பில் எத்தகைய உத்தரவினையும் பிறப்பிக்கவில்லை. இந்நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான தீர்ப்பொன்றினை வெளியிடும் என்பதை எதிர்பார்க்க முடியாது.
சர்வதேச நீதிமன்றின் உத்தரவு
இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் இதனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க முடியும் என இந்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை நடவடிக்கையிலிருந்து இஸ்ரேல் விலகி இருத்தல், இனப்படுகொலையைத் தடுத்தல், இனப்படுகொலைக்கான நேரடி மற்றும் பொதுத் தூண்டுதல் வழங்குவோரைத் தண்டித்தல் மற்றும் காஸாவில் உள்ள பொது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்ய வினைத்திறனான, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட ஆறு முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பாதுகாக்கவும், அதன் உத்தரவுக்கு இணங்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு மாதத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கவும் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
எதிர்பார்த்தது போலவே இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிராகரித்துள்ளது. இதேவேளை தொடர்ந்தும் காஸாவில் இனப்படுகொலைகள் இஸ்ரேலினால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. சர்வதேச நீதிமன்றின் தீர்ப்புகள் கட்டுப்பாடு கொண்டவையே. ஆனால் அவற்றை அமுல்படுத்துவதற்குத் தான் பொறிமுறைகள் எதுவும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் அதன் நேச நாடான அமெரிக்காவுக்கும் விடுக்கப்பட்ட சவால் எனலாம்
‘சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது இஸ்ரேலுக்கும் அதன் முதன்மையான பாதுகாவலர்களான அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கும் மிகப்பெரிய சட்டரீதியான தோல்வியாகும் என ‘த இன்டர்செப்ட்’ இல் ஜெர்மி ஸ்காஹில் எழுதியுள்ளார். பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்யும் முயற்சியில் அமெரிக்கா சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக உதாசீனப்படுத்துமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் என பத்தி எழுத்தாளர் ஜேக் ஜோஹன்சன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிப்பணிப்பாளர்
பால்கீஸ் ஜர்ராஹ்
‘சர்வதேச நீதிமன்றத்தின் குறிப்பிட்ட முக்கிய தீர்ப்பானது காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையையும் அட்டூழியங்களையும் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதை இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் உணர்த்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இணை சர்வதேச நீதிப்பணிப்பாளர் பால்கீஸ் ஜர்ராஹ் தெரிவித்துள்ளார். நீதிமன்றின் உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். ‘சர்வதேசம் உடனடியாக தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த தீர்ப்பை அமுல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இஸ்ரேலின் போர் குற்றங்களால் காஸாவில் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். அத்தோடு அவர்களது துன்பங்களும் துயரங்களும் மதிப்பிட முடியாதவை.
சர்வதேச நீதிமன்றத்தின் விரைவான தீர்ப்பு காஸாவின் மோசமான நிலைமையை அங்கீகரிப்பதாக உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றனர். உணவின்றி அல்லலுறுகின்றனர். இஸ்ரேலின் நட்பு நாடுகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மாத்திரம் காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அழிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. போர் நிறுத்தம் சர்வதேச நீதிமன்றத்தினால் உத்தரவிடப்படாவிட்டாலும் உடனடி போர் நிறுத்தம் இன்றியமையாததாகும். இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தங்கள் அவசியமாகும் என்றார்.
சர்வதேச மன்னிப்பு சபை
காஸா பகுதியில் மக்களை அழிக்கவும் பலஸ்தீனர்களுக்கு எதிராக மரணம், பயம் மற்றும் துன்பத்தை கட்டவிழ்த்து விடவும் இஸ்ரேல் ஈவிரக்கமற்ற இராணுவ செயற்பாடுகளை மேற்கொள்வதை உலகம் தொடர்ந்தும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டாது என்ற தெளிவான செய்தியை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பில் வழங்கியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி நிருபர் பால் ஆடம்ஸ்
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு தென் ஆபிரிக்கா அல்லது பலஸ்தீனர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி அல்ல. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இது 2023 அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலின் தற்பாதுகாப்புக்கான உரிமையை மறைமுகமாக அங்கீகரித்துள்ளது. ஆனால் காஸாவின் நிலைமை பேரழிவைத் தரக் கூடியது என்பதை ஐக்கிய நாடுகளின் சபையின் மிக உயர்ந்த சட்ட அமைப்பு அறிந்துள்ளது என பிபிசியின் நிருபர் பால் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலின் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டின் மீது தனது இறுதித் தீர்ப்பினை வழங்குவதற்கு முன்பு நிலைமை மேலும் மோசமடையும் அபாயத்தில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்புச் செயன்முறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். இதன் காரணமாக சர்வதேச நீதிமன்றம் தென் ஆபிரிக்காவில் கோரப்பட்ட 9 தற்காலிக நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளது.
நீதிமன்றின் 17 நீதிபதிகளில் அறுதிப் பெரும்பான்மையினர் பலஸ்தீனர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக கடுமையான தீங்கு விளைவிப்பது, காஸாவில் சகிக்க முடியாத வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது அல்லது பலஸ்தீனர்களை வேண்டுமென்றே தடுப்பது போன்ற அனைத்திலிருந்தும் இஸ்ரேல் தவிர்ந்து கொள்ள வேண்டுமென தீர்ப்பளித்துள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பானது இஸ்ரேலை மிகவும் இக்கட்டான, கடினமான நிலைக்குத் தள்ளியுள்ளது என பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் ஜெப்ரி நைஸ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவுகளை இஸ்ரேல் முற்றுமுழுதாக மறுப்பதானது அதன்மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும். அத்தோடு பலஸ்தீனர்கள் மீது உலகளாவிய ரீதியில் ஆதரவினையும் அனுதாபத்தினையும் பெற்றுக் கொடுக்கச் செய்யும் என முன்னாள் யூகோஸ்லேவியா அதிபர் ஸ்லோபோடன் மிலோசொவிக் தொடர்பான ஹேக்கின் சர்வதேச விசாரணையின் தலைமை வழக்கறிஞராக செயற்பட்ட நைஸ் குறிப்பிட்டுள்ளார்.
தென்ஆபிரிக்க அமைச்சர்
நலேடி பாண்டோர்
இஸ்ரேல் காஸாவில் போர் குற்றங்கள் புரிந்துள்ளது என்பதற்கான ஏராளமான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அவரைக் கைது செய்வதற்கு ஏன் பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை? என தென் ஆபிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் நலேடி பாண்டோர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பலஸ்தீன மக்களையும் பலஸ்தீனத்தையும் முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் மாத்திரமே காப்பாற்றிக் கொள்ள முடியும். பலஸ்தீனர்கள் தங்கள் சொந்த நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றார்கள்.
சுமார் 27 ஆயிரம் பேர் தங்களின் உயிர்களை இதற்காக தியாகம் செய்துவிட்டார்கள். நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் இஸ்ரேலினால் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.
ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. இந்த அவலங்கள் தொடர்வதை முஸ்லிம் உலகம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. முஸ்லிம் நாடுகள் பலஸ்தீனத்தையும், பலஸ்தீன மக்களையும் காப்பாற்றுவதற்கு ஒன்றிணைய வேண்டும். – Vidivelli