(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாலின சமத்துவமின்மை காதி நீதிமன்றங்களில் காணப்படுகிறது. காதி நீதிமன்றங்களில் ஆண், பெண் சமமாக நடத்தப்பட வேண்டும்.காதி நீதிபதிகளும் விவாகப் பதிவாளர்களும் கரிசனையுடன் செயல்படாமை தவிர்க்கப்பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான தஸ்னீம் பானு தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை தெஹிவளை ஸம்ஸம் பவுண்டேசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காதி நீதிவான்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு ‘நீதியின் கண் சமத்துவமும் பாலின முன்னோக்கினை மேம்படுத்தலும்’ எனும் தலைப்பில் கருத்து வழங்குகையிலே மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்னீம் பானு இவ்வாறு குறிப்பிட்டார்.
இப்பயிற்சிப் பட்டறையை இலங்கை நீதிபதிகளின் மன்றமும், நீதிச் சேவை ஆணைக்குழுவும் , காதி நீதிவான்களின் போரமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்னீம் பானு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், காதி நீதிபதிகள் எழுத்தில், சட்டத்தில் கூறப்பட்டுள்ளவைகளை சரியாக அமுல்படுத்த வேண்டும். விசாரணைகள் முழுமையாக நடாத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
காதிநீதிபதிகள் உரிய வார்த்தைப் பிரயோகங்களைக் கையாள வேண்டும். தூசன வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும். வழக்காளிகளை அல்லது பிரதிவாதிகளை அவர்களது உறவினர்களை தங்கள் வீடுகளில் சந்திப்பது முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
உண்மையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பில்லை. சட்டம் அநீதியாக எதுவும் கூறவில்லை. ஆனால் காதிநீதிபதிகள் தான் சில வேளைகளில் அநீதியாக பிரயோகம் செய்கிறோம். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைக் காப்பாற்றிக் கொள்வது காதிநீதிபதிகளின் கடமையாகும். எமது சமூகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் கணிசமான அளவு காணப்படுகின்றன. பலதார மணம் செய்து கொண்டுள்ளவர்கள் மனைவியரை சமமாக நடத்துவதும் பராமரிப்பதும் கட்டாயமாகும். இதனையே குர்ஆனும் தெரிவிக்கிறது என்றார். முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவருமான ஏ.டப்ளியு.ஏ. சலாம் உரை நிகழ்த்துகையில், ‘எமது நாட்டில் காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என பெண்கள் அமைப்புகள் சில கோரிக்கை முன்வைத்துள்ளன. போராட்டங்களும் நடத்தியுள்ளன. இந்நிலையில் காதிநீதிமன்றங்களில் நீதி மட்டும் தான் நடக்கிறது என்று எப்போது நாம் உணர வைக்கிறோமோ அப்போது இந்தக் கோஷங்கள் இல்லாமலாகிவிடும்’ என்றார்.
நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மேல் நீதிமன்ற நீதிபதியும், இலங்கை நீதிபதிகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளருமான லக்மல் விக்கிரமசூரிய, காதிகள் மேன்முறையீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். – Vidivelli