கலாநிதி ஜெ.டி. கரீம்தீன், (நளிமி),
(PhD in Sociology of Education), Senior lecturer, (OUSL),
அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்கத்தினை நோக்கி மாணவர்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உஸ்தாத்மார்கள் அல்லாஹ்விடத்தில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இந்த உயரிய இடத்தில் இருப்பவர்கள் தங்கள் போதனையின் போது எவ்வாறு மாணவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் பல சான்றுகள் மூலம் எமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் தமது தோழர்களுடன் கனிவாகவும் இரக்கத்துடனும் நடந்து கொண்டார்கள். இதனால் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களது நட்பை விரும்பியதுடன் அவர்களிடம் கற்க விருப்பமுடையவர்களாகவும் காணப்பட்டார்கள். இதனை அல்குர்ஆனில் ஆல இம்ரான் அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகின்றது.
“அல்லாஹ்வின் கருணையின் காரணமாக நபியே! நீர் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டீர். நீங்கள் கொடூரமானவராகவோ கடின உள்ளம் கொண்டவராகவோ இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களை விட்டும் விரண்டோடி இருப்பார்கள்” அல்குர்ஆன் (3:159)
மேலும், நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். “யார் சிறியவர்கள் மீது இரக்கம் காட்டவில்லையோ, பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தவில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.” (அபுதாவுத், திர்மித், அஹமது)
குறிப்பாக பாடசாலை, மத்ரஸா சூழலில் ஆசிரியர்கள் அல்லது உஸ்தாத்மார்கள் பிள்ளைகளால் விரும்பக் கூடியவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் வருகையை மாணவர்கள் ஆசையுடன் எதிர்பார்க்க வேண்டும். மாணவர்களை ஏசுதல், அடித்தல், கடுமையாக தண்டித்தல் என்பன கற்றலின்பால் வெறுப்பை ஏற்படுத்தி பாடசாலையில் இருந்து அல்லது மத்ரஸாவில் இருந்து இடைவிலகவும் காரணமாக அமைந்துவிடும்.
1400 வருடங்களுக்கு முன்னரே தண்டனையின் மூலம் நடத்தை மாற்றத்தினை மாணவர்களிடத்தில் ஏற்படுத்த முடியாது என அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவும் தெளிவாக போதித்துள்ளன. நவீன உளவியலும் தண்டனை மூலம் நடத்தை மாற்றத்தை (Behavior change) ஏற்படுத்த முடியாது என விஞ்ஞானபூர்வமாகக் கூறுகின்றது.
நடத்தை மாற்றம் என்பது ஒருவரது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் ஏற்படுத்தும் மாற்றமாகும். நேர்மனப்பாங்குடன் மீள வலியுறுத்தல் செயற்பாடுகளின் மூலமும் மாணவர்களுடன் கனிவாக நடப்பதன் மூலமும் நடத்தை மாற்றத்தினை இலகுவாக ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் உளவியல் பின்னணி, பொருளாதார பின்னணி, சமூகப் பின்னணி என்பவற்றை கருத்திற் கொண்டு தனது கற்றல் செயற்பாட்டை அமைத்துக் கொள்வது கட்டாயமானதாகும்.
ஒரு காட்டுப்புற அரபி பள்ளிவாசல் ஒன்றில் சிறுநீர் கழித்தார். அப்போது ஸஹாபாக்கள் அவருடன் கடுமையாக நடந்து கொள்ள முற்பட்டார்கள். ஆனால், நபியவர்கள் அந்த அந்தக் காட்டுப்புற அரபி சிறுநீர் கழித்த அவ்விடத்தை சுத்தம் செய்யச் சொன்னார்கள். நபி அவர்கள் அரபியுடன் நடந்து கொண்ட விதம், அந்த காட்டுப்புற அரபியின் பின்னணியை விளங்கிக் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் வாண்மைத்துவ ரீதியிலும் இச்செயலை அணுகியிருந்தார்கள்.
ஒரு முறை ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் ஹிரா குகையிலே இருக்கின்ற பொழுது ஜிப்ரீல் அலை அவர்கள் புனித அல்குர்ஆன் வசனத்தை “ஓதுவீராக” என்று பணித்தார்கள். அந்த நேரத்தில் நபி அவர்கள் “எனக்கு ஓதத் தெரியாதே” என்று கூற அதற்கு ஜிப்ரீல் அலை அவர்கள் நபி அவர்களை கட்டி அணைத்தார்கள். கட்டியணைத்ததும் அந்த நேரத்தில் ரசூலுல்லாஹ் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. பின்னர் “எதனை ஓத” என்று கேட்டார்கள். எனவே, இதுவும் எங்களுக்கு கற்றல் செயற்பாட்டை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்ததொரு வரலாற்று ஆதாரமாகும்.
இந்த வகையில் நாம் என்றும் மதிக்கின்ற மார்க்கக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க முன்வந்துள்ள உஸ்தாத்மார்களை கௌரவப்படுத்தும் அதேவேளை எமது இன்றைய மத்ரஸாக்களும் உஸ்தாத்மார்களும் இதனை நன்கு விளங்கி செயல்படுவதுடன், மத்ரஸா உஸ்தாத்மார்களை இதற்காக பயிற்றுவிப்பதற்கான ஒரு பொறி முறையொன்றினையும் ஏற்படுத்துவது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள், மத்ரஸா நிருவாகிகளின் கட்டாய கடமையாகும். – Vidivelli