ஏ.ஆர்.ஏ. பரீல், வாஹிட் குத்தூஸ்
‘நான் கனவிலும் எதிர்பார்க்காத இந்த சோக சம்பவம் நடந்து விட்டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்களை விட்டும் போய்விட்டார். இது எனக்கோர் படிப்பினை. எனது அடுத்த பிள்ளைகளே எனது உலகம். நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’ என்று கூறி கண் கலங்கினார் எம்.எஸ்.எம்.ரிஸ்வான் (வயது 44).
கடந்த 29ஆம் திகதி, தனது தாயாரிடம் தனியார் கணித வகுப்புக்கு செலுத்துவதற்கு பணம்கோரி வழங்கப்படாத நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஆயிஷா பர்வின் (16) என்ற மாணவியின் தந்தையே இவராவார்.
‘விடிவெள்ளி’ ஆயிஷாவின் தந்தையை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எனக்கு நான்கு பெண் பிள்ளைகள். நான் முன்பு அலுமினியம் பொருத்தும் வேலைகள் செய்துகொண்டிருந்தேன். தற்போது இந்த வேலை அதிகமாக கிடைக்காமையினால் பாஸ்மாரிடம் கைவேலைகள் செய்து வருகிறேன். வருமானமும் குறைவு.
சம்பவதினம் காலை மகள் தாயாரிடம் கணித பாட தனியார் வகுப்புக்கு பணம் கொடுக்கவுள்ளதாகவும், பணம் தருமாறும் கோரியிருக்கிறாள். இதனால் பணம் தொடர்பில் எனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. நான் இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறி வீட்டிலிருந்தும் கோபத்தில் வெளியேறினேன்.
‘வாப்பா வீட்டுக்கு வராவிட்டால் பிரச்சினை. எங்களால் வாழ முடியாது என்று சிந்தித்த எனது மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். மனைவி தனது சிகிச்சைக்காக உட்கொள்ளும் மருந்து வில்லைகளை பாத்ரூமுக்கு எடுத்துச் சென்று அருந்தியிருக்கிறாள்.
அப்போது நான் வீட்டில் இருக்கவில்லை. வீட்டிலிருந்து மனைவி தொலைபேசி மூலம் நடந்ததை தெரிவித்தாள். அவசரமாக ஓடிவரும்படி மனைவி கூறினாள். நான் அப்போது டவுணில் இருந்தேன். பின்பு மகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டதாக அறிவித்தார்கள். வைத்தியசாலைக்குப் போனேன். மகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கினார்கள். ஆனால் மகளைக் காப்பாற்ற முடியாமற் போனது. இப்போது தான் நான் வேதனையை உணர்கிறேன்.
தனியார் வகுப்புக்கு செலுத்த வேண்டிய சிறிய தொகைப் பண விவகாரம் எனது மகளின் உயிரையே பறித்துவிட்டது என்றார்.
பதுளை ஜம்இய்யத்துல் உலமா
‘‘உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி பதுளையின் பிரபல பாடசாலை ஒன்றில் பயின்றவள். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தனியார் வகுப்புக்குச் செலுத்த வேண்டிய கட்டணமே இந்த பரிதாப முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது’’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதுளை மாவட்டம் மற்றும் பதுளை நகர் கிளையின் செயலாளர் என்.வை. பெளஸுல் நிஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘தனியார் வகுப்பு கட்டணம் தொடர்பில் ஆரம்பித்த பிரச்சினை மாணவியின் தந்தை, தாயாரை விட்டுப் போய்விடுவேன் என்று கூறுமளவுக்குப் பெரிதாகி இறுதியில் தற்கொலையில் நிறைவு பெற்றிருக்கிறது.
எம்.எஸ்.எம். ரிஸ்வானின் மற்றொரு மகள் எனக்குச் சொந்தமான அபாயா கடையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் வரையில் வேலை செய்தாள். அதன் பிறகு திடீரென வேலைக்கு வரவில்லை. அதற்கான காரணம் தெரியாது.
அவர்கள் வதியும் புவக்கொடமுல்ல கிராமம் பதுளை நகரிலிருந்தும் 2 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ளது. அபிவிருத்தி அடையாத கிராமம். பெரும் எண்ணிக்கையானோர் வறியவர்களே இங்கு இருக்கிறார்கள்.
பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார பிரச்சினைகளுக்குள் மூழ்கியுள்ளன. அவர்களால் பிரச்சினைகளிலிருந்தும் மீள முடியவில்லை என்றார்.
மாணவி ஆயிஷா பர்வீனின் (16) ஜனாஸா பதுளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இஷா தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் முரண்பட்டுக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அவர்களது உளவியலைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இவ்வாறான துரதிஷ்டமான சம்பவங்கள் நிகழ்வதை தடுத்து நிறுத்த முடியும். – Vidivelli